வளமான வாழ்க்கைக்கு நாக சதுர்த்தி விரதம்!

By Staff

Published:

பாம்பு புற்றினை வழிபடுவதை காலம் காலமாக நமது முன்னோர்கள் பின்பற்றி வந்து உள்ளனர். பாம்பினை அம்மன் அம்சமாகக் கருதி வணங்குவர். மாரியம்மன் கோவில்களில் உள்ள புற்றினை ‘புற்று மாரியம்மன்’ என்று கூறுவது வழக்கம். பெரும்பாலும் அம்மன் கோவில்ககளில் பாம்பு காவல் தெய்வமாகவும் இருக்கின்றது. அம்பிகையின் குடையாக பாம்பு இருப்பதாகவும் கூறுவர். பொதுவாக வெள்ளிக்கிழமை, செவ்வாய்க்கிழமை நாட்களில் புற்றினை வழிபடுவது வழக்கம். அதுவும் ஆடிச்செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் புற்றினை வழிபட்டு வந்தால் நினைத்த காரியம் கைக்கூடும்.

ஆடி மாதத்தில் நாக சதுர்த்தி விரதம் மேற்கொண்டால் குழந்தை பாக்கியத் தடை நீங்கும். குறிப்பாக சுய ஜாதகத்தில் நாக தோஷம், ராகு கேது தோஷம் இருப்பவர்கள் புற்று மாரியம்மன் கோவில்களில் புற்றினை வழிபட்டு வந்தால் தடைகள் அகலும். பல வருடம் ஆகியும் எவ்வித சுப காரியங்கள் இல்லத்தில் நடைபெறவில்லையே என்று கவலை படுபவர்களுக்கு இந்த ஆடி மாதத்தில் வருகின்ற நாக சதுர்த்தி விரதம் மேற்கொண்டால் நினைத்தது நிறைவேறும்.

வளர்பிறை சதுர்த்தியான ‘நாகசதுர்த்தி’ 2018, ஆகஸ்ட் 14-ம் தேதி வருகின்றது. அன்றைய தினத்தில் அரச மரத்தடியில் உள்ள நாகர் சிலைகளுக்கு பால் தெளித்து, பூஜை செய்வது ‘நாகதோஷம் பூஜை’ என்று அழைக்கப்படுகின்றது. இதனை, செய்து வந்தால் நாக தோஷம் நிவர்த்தியாவதுடன் இல்லத்தில் சுபம் உண்டாகும்.

அன்றைய தினத்தில் புற்று கோவிலுக்கு வரும் கன்னி பெண்களுக்கும், சுமங்கலி பெண்களுக்கும் ஏதேனும் வளையல், பழம், கேசரி அல்லது பொங்கல், ரவிக்கை தானமாக கொடுக்கலாம். உங்கள் வசதிக்கேற்ப தானத்தை செய்யலாம்.

தெரிந்தோ,தெரியாமலோ பூர்வ ஜென்மத்தில் பாம்பினை கொல்வது, அடிப்பது, பிற ஜீவ ராசிகளை துன்பப்படுத்துவது எல்லாம் தோஷத்தை உண்டாக்கும். நமது பித்ருக்கள் அதனை செய்தாலும் வாரிசுகள் அந்த பாவத்தை அனுபவிக்க நேரிடும். இந்த நாக தோஷம், ராகு-கேது தோஷத்தால் பலரது இல்லத்தில் தேவையில்லாத சண்டை, சச்சரவு, திருமண தடை, குழந்தை பாக்கியத் தடை, திறமை இருந்தும் சரியான வாய்ப்புகள் அல்லது வேலை கிடைக்காதது, தொழிலில் விருத்தி ஆகாமல் இருப்பது போன்ற எண்ணற்ற தடைகள் இருக்கும். அவர்கள் இந்த ஆடி மாதத்தில் வளர்பிறை பஞ்சமி அன்று பூஜை செய்தால் கிரக தோஷம் நீங்கி வளமான வாழ்க்கை உண்டாகும்.

Leave a Comment