முருகனின் அருள் பெற நாம் தினமும் கந்த சஷ்டி கவசத்தைப் படிக்க வேண்டும். இப்படி தினமும் படிப்பதால் நம் உடலில் நேர்மறை ஆற்றல் பரவி சுறுசுறுப்பு அதிகரிக்கும். அதனால் நம் செயல்பாடுகள் அனைத்தும் சிறப்பாக இருக்கும்.
கந்த சஷ்டி கவசம் படிப்பதால் நம் உடலில் உள்ள ஒவ்வொரு பாகங்களையும் ஒவ்வொரு வேல் காக்குமாறும் பிரார்த்திக்கின்றோம். உதாரணத்திற்கு ஒரு சில வரிகளைப் பார்ப்போம்.
கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க விதிர்செவி இரண்டும் வேலினைக் காக்க, நாசிகள் இரண்டும் நல்வேல் காக்க, பேசிய வாய்தனை பெருவேல் காக்க, கன்னம் இரண்டும் கருணைவேல் காக்க, என்னிளம் கழுத்தை இனியவேல் காக்க என்று இப்படியே உடலில் ஒரு அங்கம் விடாமல் வேல் காக்க என்று கூறப்பட்டுள்ளது.
இப்படி நாம் இதைப் படிக்கும்போது ஒவ்வொரு அங்கத்தைப் பற்றிச் சொல்லும்போது நம் மனது அந்த அங்கத்தில் நிலைகொள்கிறது. மனது தியானிக்கும் போது நம் மூளையானது ஒரு சில வினாடிகள் அந்த அங்கத்தையே கூர்ந்து கவனிக்கிறது. இப்படி மூளை கவனிக்கும்போது அந்தப் பாகத்திற்குரிய செயல்பாடுகள் சிறப்படைகிறது.
கந்த சஷ்டி கவசத்தை தினமும் சொல்லும்போது நம் உடல் முழுவதும் மூளையின் செயல்பாடுகள் அதிகரிப்பதால் இது ஒரு பாதுகாப்பு கவசமாகவே மாறுகிறது. அதனால் தான் இதற்கு கந்த சஷ்டி கவசம் என்று பெயர் வந்தது.
இதில் நவகோள் மகிழ்ந்து நன்மை அளித்திடும் என்று ஒரு வரி உண்டு. கிரகங்களின் மாற்றத்தால் நம் உடலில் ரத்த ஓட்டம் மற்றும் வாத பித்த மாற்றங்கள் ஏற்படுகிறது. உடலில் ஏற்படும் எந்த ஒரு மாற்றத்திற்கும் இவற்றில் ஏற்படும் மாற்றமே அடிப்படை.
தினசரி நம் மூளையானது உற்றுநோக்கித் தன்னைத் தானே சரிசெய்யும் வேலையைச் செய்து கொண்டே இருப்பதால் நவகோள்களால் ஏற்படும் உடல் மாறுபாடு கூட பாதிப்பை ஏற்படுத்தாது என்பதே இதன் சாராம்சம். அதனால் தான் நவகோள்கள் மகிழ்ந்து நன்மை அளித்திடும் என்றனர். முருகனின் பெயரால் நவகிரகங்களும் நமக்குத் துணை நிற்பார்கள்.
எதிரிகளின் மனம் மாறி தோழமை உண்டாகும். வீட்டைப் பிடித்து இருக்கும் தரித்திரம், பீடை, செய்வினைகள் அடியோடு அழிந்து விடும். வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்திகள் நீங்கி நேர்மறை சக்தியான லட்சுமி கடாட்சம், குழந்தை பாக்கியம், மனநிம்மதி உண்டாகும்.
தினமும் கந்த சஷ்டி கவசம் பாடுவோருக்கு மதிப்பும், மரியாதையும் உண்டாகும். மனமும் உடலும் வலிமை அதிகரிப்பதோடு முகமும் வசீகரமாகும்.
முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமைகளில் 3 முறை கந்த சஷ்டி கவசம் படிப்பதால் நினைத்த காரியங்கள் நிறைவேறும். முருகனுக்கு உகந்த நாள்களான சஷ்டி விரதம் மேற்கொள்ளும் தினத்திலும், முருகனுக்கு விரதமிருந்து கந்த சஷ்டி கவசத்தைப் படிப்பதாலும், முருகனுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுவதாலும், நடக்காது என்று நினைத்த காரியங்களும் கூட நிறைவேறும்.