பொதுவாக சாலை ஓரத்தில் எந்தப் பொருள் கிடந்தாலும் அதை எடுக்கக்கூடாது என்பார்கள். அந்த கர்மா நம்முடன் ஒட்டிக்கொள்ளும் என்று பயமுறுத்துவர். அதுவே பணமாக இருந்தால் எடுக்காமல் இருப்பார்களா? கொஞ்சம் யோசித்துப் பார்க்க வேண்டிய விஷயம் தான்.
அந்த வகையில் சித்தர்களிடம் இருந்து கிடைக்கும் பணம் நம் கர்மாவை அழித்து புதிய பாதைக்குக் கொண்டு செல்லும். அப்படி ஒரு சக்திவாய்ந்த சித்தரைப் பற்றி இப்போது பார்க்கலாம்.
சித்தரின் வரலாறு
பெயர் அப்பா சாமி சித்தர். இவரது தந்தை பெயர் கருதுபோனவர். தாயார் வள்ளியம்மை. இந்தத் தம்பதியினருக்கு 2 மகன்கள். மூத்தவர் தான் அப்பாசாமி. இவரது நிஜப்பெயர் அப்பாத்துரை. காலப்போக்கில் பக்தர்கள் அப்பாசாமி என்றே அழைத்துள்ளனர்.
மிகுந்த செல்வ செழிப்புடன் அக்காலத்தில் இவர்களது குடும்பம் இருந்தது. இவரது தந்தைக்கு 8 ஊரில் சொத்து இருந்ததாம். ஆனால் அப்பாசாமிக்குப் பணத்தின் மீது பற்றே இல்லை. மாறாக, குடும்பத்தை விட்டு விலகி தனியாக பிரம்மச்சரியத்தைக் கடைபிடித்துள்ளாராம். இவரது சித்து விளையாட்டுகள் ஏராளம்.
சித்து விளையாட்டுகள்
இந்த ஊருக்கு ஒதுக்குப்புறமான ஒரு அடர்ந்த காட்டில் தான் சித்தர் சிறு குடில் அமைத்து தனியாக வாழ்ந்துள்ளார்.
நவகண்ட யோகம்
அப்போது அங்கு சில திருடர்கள் வந்து குடிசையில் ஏதாவது கிடைக்குமா என்று பார்த்துள்ளார்கள். அப்போது சித்தர் நவகண்ட யோகத்தில் இருந்துள்ளார்.
அதாவது உடலை 9 பாகங்களாக அதாவது கை, கால், தலை, வயிறு, இடுப்பு என தனித்தனியாகப் பிரிந்த நிலையில் தவத்தில் இருந்துள்ளார். அதைக் கண்டதும் என்ன செய்வதென அறியாத திருடர்கள் ஊருக்குள் சென்று நடந்ததை மக்களிடம் சொல்லியுள்ளனர். அவர்களும் வந்து பார்க்கையில் சித்தர் ஜீவனோடு தான் இருந்துள்ளார். அதன்பிறகு தான் இவர் சித்தர் என ஊர் மக்கள் வணங்க ஆரம்பித்தனர்.
அக்காலத்தில் இந்த ஊரில் இருக்கும் நெல் மூட்டைகளை மாட்டு வண்டியில் ஏற்றிக் கொண்டு கல்லணையில் விற்று வருவது வழக்கம். அந்த சமயத்தில் கல்லணை சென்றால் அங்கு அப்பாசாமி சித்தர் இருந்துள்ளார். அதே நேரத்தில் இங்கேயும் சித்தர் இருந்துள்ளார் என்று அந்த ஊர்மக்கள் தெரிவித்தனர்.
தொழுநோயாளிகள் குணமான அதிசயம்
அவர் வாழ்ந்த காலத்தில் இந்த ஊரில் தொழுநோயாளிகள் அதிகமாக இருந்துள்ளனர். அதன்பிறகு அப்பாசாமி சித்தர் தான் அந்நோயை முழுவதுமாகக் குணப்படுத்தினாராம்.
இந்த ஜீவசமாதியின் சிறப்பு என்னவென்றால் இவரை நம்பி வரும் சித்தர்களை வெறும் கையோடு அனுப்புவதில்லை. மக்கள் என்ன நினைக்கிறார்களோ அது நல்லபடியாக நடக்கிறது. தனது இறுதிநாளை சரியாகக் குறிப்பிட்டு இந்த நாளில் தான் முக்தி அடைவேன் என்றார். அதன்படி, 1927 பங்குனி உத்திரம் அன்று முக்தி அடைந்துள்ளார்.
பணம் கொடுக்கும் சித்தர்
சித்தரிடம் வேண்டும்போது பணம் கிடைக்கும் என்கின்றனர். கஷ்டத்தோடு வருபவர்களுக்கு இங்கு பணம் கிடைக்கிறது. அவர்கள் உள்ளன்போடு வந்து வழிபடுகையில் அவர்களுக்குக் காசு கிடைத்து விடுகிறது.
ஒரு சில பக்தர்கள் கனவில் அப்பாசாமி சித்தர் வந்து காட்சி அளிப்பார். அவர் எங்கிருந்தாலும் இந்த சமாதிக்குத் தேடி வந்து விடகின்றனர். இரவு நேரத்திலும் கோவில் கதவைப் பூட்ட வேண்டாம் என்று சித்தர் சொல்லியுள்ளனர். வெளியூர்க்காரர்களுக்கு அவர்களது கனவில் அட்ரஸ் கொடுத்து இங்கு வரவைக்கிறார் சித்தர். அன்று முதல் இந்தக் கோவிலுக்குப் பூட்டே இல்லை.
நாகமாகவும், காகமாகவும், பைரவராகவும், தேரையாகவும் காட்சி அளிப்பதாகவும் கூறப்படுகிறது. அதேபோல இரவில் இங்கு வந்து நகையுடன் படுத்து உறங்கிய மூதாட்டி ஒருவருக்கு அப்பாசாமி சித்தர் நாகமாகக் காவல் காத்துள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.
அப்பாசாமி சித்தர் இங்கு 2 புளிய மரங்களை நட்டு வைத்தார். இந்த புளியமரத்தில் இருந்து ஒரு குச்சியை நட்டு வைத்தால் அது முளைத்து விடும். இரு மரங்களில் ஒன்று பூக்கும். ஒன்று பூக்காது. இரண்டும் பூத்தால் அது இயற்கை சீற்றத்திற்கு அறிகுறி. சுனாமி வரும்போது இப்படித்தான் நடந்தது. சுனாமிக்குப் பிறகு நல்லா பூத்துக் குலுங்கியது. அப்போது தான் கொரோனா வந்தது.
எப்படி செல்வது?
இவரது ஜீவசமாதிக்குச் செல்ல வேண்டுமானால் திருச்சியில் இருந்து தஞ்சாவூர் செல்லும் பைபாஸ் வழியில் செஞ்சிப்பட்டி என்ற பேருந்து நிறுத்தத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து திருக்காட்டுப்பள்ளிக்கு செல்லும் வழியில் விண்ணமங்கலம் ஓரத்தூர் ரோடு என்ற பேருந்து நிறுத்தத்தில் இறங்க வேண்டும். அதன் எதிரில் தான் இவரது ஜீவசமாதி அமைந்துள்ளது.