மனம் போல் மாங்கல்யம் அமைய ஆடி வெள்ளி!
ஆடி மாதம் என்றாலே தெய்வீக மாதமாக கருதப்படுகிறது. இம்மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு மாவிளக்கு போடுதல், கூழ் வார்த்தல் போன்ற சம்பிரதாயங்கள் வரிசையாக அணிவகுக்கத் தொடங்கி விடும். ஆடி வெள்ளிக்கிழமை அம்மன் கோவில்களில் விசேஷமாக கொண்டாடப்படுகின்றது. திருமணம் ஆகாத பெண்கள் காமாட்சியை வணங்கினால் திருமணத் தடை நீங்கி தங்கள் மனம் போல் வாழ்க்கை துணை அமையும்.
ஆடி வெள்ளி பூஜை:
அதிகாலை நீராடி, தூய ஆடை அணிந்து, மஞ்சளில் பிள்ளையார் பிடித்து, மலர்களால் பூஜிக்க வேண்டும். இல்லத்தில் எந்த பூஜை தொடங்கினாலும் முதலில் பிள்ளையாரை வழிபட்டு வந்தால் தடைகள் அகற்றி நமது பூஜைகளை தடையின்றி செய்வதற்கு உதவி புரிவார். பிள்ளையாருக்கு பிடித்தமான பூக்களில் சிவப்பு செம்பருத்தி, அரளி, அறுகு கொண்டு பூஜை செய்யலாம். வாழையிலை மீது நெல்லைப் பரப்பி அதன் மீது கொழுக்கட்டை, சுண்டல் வைத்து வழிபட்டு வந்தால் செல்வ வளம் பெருகும்.
ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமையன்று குத்துவிளக்கினை அலங்கரித்து, தீபத்தில் அம்மனை ஆவாஹனம் செய்து, அம்மனுக்கு உரிய பாடல்கள் அல்லது ஸ்லோகங்களை சொல்லி வரலாம். நல்ல வரன் அமைய, குடும்பத்தில் ஒற்றுமை நிலவ, பிரிந்தவர்கள் ஒன்று சேர ஆடி வெள்ளிக்கிழமையில் லலிதா சஹஸ்ரநாமம் அர்ச்சனை செய்து வந்தால் சுபம் உண்டாகும். நினைத்த காரியம் கைக்கூட ஆடி வெள்ளிக்கிழமையன்று கன்யா பூஜை, நாக தோஷ பூஜை, ராகு கால பூஜை செய்யலாம்.
நாகதோஷம் நீங்க:
ஆடி வெள்ளிக்கிழமையில் அரச மரத்தடியில் உள்ள நாகர் சிலைகளுக்கு பால் தெளித்து, பூஜை செய்யலாம். அங்கு வரும் இளம் கன்னி பெண்களுக்கும், சுமங்கலி பெண்களுக்கும் உங்களால் இயன்ற எண்ணிக்கையில் வளையல்களோ, துணி அல்லது பிரசாதம் ஏதேனும் கொடுக்கலாம். உங்கள் வசதிக்கேற்ப தானம் செய்யலாம். இதனால் நாகதோஷம் நிவர்த்தியாவதுடன் குடும்பமும் சுபிட்சமாக இருக்கும்.