போர் உள்பட பல்வேறு காரணங்களால் தற்போது ரஷ்யாவில் ஏற்பட்டுள்ள கடுமையான தொழிலாளர் பற்றாக்குறை, இந்திய திறமைகளுக்கு ஒரு புதிய வாய்ப்பு கதவை திறந்துவிட்டுள்ளது. குறிப்பாக, உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப துறைகளில் ஏற்பட்டுள்ள ஆள் பற்றாக்குறையை சமாளிக்க, ரஷ்யா தற்போது இந்தியாவிலிருந்து திறமையான தொழிலாளர்களை பணியமர்த்தும் திட்டத்தில் தீவிரமாக இறங்கியுள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கி வைத்துள்ளது.
ரஷ்யாவின் தேவை மற்றும் இந்தியாவின் திறன்
ரஷ்யாவில் இயந்திரவியல், தொழில்நுட்பம் போன்ற முக்கிய துறைகளில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்ப, ரஷ்யா நம்பகமான மற்றும் திறமையான பணியாளர்களை தேடி வருகிறது. இந்த தேவையை நிறைவேற்றுவதற்கான சிறந்த ஆதாரமாக இந்தியாவை ரஷ்யா கருதுகிறது. இந்திய இளைஞர்களின் தொழில்நுட்பத் திறன், பொறியியல் அறிவு மற்றும் கடுமையான உழைப்புக்கு உலகளாவிய அங்கீகாரம் இருப்பதால், இந்திய இளைஞர்கள் ரஷ்யாவுக்கு ஒரு மதிப்புமிக்க வளமாக உள்ளனர்.
அமெரிக்கா Vs ரஷ்யா: இந்தியர்களுக்கு எது சிறந்த தேர்வு?
அமெரிக்கா போன்ற நாடுகள், இந்திய பணியாளர்கள் உட்பட வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு கடுமையான விசா மற்றும் குடியேற்ற நிபந்தனைகளை விதித்து வருகின்றன. இந்த நிலையில், ரஷ்யா தனது வேலைவாய்ப்பு சந்தையை இந்தியர்களுக்கு திறந்துவிட்டுள்ளது. மேலும் இந்தியாவின் திறமையான பணியாளர்களுக்கு அமெரிக்காவை விட அதிக சம்பளம் தரவும் தயாராக இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. எனவேது, அமெரிக்கா போன்ற நாடுகளில் வாய்ப்புகளை தேடி அலையும் இந்திய இளைஞர்களுக்கு கைநிறைய சம்பளத்துடன் ரஷ்யாவில் வேலைகள் காத்து கொண்டிருக்கின்றன.
இந்தியா மற்றும் ரஷ்யா இடையிலான இந்த புதிய தொழிலாளர் உறவு, இரு நாடுகளின் பொருளாதாரங்களுக்கும் நன்மை பயக்கும். இருப்பினும், வெளிநாடுகளில் பணியாற்றி அந்த நாடுகளின் வளர்ச்சிக்காக பாடுபடுவதற்கு பதிலாக, இந்திய இளைஞர்கள் தங்கள் திறமைகளை இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்து, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்பதே பல பொருளாதார வல்லுநர்களின் விருப்பமாக உள்ளது.
இந்திய அரசும் உள்நாட்டிலேயே சிறந்த வேலைவாய்ப்புகளையும், ஆராய்ச்சி வாய்ப்புகளையும் உருவாக்கி, திறமையான பணியாளர்களை நாட்டிலேயே தக்கவைக்க வேண்டிய நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்க வேண்டும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
