பாடல்
கற்றானைக் கங்கைவார் சடையான் றன்னைக்
காவிரிசூழ் வலஞ்சுழியுங் கருதி னானை
அற்றார்க்கும் அலந்தார்க்கும் அருள்செய் வானை
ஆரூரும் புகுவானை அறிந்தோ மன்றே
மற்றாருந் தன்னொப்பா ரில்லா தானை
வானவர்க ளெப்பொழுதும் வணங்கி ஏத்தப்
பெற்றானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே
விளக்கம்..
எல்லாம் வல்லவன், கங்கையைத் தாங்கிய நீண்ட சடையன். ஒரு பக்கத்தில் காவிரியால் சூழப்பட்ட திருவலஞ்சுழி என்ற திருத்தலத்தை உகந்தருளியிருப்பவன். பொருள் அற்றவருக்கும், தாங்குவார் இல்லாது வருந்துபவருக்கும், அருளுபவன். தன்னைத் தவிர வேறு எவரும் தனக்கு ஒப்பில்லாதவன். தேவர்களால் எப்பொழுதும் வணங்கிப் போற்றப்படுபவன். திருவாரூரிலும் உகந்து தங்கியிருப்பவன் ஆகிய எம்பெருமானை நாம் எல்லாருக்கும் மேலானவன் என்று அறிந்தோம். ஆதலின் அந்தப் பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.
.