தமிழகத்தில் நீர்நிலைப் பகுதியில் இந்த ஆடிப் பெருக்கு பண்டிகையை விசேஷமாக கொண்டாடுவார்கள். காவேரி ஆறு பாயும் பகுதிகளில் அந்த நதிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இப்பண்டிகை கொண்டாடப்படுகின்றது. ‘ஆடிப் பட்டம் தேடி விதை’ என்னும் சொல் வழக்கு உண்டு. இதற்கு அர்த்தம் என்னவென்றால் ஆடி மாதம் பிறந்தவுடன் விவசாயிகள் விளைச்சலுக்கு உண்டான விதைகளை மண்ணில் தூவி விடுவார்கள். ஆடி மாதத்தில் ஏரி, குளம், ஆறு போன்றவற்றிற்க்கு நீர் வரத்து அதிகமாகி, பயிர்களுக்குத் தேவையான பாசனம் கிடைக்கும். மண் வளமாக செழித்தால், பயிர் செழிக்கும். பயிர் செழித்தால் மனிதனின் வாழ்வாதாரம் வளமுடன் இருக்கும்.
வீட்டில் சக்கரைப் பொங்கல், சித்ரான்னம் செய்து தங்களுடன் எடுத்து சென்று காவிரி தாய்க்கு விளக்கு ஏற்றி, ஆற்றில் வண்ண மலர்களை தூவி, காவிரி அன்னையை வரவேற்பார்கள். தாங்கள் எடுத்து வந்த சித்ரான்னம் என்று சொல்லப்படும் பல வகை உணவுகளை காவிரி தாய்க்கு நைவேத்தியம் செய்வார்கள். பின்பு உற்றார், உறவினர்கள், தங்களின் குடும்பத்துடன் அந்த உணவை உட்கொண்டு மகிழ்ச்சியாக இல்லத்திற்கு திரும்புவார்கள்.
அன்றைய தினம் பெண்கள் புதிய சரடு மாற்றிக் கொள்வது போன்ற சடங்குகளை செய்வார்கள். இன்றைய நாட்களில் சமுத்திரம் இருக்கும் ஊர்களில் வசிப்பவர்கள் கடற்கரையில் இந்த வழிபாட்டினை செய்து வருகின்றார்கள். இன்றைய காலகட்டத்தில் வேலை நிமித்தம் காரணமாக பல பெயர் நகரத்திற்கு இடம்பெயர்ந்து விட்டார்கள்.அவர்கள் காவிரிக்கு செல்லும் வாய்ப்பு இல்லை என்ற பட்சத்தில் வசிக்கும் இடத்தில் இருந்து இந்த பூஜையை செய்து கொள்ளலாம்.
ஆடிப் பெருக்கு பூஜையை வீட்டில் எவ்வாறு செய்வது?
வீட்டிலேயே காவிரி அன்னைக்கு எவ்வாறு பூஜை செய்வது என்பதை விரிவாக காணலாம். பூஜை அறையில் ஒரு பலகை வைத்து, அதற்கு மேல் ஒரு செம்மண் கோலம் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். ஒரு பித்தளை செம்பில் சந்தனம், குங்குமம் தடவி அதனை காவிரி அன்னையாக பாவித்து அதில் நீரை நிரப்பவும். அந்த நிரப்பிய நீரில் அரைத்த மஞ்சளை கரைத்து கொள்ளுங்கள். தாம்பாள தட்டில் சந்தனம், குங்குமம் தடவி, மலர்களை தூவி, ரவிக்கை துணி, கருகமணி, காதோலை சமர்ப்பிக்கவும். புனித நீர்நிலைகளை மனதார வேண்டிக் கொள்ளுங்கள். பால், பழம், வெற்றிலை பாக்கு, தேங்காய், இனிப்பு, மற்றும் சித்ரான்னங்களை நைவேத்தியம் செய்து வணங்கி, கற்பூரம் காட்டி நமஸ்கரித்து கொள்ளவும். தீர்த்தத்தை கால்களில் படாமல் செடி, மரத்தில் ஊற்ற வேண்டும். புண்ணிய நதிகளை தியானித்து, மனதார வணங்கி வர தேவைகள் பூர்த்தியாகும்.