தீமைகளை அழிக்கவும், பக்தர்களை காக்கவும் விஷ்ணு பகவான் மாதிரி புதுப்புது அவதாரங்களை சிவன் எடுப்பதில்லை. தனது வடிவத்தை மட்டுமே சிவன் மாற்றிக்கொள்வதோடு சரி. உருவ, அருவ,அருவுருவம் என மொத்தம் 64 வடிவங்களை சிவன் எடுத்திருக்கிறார். அதில் 5 வடிவங்கள் மிகமுக்கியமானது. அவை, வக்ர மூர்த்தியான பைரவர், சாந்த மூர்த்தியான தட்சிணாமூர்த்தி, வசீகர மூர்த்தியான பிட்சாடணர், ஆனந்த மூர்த்தியான நடராசர், கருணா மூர்த்தியான சோமாஸ்கந்தர் ஆகும். இவைகள் இல்லாமல், அரூப வடிவமான லிங்கம்தான் நாம் பெரும்பாலும் வணங்கக்கூடியது. லிங்கத்திருமேனிக்கு பிறகு நாம் அதிகம் வணங்குவது நடராஜ வடிவத்தில் இருக்கும் சிவரூபமாகும்.
அணுத்துகள்கள் அசைந்ததால் உலகம் உருவானதென விஞ்ஞானம் சொல்கிறது. உலகம் சரிவர இயங்க, அணுத்துகள்கள் சதாசர்வக்காலமும் அசைந்துக்கொண்டே இருக்கவேண்டும். மெல்லிய அசைவில் தொடங்கி, நளினமாய் நகர்ந்து, வேகமாய் நகர்ந்து, முடிவினில் ஈசனை அடையும். இதையே, நடராஜரின் ஆடல் நமக்கு உணர்த்துகிறது. அந்த அசைவினை உணர்த்தும்படி வலதுக்காலை ஊன்றி இடதுக்காலை உயர்த்தி, வலதுக்கையால் அருளும், நாட்டிய பாவனையில் இருக்கும் சிவவடிவத்தின் பெயரே நடராசர். நாட்டிய கலைக்கே ராஜாவென அர்த்தம் சொல்கிறது இந்த பெயர். அபஸ்மராவை (முயலகன்) வதம் செய்த கோலத்தில் காட்சியளித்தாலும், மிகவும் பாசமிக்கவர். இசை, நடனத்தில் கைதேர்ந்தவர் இவர். படிப்பறிவில்லாதவர்களின் அறியாமையை ஆடல், பாடல்களினால் போக்கமுடியும் என்பதை நடராஜ அவதாரம் வலியுறுத்துகிறது.
நடராஜரின் தோற்றம்..
நடராஜர் தலையில் இருக்கும் கங்கை, ஆண்டவனை ஆராதித்தால் அறியாமை நீங்கும், சிவன் கையிலிருக்கும் டமருகம்ன்ற உடுக்கை, ஓம் என்ற ஒலியே உலகம் உருவாக காரணம். சிவன் உடம்பிலிருக்கும் அரவம், முக்காலமும் காலகாலனிடம் அடக்கம், உயர்த்திய கால்கள் அனைத்து உயிர்களிடத்திலும் இறைவன் இருப்பது. அபயவரத முத்திரை கரங்கள், எல்லாவற்றிற்கும் துணையாய் நானிருக்கிறேன். பயம் கொள்ளாதே!. பத்ம பீடம், இறைவனை சரணடைந்தவர்களுக்கு மறுபிறவி இல்லை. திருவாசி, மீண்டும், மீண்டும் பிறப்பெடுப்பது தெய்வத்தின் செயலே. பிறைநிலா, வாழ்க்கையில் ஏற்றம், இறக்கம், வளர்தல், தேய்தல் இயற்கையே! சிவன் கையிலிருக்கும் அக்னி, தன் படைப்பே ஆனாலும் தீயவைகளை அழிப்பதும் கடவுளின் வேலை, சிவனின் திருவடியில் இருக்கும் அபஸ்மரா என்னும் முயலகன், ஆணவம் கொள்ளக்கூடாது. இவை அனைத்தையுமே நடராஜர் தோற்றம் நமக்கு உணர்த்துகிறது.
சிவபெருமான் நடனமாடி சிறப்பித்த ஐந்து இடங்களை பஞ்சசபைகள், ஐம்பெரும் சபைகள் என்றும் அழைக்கப்படுகிறது. அவை, பொற்சபை, இரஜித சபை (வெள்ளி சபை), இரத்தின சபை, தாமிர சபை, சித்திர சபை ஆகியவையே ஐந்து சபைகள் என்றழைக்கப்படுது. இவைகள் முறையே சிதம்பரம், மதுரை, திருவாலங்காடு, திருநெல்வேலி, குற்றாலம் ஆகிய இடங்களில் உள்ள சிவாலயங்களில் அமைந்துள்ளது. மார்கழி திருவாதிரை திருவிழா, ஆனி திருமஞ்சனம் உள்ளிட்ட ஆறு நாட்கள் நடராசருக்கு திருவிழா எடுத்து வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இனி ஐந்து சபைகளைப் பற்றிப் பார்ப்போம்.
பொற்சபை – திருமூலட்டநாதர் திருக்கோவில்.
கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரத்தில் பொற்சபை இருக்கிறது. இக்கோவில். இங்கு இறைவன், தனது நடனத்தை பதஞ்சலி மற்றும் வியாக்கிரபாத முனிவருக்கு, உமையம்மை சமேதராக காட்சியளித்தார். நடராஜர் நடனமாடிய இந்த இடம் பொற்சபை, பொன்னம்பலம், கனக சபை, பொன் மன்றம்ன்னு பலவாறா சொல்லப்படுது. இங்கு இறைவன் வலது காலை ஊன்றி, இடது காலைத் தூக்கி நான்கு கரங்களுடன் நடனமாடுகிறார். இவ்விடத்தில் இறைவனின் திருநடனமானது ஆனந்த தாண்டவம்ன்னு சொல்லப்படுது. இங்கு இறைவன் பொன்னால் ஆன கூரையின் கீழ் தனது திருநடனத்தைக் காட்டியருளுகிறார். இத்தலத்தில் இறைவன் பொன்னம்பலவாணன், நடராஜன், கனக சபாபதி, அம்பலவாணன், ஞானக்கூத்தன் ன்னு அழைக்கப்படுகிறார். ஆடல்வள்ளானை சிறப்பிக்கும் வகையில் இங்கு வருசந்தோறும் நாட்டியாஞ்சலி விழா நடத்தப்படுகிறது.
இரஜித(வெள்ளி) சபை – மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில்…
வெள்ளிசபை மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் இருக்கிறது. இங்கு, இறைவன் தனது பக்தனின் வேண்டுகோளுக்கிணங்கி வலது இடது காலை ஊன்றி வலது காலை தூக்கி நடனம் ஆடிய தலம். இவ்விடம் வெள்ளியம்பலம், வெள்ளி சபை, வெள்ளி மன்றம்ன்னுலாம் அழைக்கப்படுகிறது. இங்கு இறைவன் மாணிக்க நான்கு கரங்களுடன் தேவர்கள் இசைக்கருவிகள் இசைக்க திருநடனம் புரிகின்றார். முதலில் இறைவன் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணத்திற்கு வந்த பதஞ்சலி மற்றும் வியாக்கிரத பாதர் ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க தில்லையில் ஆடிய நடனத்தை வெள்ளியம்பலத்தில் ராஜசேகரப் பாண்டியனின் வேண்டுகோளினை ஏற்று கால் மாற்றி நடனம் ஆடினார். இங்கு இறைவனின் தாண்டவம் சந்தியா தாண்டவம், ஞானசுந்தர தாண்டவம் என்றழைக்கப்படுகிறது. இங்கு இறைவன் சொக்கநாதர், சோமசுந்தரர் என்ற பெயர்களிலும், அம்மை மீனாட்சி, அங்கையற்கண்ணி என்ற பெயர்களிலும் அருள்புரிகின்றனர்.
இரத்தின சபை – வடராண்யேஸ்வரர் திருக்கோவில்..
இக்கோவில் திருவள்ளூர் மாவட்டத்தில் திருவாலங்காட்டில் அமைந்துள்ளது. இவ்விடத்தில் சிவபெருமான் ஆலங்காட்டின் தலைவியான காளியை நடனத்தில் வெற்றி பெற்றார். இவ்விடம் இரத்தின அம்பலம், இரத்தின சபை, மணி மன்றம்லாம் அழைக்கப்படுகிறது. இங்கு இறைவன் எட்டு கரங்களுடன் வலது காலை, ஊன்றி இடது காலால் காதணியை மாட்ட ஆயத்தமாவதுப்போல் காட்சியளிக்கின்றார். காளியுடனான நடனப்போட்டியில் காதிலிருந்து விழுந்த காதணியை இறைவன் தனது இடதுக்காலால் எடுத்து இடதுக்காதில் மாட்டி காளியை வெற்றிக்கொண்டார். இங்கு இறைவன் ஆடிய ஆட்டத்துக்கு அனுக்கிரக தாண்டவம், ஊர்த்துவ தாண்டவமென பெயர். இறைவனால் அம்மையே என்றழைக்கப்பட்ட காரைக்கால் அம்மையார் தன் தலையால் நடந்து வந்து ஊர்த்துவ தாண்டவ மூர்த்தியின் திருவடியில் அமர்ந்து இறைவனின் திருநடனத்தை கண்டுகளித்த இடம் இது. இங்குதான், அம்மை முக்தியும் பெற்றார். இங்கு இறைவன் வடராண்யேஸ்வரர் என்ற பெயரிலும், அம்மை வண்டார்குழலி என்ற பெயரிலும் அருள்புரிகின்றனர்.
தாமிர சபை- நெல்லையப்பர் ஆலயம்
இக்கோவில், திருநெல்வேலியில் இருக்கிறது. இங்கு இறைவன் தாமிரத்தினாலான அம்பலத்தில் நான்கு கரங்களுடன் இடதுக்காலை ஊன்றி வலதுக்காலைத் தூக்கி திருநடனம் புரிகின்றார். இச்சபையில் இறைவனின் திருத்தாண்டவம் முனித்திருத்தாண்டவம், காளிகா தாண்டவம் என்றழைக்கப்படுது. இறைவன் நடனம் புரியும் இந்த இடமானது தாமிர சபை, தாமிர அம்பலம், தாமிர மன்றம்ன்னுலாம் அழைக்கப்படுது. இங்கு இறைவன் சந்தன சபாபதி ன்னு அழைக்கப்படுகிறார். இங்கு இறைவன், நெல்லையப்பர் என்ற பெயரிலும், அம்மை காந்திமதி என்ற பெயரிலும் அருள்புரிகிறார்கள்.
சித்திர சபை – குற்றாலநாதர் திருக்கோவில்…
இக்கோவில் திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்தில் இருக்கிறது. இங்கு இறைவன் யமனை வென்று, சிவகாமி அம்மையை இடத்தில் கொண்டு மார்க்கண்டேயனுக்கு அருளிய மூர்த்தியாக சித்திர வடிவில் காட்சியருளுகிறார். இச்சபையில் இறைவன் புரிந்த திருநடனத்துக்கு திரிபுரதாண்டவம்ன்னு பேரு. இத்தாண்டவத்தை கண்டுகளித்த பிரம்மன், தானே இறைவனின் திருநடனத்தை ஓவிய வடிவில் வடித்ததாகக் கருதப்படுகிறது. இறைவன் நடனம் புரியும் இந்த இடமானது சித்திர சபை, சித்திர அம்பலம், சித்திர மன்றம்ன்னு அழைக்கப்படுது. சித்திர சபையின் கூரையானது செப்புத்தகடுகளால் ஆனது. இங்கு இறைவன் குற்றாலநாதர் எனவும், அம்மை குழல்வாய்மொழி ன்னும் அழைக்கப்படுகின்றனர்.
தத்துவம் ஆடச்
சதாசிவம் தானாடச்
சித்தமும் ஆடச்
சிவசத்தி தானாட
வைத்த சராசரம் ஆட
மறையாட அத்தனும் ஆடினான்
ஆனந்தக் கூத்தே!
என உலக உயிர்கள் உய்யும் பொருட்டு, சதாசர்வக்காலமும் ஆடிக்கொண்டும், தனது திருநடனத்தினை பக்தர்கள் துயர் தீர்க்கும் ஆடல்நாயகனின் நடனங்களை ஐந்து சபைகளிலும் கண்டு பெரும்பேற்றினைப் பெறுவோம்.
ஓம் நமச்சிவாய!! நாதந்தாள் வாழ்க!