பாடல்
குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்,
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி,
கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கைமேல்,
வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய்,
மைத்தடங் கண்ணினாய்! நீயுன் மணாளனை,
எத்தனை போதும் துயிலெழ வொட்டாய்காண்,
எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்,
தத்துவ மன்று தகவேலோ ரெம்பாவாய்..
பொருள்..
நான்கு பக்கங்களிலும் குத்துவிளக்குகள் மெல்லிய ஒளியைப் பரப்பிக் கொண்டிருக்கும் அறையில், யானையின் தந்தங்களால் செய்யப்பட்ட கால்களை உடைய கட்டிலின்மேல், மென்மையும் குளிர்ச்சியும் பொருந்தியதும், தூய வெண்மை நிறங்கொண்டதும், நறுமணம் நிறைந்த பஞ்சு மெத்தையின்மேல் கிருஷ்ணன் படுத்துறங்குகிறான். அன்றுதான் மலர்ந்த கொத்து கொத்தான மலர்களைச் சரங்களாக்கி கரியமேகம் போன்ற கூந்தலில் சூடிக்கொண்டிருக்கும் நப்பின்னையின் மார்பில் தலைவைத்து உறங்குகிறானாம் கிருஷ்ணன். அப்படி உறங்கிக் கொண்டிருக்கும் கிருஷ்ணன் எழுந்திருக்கவில்லை என்றாலும் வாய் திறந்து ஒரு வார்த்தையாவது பேசக்கூடாதா?!வென்ற ஆதங்கம் ஆண்டாளுக்கு. எனவே, ‘கிருஷ்ணா, நீ எழுந்து வராவிட்டாலும் பரவாயில்லை; வாய் திறந்து ஒரு வார்த்தையாவது பேசக்கூடாதா?’ என கேட்கிறாள்.
விளக்கம்..
கிருஷ்ணனுக்கும் ஆண்டாள் அழைப்பது கேட்டு வாய் திறந்து பதில் சொல்ல ஆசைதான். ஆனா பக்கத்திலிருக்கும் மனைவியை மீறி அவனால் என்ன சொல்லமுடியும்?! நப்பின்னை புரண்டு படுக்கும் வேளையிலாவது கையை அசைத்து ஜாடை காட்டுவென ஆண்டாள் இறைஞ்சியும், கிருஷ்ணன் ஜாடை காட்டாததால் நப்பின்னையிடமே கிருஷ்ணனை அனுப்ப சொல்லி கேட்கலாமென ஆண்டாள் முடிவெடுப்பதாய் அமைந்திருக்கு இப்பாடல்.
திருப்பாவை பாடலும், விளக்கமும் தொடரும்..