நம் முன்னோர்கள் ஒவ்வொன்றும் ஒரு காரணம் வைத்திருப்பார்கள். தினசரி காலை கண் விழித்தவுடன் கோலம் போடுவதில் துவங்கி அன்றைய நாள் முழுக்க நாம் செய்யும் ஒவ்வொரு காரியங்களுக்குப் பின்னாலும் பல்வேறு அறிவியல் உண்மைகள் ஒளிந்திருக்கிறது. அவ்வாறு நாம் வீட்டில் பின்பற்றப்படும் சாஸ்திரங்களுக்கும், நமது பழக்கவழக்கங்களுக்கும் எப்படி அறிவியலுடன் பொருந்திப் போகிறது என்பதைப் பார்ப்போம்..
நகத்தினைக் கடித்தால் உருவாகும் தரித்திரம்
நம்மில் பலருக்கு நகம் கடிக்கும் பழக்கம் உண்டு. சிலர் ஆழ்ந்த சிந்தனையில் இருக்கும் போது கை தானாவே வாய்க்குள் சென்று விடும். அவ்வாறு நகங்களைக் கடிக்கும் போது நகங்களில் உள்ள அழுக்குகள் நமது வயிற்றுக்குள் சென்று பல்வேறு நோய்களுக்கு வித்திடும். இதனாலேயே நகம் கடிப்பதால் தரித்திரம் உண்டாகும் என சொல்லி வைத்திருக்கின்றனர்.
பொழுது சாய்ந்த பின் குப்பைகளைக் கொட்டுவது
பொழுது சாய்ந்தவுடன் குப்பைகளைக் கொட்டினால் வீட்டிலிருக்கும் லட்சுமியும் போய்விடும் என்பது நம்பிக்கை. ஆனால் உண்மை அதுவல்ல. இரவு நேரங்களில் குப்பைகளைக் கொட்டும் போது நம்மை அறியாமல் குப்பையில் ஏதாவது ஒரு பொருளைத் தவற விட்டிருப்போம். ஆனால் பகலில் கொட்டும் போது நாம் எளிதாகக் கண்டுபிடித்து எடுத்து விடலாம். எனவேதான் இரவு குப்பைகளைக் கொட்டக் கூடாது என்று சொல்லி வைத்திருக்கிறார்கள்.
இரவில் கீரை சாப்பிடக் கூடாது
இரவு நேரத்தில் கீரை சாப்பிடுவது எமனை அழைப்பதற்குச் சமம் என்று கூறி வைத்திருக்கின்றனர். ஏனெனில் இரவு நேரங்களில் கீரை சார்ந்த உணவுகள் எளிதில் ஜீரணம் ஆகாது. இதனால் உடல் நலக் கோளாறுகள் ஏற்படும். எனவே இரவு நேரங்களில் கீரை சாப்பிடக் கூடாது என அறிவிப்பதற்காகவே எமனை அழைப்பதற்குச் சமம் என்று பயமுறுத்தி வைத்திருக்கிறார்கள்.
தலைவிரி கோலமாக எப்பொழுதும் இருக்கக் கூடாது
வீட்டில் பெண்கள் தலைவிரி கோலமாக இருந்தால் உணவு சமைக்கும் போது எளிதில் முடி அதில் விழும். இதனால் உணவுப் பதார்த்தங்கள் அசுத்தம் அடையும். மேலும் மற்றவர்களையும் முகம் சுளிக்க வைக்கும். எனவே தலைவிரி கோலமாக இருக்கக் கூடாது என்று சொல்கிறார்கள்.
வீட்டில் முருங்கை மரம் வளர்ப்பது
முருங்கையின் அனைத்துப் பாகங்களும் இரும்புச் சத்து மிக்கவை. மனித உடலுக்கு உறுதியைத் தரும் முருங்கை அடிப்படையில் எளிதில் முறியும் திறன் கொண்டது. லேசாகக் காற்று ஓங்கி அடித்தால் கூட மரம் முறிந்து விடும். மேலும் முருங்கை மரத்தில் அதிக அளவு கம்பளிப் பூச்சிகளும் ஏறும். எனவே தான் வீட்டில் முருங்கை மரம் வளர்க்கக் கூடாது எனக் கூறுகின்றனர்.
இதுபோல பல விஷயங்கள் கொட்டிக் கிடக்கின்றன. தமிழன் ஒவ்வொன்றிலும் கடவுளை இணைத்துக் கூறும் போது மக்கள் பயபக்தியுடன் கடைப்பிடிப்பார்கள் என்பதாலேயே அதனை சாஸ்திரங்களுடன் தொடர்புபடுத்திக் கூறுகின்றனர்.