இந்து மதத்தில் முழு முதற் கடவுளாக கருதப்படுவது விநாயகப் பெருமான். எந்த ஒரு பூஜை, புனஸ்காரம், ஹோமம், தொழில் தொடங்குதல், நிலம் வாங்குதல், வீடுகிரஹபிரவேசம் எதுவாக இருந்தாலும் விநாயகப் பெருமானை வழிபடாமல் எந்த ஒரு பூஜையை தொடங்கினாலும் அது முழு பயன் பெறாது என கூறுவர்
பிடித்து வைத்தால் பிள்ளையார் என்பது போல வடிவமைக்கவும் வணங்கவும் எளிமையாக இருப்பவர் விநாயக பெருமான். எளிமையாக இருந்தாலும் பெரும் கீர்த்தியைக் கொண்ட கடவுள் விநாயகப் பெருமான். தன் பக்தர்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து அருள் புரிபவர். அவரைப்போலவே சங்கடஹர சதுர்த்தி விரதமும் வழிபாடும் எளிமையான ஒன்றுதான். நம் வாழ்வில் வருகின்ற சகல சங்கடங்களையும் நீக்கும் வல்லமை இந்த சங்கடஹர சதுர்த்தி விரதத்திற்கு உண்டு.
முதன் முதலில் சதுர்த்தி விரதம் கடைபிடித்த பிறகு தான் கிருத்திகை, ஏகாதசி, பௌர்ணமி போன்ற மற்ற விரதங்களை மேற்கொள்ள வேண்டும் என்பது சாஸ்திர நியதி ஆகும். பௌர்ணமி முடிந்து நான்காம் நாள் சதுர்த்தி திதி நிகழும். தன்னை பார்த்து சிரித்த சந்திரனை ஒளியில்லாமல் போகும்படி சபித்தார் விநாயகர். கடும் தவத்திற்கு பிறகு ஒரு சதுர்த்தி தினத்தில் சந்திரனின் சாபத்தை நீக்கினார் கணபதி. எனவே இந்த சதுர்த்தி விரதம் விசேஷமாக கருதப்படுகிறது.
சங்கடஹர சதுர்த்தி அன்று காலையில் குளித்துவிட்டு அருகில் உள்ள ஆலயத்திற்கு சென்று பிள்ளையாரை 11 முறை வலம் வந்து வழிபடுதல் வேண்டும். அருகம்புல் சாற்றி விநாயகருக்கு அர்ச்சனை செய்தால் மிகவும் சிறப்பு. கோவிலுக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்ததும் ஒரு ஆழாக்கு பச்சரிசியை ஊறவைத்து அதனுடன் சிறிது வெல்லத்தூளும் வாழைப்பழமும் சேர்த்து பிசைந்து பசுவுக்கு கொடுத்தால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். விநாயகரோடு பசுவையும் வழிபாடும் செய்வது கூடுதல் நன்மையை தரும்.
இது மட்டும் இல்லாமல் வீட்டில் விளக்கேற்றி விநாயகரை மனதார நினைத்து வழிபடலாம். வீட்டிலேயே மோதகம், சித்ரன்னங்கள், பால்,தேன், கொய்யா, வாழை, நாவல், கொழுக்கட்டை, சுண்டல் என தயாரித்து விநாயகருக்கு நைவேத்தியம் செய்து வழிபடலாம்.
விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்கு பல விரத நாட்கள் இருந்தாலும் நமது கஷ்டங்கள் அனைத்தையும் போக்கக்கூடிய சங்கடங்களை தீர்க்கக்கூடிய சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்து வழிபட்டால் வாழ்வில் சகல நன்மைகளும் கிடைக்கும் என்பது ஐதீகம்.