சிவாலயத்தில் மொத்தம் ஐந்து நந்திகள் பிரதிஷ்டை செய்யவேண்டும் என்பது ஆகம விதி. சுவாமி அருகில் இருப்பது கைலாச நந்தி, அடுத்து இருப்பது விஷ்ணு நந்தி. மூன்றாவது தெற்கு நோக்கி மான் மழுவுடன் இருப்பது அதிகார நந்தி. நான்காவது சாமான்ய நந்தி. ஐந்தாவது மஹா நந்தி. இந்த மகாநந்திக்குதான் பிரதோஷ சிறப்பு பூஜை நடத்துவார்கள். பெரும்பாலும், மிகப்பெரிய கோயில்களில் மட்டும் ஐந்து நந்திகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும்.நந்தி என்ற பெயர் சிவபெருமானுடையது. ஆனால், தமக்கு அருகில் இருந்து பணி செய்பவர்க்கு தமது திருநாமத்தை மனமுவந்து வழங்கி சிறப்பித்துள்ளார் எம்பெருமான்.
போக நந்தி:
ஒருசமயம் பார்வதியும் பரமேஸ்வரனும் பூவுலகம் செல்ல எண்ணினர். அப்போது இந்திரன், நந்தி வாகனமாகி அவர்களை பூவுலகம் அழைத்துச் சென்றான். போகநந்தி எனப்படும் அபூர்வ நந்தி கோவிலுக்கு வெளியே அமைந்துள்ளது.
பிரம்ம நந்தி:
பிரம்மன் படைப்புத் தொழிலை ஆரம்பிக்கும்முன் சிவனிடம் உபதேசம் பெற விரும்பினார். சிவன் உயிர்களைப் பாதுகாக்க அடிக்கடி உலாப் போவதால் ஓரிடத்தில் இருந்து உபதேசம் பெற பிரம்மனால் இயலவில்லை. எனவே, நந்தி உருவுடன் சிவனைச் சுமந்து சென்றபடி உபதேசம் பெற்றுக் கொண்டார். பிரம்ம நந்தி எனப்படும் இது சுதைச் சிற்பமாக பிராகார மண்டபத்தில் இருக்கும்.
ஆன்ம நந்தி:
பிரதோஷ கால பூஜையேற்கும் நந்திதான் ஆன்ம நந்தி. இது கொடிமரம் அருகே இருக்கும். எல்லா ஆன்மாக்களிலும் இறைவன் இருப்பதால், அந்த ஆன்மாக்களின் வடிவாக ஆன்ம நந்தி உள்ளது.
மால்விடை:
மால் என்றால் மகாவிஷ்ணு; விடை என்றால் எருது. திரிபுராந்தகர் என்ற மூன்று அசுரர்களை அழிக்க சிவன் செல்லும்போது, மகாவிஷ்ணு நந்தியாகி அவரை சுமந்து சென்றார். மால்விடை எனப்படும் இது கொடி மரத்திற்கும் மகாமண்டபத்துக்கும் இடையில் அமைந்திருக்கும்.
தரும நந்தி:
இது கர்ப்பக் கிரகத்தில் சிவலிங்கத் திருமேனிக்கு மிக அருகில் இருக்கும். ஊழி முடிவில் உலக உயிர்கள் எல்லாம் உமாபதிக்குள் அடங்கிவிடும். அப்போது தர்மம் மட்டும் நிலைக்கும். அதுவே ரிஷபமாகிறது. இது தரும நந்தி எனப்படும்.