சென்னையின் மிக முக்கியமான வணிக பகுதியான தியாகராய நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் கட்டப்பட்டு வரும் 1.2 கி.மீ நீளமுள்ள புதிய மேம்பாலம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ரூ. 131 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் இந்த இரும்பு பாலத்தின் பணிகள் 90% முடிந்துள்ள நிலையில், இது விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிஐடி நகர் பிரதான சாலையிலிருந்து தொடங்கி, தெற்கு உஸ்மான் சாலையின் தற்போதுள்ள மேம்பாலத்துடன் இணைக்கும் வகையில் இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மேம்பாலம் தி.நகர், சிஐடி நகர், மேட்லி சாலை சந்திப்பு மற்றும் உஸ்மான் சாலை சந்திப்பு ஆகிய பகுதிகளில் உள்ள போக்குவரத்து நெரிசலைக்கணிசமாக குறைக்கும்.
இந்த பாலம் பயன்பாட்டிற்கு வந்ததும், சிஐடி நகரிலிருந்து தெற்கு உஸ்மான் சாலைக்கு வெறும் இரண்டு நிமிடங்களில் சென்றடைய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தி.நகர் மற்றும் ஆர்.கே.நகர் மேம்பாலங்கள் மே மாதத்திற்குள் திறக்கப்படும் என சென்னை மாநகராட்சி உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும், பணிகள் இன்னும் சில காரணங்களால் தாமதமாகி வருவதாக தெரிகிறது.

டிசம்பர் 2024-ல் முடிவடையவிருந்த இந்தத் திட்டம், கட்டுமான பொருட்களின் பற்றாக்குறை மற்றும் கனமழை போன்ற காரணங்களால் தாமதமானது. தற்போது, செப்டம்பர் மாதத்திற்குள் பணிகள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மேம்பாலம், பொதுமக்கள் மற்றும் வணிகர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக, விழா காலங்களில் தி.நகரில் ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசலை இது குறைக்கும் என நம்பப்படுகிறது. சாலைகள் மூடப்பட்டுள்ளதால் ஏற்படும் சிரமங்கள், பாலம் திறக்கப்பட்டவுடன் நீங்கும் என மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
