சர்வதேச வர்த்தக போர் வெடிக்கும் சூழலில், அமெரிக்காவின் தலைசிறந்த பொருளாதார நிபுணர் பேராசிரியர் ஜெஃப்ரி சாக்ஸ், டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் கொள்கைகள் குறித்து பேசியுள்ளார். இந்தியாவின் மீது விதிக்கப்பட்டுள்ள கடுமையான வர்த்தக வரிகள் அவர் கூறியபோது, ‘டிரம்ப்பின் வர்த்தகக் கொள்கை ‘முட்டாள்தனமானது’ மற்றும் ‘தற்காப்புக்கு எதிரானது’ என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட வரிகள் அமெரிக்காவின் வெளியுறவு கொள்கை நலன்களை தானே அழித்துக்கொள்வது என்றும், இந்த வரிகள் அமெரிக்காவின் தொழில்துறையை சர்வதேச அளவில் போட்டித்தன்மையற்றதாக ஆக்குகின்றன என்றும், உள்நாட்டுச் சந்தையில் சிறிது உற்பத்தி அதிகரிக்கலாம் என்றாலும், உலகப் பொருளாதாரத்தில் அமெரிக்கா பின்தங்கிவிடும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
டிரம்ப் இந்தியாவை மிரட்ட முயன்றாலும், அதில் அவரால் வெற்றி பெற முடியாது, மாறாக, டிரம்ப் தனது கொள்கைகளால் பிரிக்ஸ் நாடுகளை குறிப்பாக இந்தியா, ரஷ்யா மற்றும் சீனாவை நெருக்கமாக ஒன்றிணைக்கிறார்.
டிரம்ப்பின் வர்த்தக கொள்கைகள் இந்தியாவின் ஜவுளி, ஆபரணங்கள், பாதணிகள் மற்றும் கடல் உணவு ஏற்றுமதிகளை பாதித்திருப்பதாலும், இனிமேல் இந்தியா அமெரிக்காவின் தயவை எதிர்பார்த்து நிற்கக்கூடாது. ஏனெனில், அமெரிக்கா தனது வர்த்தக கொள்கையில் நிலையற்றதாகவும், பாதுகாப்புவாதமாகவும் உள்ளது. எனவே, இந்தியா தனது வர்த்தகத்தை உலகம் முழுவதும், குறிப்பாக தென்கிழக்கு ஆசியா, ஆப்பிரிக்கா, மேற்கு ஆசியா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளுடன் விரைவாக விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் பிரிக்ஸ் கூட்டணியை வலுப்படுத்துவதன் மூலம் இந்தியா தனது வர்த்தக இலக்குகளை அடைய முடியும். 2026-ஆம் ஆண்டில் பிரிக்ஸ் அமைப்பின் தலைமை பதவியை இந்தியா ஏற்கவுள்ளது, இது ஒரு நல்ல வாய்ப்பு என்றும் கூறினார்.
மேலும், இந்தியா பிராந்திய விரிவான பொருளாதார கூட்டாண்மை (RCEP) அமைப்பில் சேர வேண்டும் என்றும், தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா மற்றும் கிழக்காசியா ஆகியவை இணைந்து, அடுத்த கால் நூற்றாண்டுக்கு உலகின் பொருளாதார சக்தியாக மாறும் என்றும் ஜெஃப்ரி தெரிவித்தார்.
சீனாவுடன் உறவை மேம்படுத்துவது என்பது சர்ச்சைக்குரியது என்றாலும் இந்தியா சீனாவுடன் உள்ள எல்லைப் பிரச்சினைகளை தீர்த்துக்கொண்டு, வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரிக்க வேண்டும் என்றும், இரு நாடுகளும் அமெரிக்காவின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு சவாலாக மாற வேண்டும் என்றும் தெரிவித்தார்.
டிரம்ப் தனது கொள்கைகள் குறித்து பொய்யாக பெருமைப்படுவதாகவும், அவை போர்களை முடிவுக்கு கொண்டு வருகின்றன என்று நம்புவதாகவும், அமெரிக்க பொருளாதாரத்தை பாதிக்கவில்லை என்று கூறுவதாகவும் அவர் கூறினார்.
டிரம்ப் புத்திசாலியோ அல்லது அறிவு கொண்டவரோ இல்லை என்றும், அவர் கற்பனையில் வாழ்வது போல் தோன்றுகிறது என்றும் அமெரிக்காவின் தற்போதைய நிர்வாகம், “நிலையானதற்றது” மற்றும் “உண்மையற்றது” என்றும், நம்பகத்தன்மைக்கு இங்கு இடமில்லை என்றும் அவர் தெரிவித்தார். அமெரிக்காவின் தலைமை மோசமான நிலையில் உள்ளது என்றும், இந்தியா ஒரு பெரிய சக்தி என்பதால், அது எந்த ஒரு நாட்டையும் சார்ந்து இருக்காமல், உலகளாவிய பார்வையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
