தாட்சாயணி அவதாரத்தில் தட்சனின் மகளாய் அவதரித்து, தந்தயின் சொல்பேச்சை மீறி சிவனை கைப்பிடித்ததால் கடுன்கோபத்துக்கு ஆளானாள். தான் நடத்தும் மகா யாகத்துக்கு சிவனுக்கு முறையாய் அழைப்பு அனுப்பாமலும், சிவனுக்குரிய அவிர்பாகத்தையும் தராததால் தந்தையை கண்டிக்க யாகத்துக்கு வந்த தாட்சாயனி, தந்தையை சமாதானப்படுத்த முடியாமல்… சிவனுக்கு தன் உயிரையே அவிர்பாகமாய் அளிக்க, யாக குண்டத்தில் விழுந்து உயிரை விட்டாள்.
அம்பிகையின் உயிரற்ற உடலைத் தூக்கிக்கொண்டு ஈரேழுலகத்தையும் சுற்றி வந்ததை காண சகியாத மகா விஷ்ணு தன் சுதர்ஷண சக்கரத்தை ஏவி தாட்சாயணி உடலை துண்டாடினார். அப்படி அறுந்து விழுந்த அம்பிகையின் உடல் பாகங்கள் சக்தி பீடங்களாய் முளைத்தன. துண்டாய் விழுந்த அம்பிகையின் வலக்கையின் புஜம் விழுந்த இடம் மேல்மலையனூர் என்று கூறப்படுகிறது. இதையே தண்டகாரண்யம் என்றும் சொல்கின்றனர். அப்படி அம்மனின் உடல் உறுப்புகள் விழுந்த இடங்கள் அனைத்துமே மகிமை பொருந்தியதோடு அல்லாமல் அம்பிகையில் உடலே பீஜாக்ஷரங்களால் ஆனது என்பதால் ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு சக்தி பீடமும் உருவானது. அங்காளியே இப்படிக் கோயில் கொண்டாள் என்றும் இந்த மேல் மலையனூரே ஆதி சக்தி பீடம் என்றும் கூறுகின்றனர்.
சண்டி, முண்டி, வீரி, வேதாளி, சாமுண்டி, பைரவி, பத்ரகாளி, எண்டோளி, தாரகாரி, அமைச்சி, அமைச்சாரி, பெரியாயி, ஆயி, மகாமாயி, அங்காயி, மாகாளி, திரிசூலி, காமாட்சி, மீனாக்ஷி, அருளாட்சி, அம்பிகை, விசாலாக்ஷி, அகிலாண்டேசுவரி என்ற பெயரில் எண்ணற்ற சக்திபீட தேவதையாக அன்னை விளங்குகின்றாள். ஈசனைப் போலவே தனக்கும் ஐந்து முகங்கள் இருப்பதால் தானும் பெரியவன் என்று வீண் கர்வம் கொண்ட பிரம்மாவின் ஐந்தாவது சிரசை ஈசன் கிள்ளி எறிய சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக்கொண்டது. கிள்ளி எறிந்த சிரசின் மண்டை ஓடு ஈசன் கையை விட்டு அகலாமல் கையிலேயே ஒட்டிக்கொண்டது. ஒட்டிக்கொண்ட மண்டை ஓட்டில் அம்பிகையானவள் பிச்சை இட்டு அந்த பிச்சைய ஏற்கும்போது எந்த ஊரில் மண்டை ஓடு அகலுமோ அங்கே பிரம்மஹத்தி தோஷமும் நீங்கும் என்று புரிந்த ஈசன் ஒவ்வொரு ஊராக ஒவ்வொரு சுடுகாட்டுக்கும் சென்று கபாலத்தில் பிச்சை வாங்கிச் சுற்றி அலைந்து திரிந்து கடைசியாக இந்த தண்டகாரண்யம் என்னும் மேல்மலையனூருக்கு வருகிறான்.
அன்னையானவள் சுவை மிகுந்த உணவை தயாரித்து சிவனுக்கு பிச்சை இடத்தயரானாள். முதல் கவளத்தை சிவனின் கையிலிருந்த மண்டை ஓடு உண்டது. இரண்டாவது கவளத்தை வேண்டுமென்றே தவறவிட்டாள் அன்னை. உணவின் ருசியால் ஈர்க்கப்பட்ட மண்டை ஓடு உணவை சுவைக்க வேண்டி சிவனின் கையிலிருந்து நழுவியது.. மீண்டும் அக்கபாலம் இறைவனின் கைகளில் ஏறாமல் இருக்க அன்னையானவள் தன் கையிலிருந்த மிச்ச உணவை வானை நோக்கி இறைத்தாள். கபாலமும் உணவுக்காக வான் நோக்கி சென்றது. அப்படி வான் நோக்கி பறந்த கபாலத்தை விஸ்வரூபமெடுத்து தன் கால்களால் பூமியில் அழுத்திகொண்டாள்.
அப்படி சிவனின் பிரம்மஹத்தி தோசம் நீங்கிய நாள் மாசி மாத அமாவாசை தினம். அதன் நினைவாகவே இன்றும் மயான கொள்ளை நடத்தப்படுது. சிவன் கையிலிருந்து கீழே இறங்கிய கபாலம் சூரையைச் சாப்பிடும்போது சிவன் அங்கிருந்து தாண்டித் தாண்டி ஓடி, தாண்டவேஸ்வரர் ஆக அந்த ஊரிலேயே அமர்ந்தார். அதன் பின்னரே அவர் அங்கிருந்து சிதம்பரம் சென்று ஸ்படிக லிங்கமாக அமர்ந்தார் என அங்காளம்மன் கோயில் வரலாறு கூறுகிறது.
மாசி மாதம் சிவராத்திரிக்கு மறுநாள் அமாவாசை. அங்காளியானவள் அன்று தன்னுடைய பூரண வலுவோடும், பலத்தோடும் இருப்பாள். .இப்படிபட்ட சிறப்பு வாய்ந்த அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கு மிகவும் முக்கியமான ஒரு விசேஷம் மயான கொள்ளை. மாசி அமாவாசையில் அங்காளம்மனுக்கு மயான கொள்ளை ஒரு தனி சிறப்பு.