ஆடி மாதம் முழுக்கவே பண்டிகைக்கு பஞ்சம் இருக்காது. ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடிப்பூரம், ஆடித்தபசு, ஆடிப்பெருக்கு, ஆடிக்கிருத்திகை, ஆடி அமாவாசை, ஆடிப்பௌர்ணமி… என பட்டியல் நீண்டுக்கிட்டே போகும்.
ஆடி அமாவாசை
ஆடி அமாவாசையை பித்ருக்கள் தினமாகக் கொண்டாட வேண்டும். அன்றைய தினம் மறைந்த நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் நிறைவேற்றினால், ஆறு மாதம் தர்ப்பணம் செய்த பலன் கிடைக்கும். தாய்- தந்தையை இழந்தவர்கள் அமாவாசை தினங்களில் வழிபாடு செய்வது சிறப்பான ஒன்றாகும். தட்சிணாயன காலத்தில் வரும் முதல் அமாவாசை என்பதால், ஆடி அமாவாசை சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இத்தனை சிறப்பு வாய்ந்த ஆடி அமாவாசை ஆடி மாதம் 15-ம் தேதி ( 31 ஜூலை 2019) அன்று ஆடி அமாவாசை வருகின்றது.
ஆடி கிருத்திகை
கார்த்திகை நட்சத்திரம், முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரம். மாதம்தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பானது. ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் கூடுதல் சிறப்பு கொண்டது. உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தங்கள் பிரார்த்தனைகளையும், நேர்த்திக்கடன்களையும் செலுத்த முக்கிய நாளாக இந்த நாளை தேர்வு செய்கிறார்கள். ஆடி மாதத்தில் இருந்து தொடங்கி ஆறு மாதங்கள் கார்த்திகை விரதம் இருந்து தை மாதக் கார்த்திகையில் விரதத்தை முடித்தால், சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆடிக்கிருத்திகை ஆடி மாதம் 10-ம் தேதி ( 26 ஜூலை 2019) அன்று வருகிறது.
ஆடி செவ்வாய்.. ஆடி வெள்ளி..
‘ஆடி செவ்வாய் தேடிக்குளி’ என்பார்கள். ஆடி மாதம் வரும் செவ்வாய்க்கிழமை தோறும் சுமங்கலிப் பெண்கள் மஞ்சள் பூசிக் குளிப்பதால், மாங்கல்ய பலம் கூடும் என்பதே இந்த பழமொழி கூறும் தத்துவம். அதேபோன்று ஆடி மாதச் செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் பலரும், ‘அவ்வையார் விரதம்’ கடைப்பிடிப்பார்கள். கணவனின் ஆயுள் நீடிக்கவும், குழந்தை வரம் வேண்டியும், குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கவும், கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமண வரம் கிடைக்கவும் இந்த விரத வழிபாட்டின் மூலம் பிரார்த்தித்துக் கொள்வார்கள். .
ஆடி பெருக்கு
ஆடி மாதத்தில்தான் தென்மேற்குப் பருவ மழை வலுவடைந்து, காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் புது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வரும். அப்படி ஆடியில் காவிரி பெருக்கெடுத்து வருவதைத்தான் மக்கள் ‘ஆடிப்பெருக்கு’ என கொண்டாடுகிறார்கள். இந்த விழாவானது ஆடி மாதம் 18-ந் தேதி கொண்டாடப்படும். காவிரி கரையோரங்களில் இந்த விழா களைகட்டும். காவிரி அன்னைக்கு சீர் செய்து வணங்குவது வழக்கமாக உள்ளது. தாமிரபரணி கரையிலும் ஆடிப்பெருக்கு உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. சுமங்கலி பெண்கள் தாலிச்சரடு மாற்றி கட்டிக்கொள்வார்கள். ஆடி மாதம் 18-ம் தேதி (03 ஆகஸ்டு 2019) அன்று ஆடி 18 வருகிறது.
நாக பஞ்சமி…கருட பஞ்சமி..
ஆடி மாதம் 20-ம் நாள் ஆகஸ்ட் 5-ம் தேதி ஆடி மாத வளர்பிறையில் நாக பஞ்சமி, கருட பஞ்சமி அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த ஆண்டு நாக பஞ்சமி நாளில் நாக தோஷம் உள்ளவர்கள் ஆலயங்களில் நாக பிரதிஷ்டை செய்து புற்றுக்கு பால் ஊற்றி வழிபடுவார்கள். அதனால் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண பாக்கியம் கைக்கூடும். குழந்தை இல்லாதவர்களுக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
வரலட்சுமி விரதம்: ஆடி மாதம் 24-ம் தேதி (9-ம் ஆகஸ்ட் 2019) அன்று வரலட்சுமி விரதம் கொண்டாடப்படுகிறது. சுமங்கலி பெண்கள் கணவனின் அன்பை பெறவும், அவனின் நீண்ட ஆயுளுக்காகவும் நோன்பு இருப்பர். அன்றைய தினம் பெண்கள் அன்னதானம் செய்வது மிகவும் நல்லது. தான தருமங்கள் செய்ய வேண்டும்.
ஆடி வாஸ்து பூஜை: ஆடி மாதம் 11-ம் தேதி ( 27 ஜூலை 2019) அன்று வாஸ்து பூஜை தினம் வருகிறது. ஆடி மாதத்தில் வாஸ்து பூஜை செய்து தை மாதத்தில் கிரகப்பிரவேசம் செய்வது மிக நல்லது. ஏனென்றால் தட்சிணாயணத்தில் வீடு கட்ட ஆரம்பித்து உத்திராயணத்தில் வேலையை முடிப்பது என்பது மிகுந்த நன்மையை அளிக்கும்.
ஆடி அறுதி: ஆடி மாதம் 32- ம் தேதி ( 17 ஆகஸ்ட் 2019) அன்று ஆடி அறுதி நாளாகும். ஆடி மாதத்தின் கடைசி நாளையே அறுதி நாள்ன்னு சொல்லப்படுகிறது. அன்றைய தினம்தான் விவசாயிகள் நாற்று நடுவார்கள். ஆடியில் விதை விதைப்பதும், முடியும் போது நாற்று நடுவது வழக்கம். அடுத்த தினம் ஆவணி மாதம் பிறக்கும். பெண்கள் அருகில் உள்ள சிவன்கோவிலுக்கு சென்று வழிபட்டால் நினைத்தது நடக்கும்.