சமீப காலமாக, வருமான வரித்துறையின் பெயரில் போலியான மின்னஞ்சல்கள் மற்றும் இணையதளங்கள் மூலம் நிதி மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இது குறித்து எச்சரித்துள்ள வருமான வரித் துறை, பொதுமக்கள் எவ்வாறு இந்த மோசடிகளில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
வருமான வரித் துறையின் முக்கிய எச்சரிக்கைகள்
தனிப்பட்ட தகவல்கள் கோரப்படாது: வருமான வரித் துறை ஒருபோதும் மின்னஞ்சல் மூலம் உங்களது தனிப்பட்ட தகவல்களையோ, கடன் அட்டை, வங்கி கணக்குகள் அல்லது நிதி விவரங்களையோ கேட்காது.
பின் நம்பர், கடவுச்சொல்:
உங்களின் PIN எண்கள், கடவுச்சொல் அல்லது வங்கிக் கணக்கு தொடர்பான எந்தவொரு ரகசிய தகவலையும் வருமான வரித்துறை மின்னஞ்சல் மூலம் கோரவே கோராது.
‘பிஷிங்’ மின்னஞ்சல்களை அடையாளம் காண்பது எப்படி?
‘பிஷிங்’ என்பது, போலியான மின்னஞ்சல்கள் மூலம் உங்களின் ரகசிய தகவல்களை திருடும் ஒரு வகை இணையவழி மோசடி ஆகும். வருமான வரித் துறையிடம் இருந்து வந்ததாக கூறி வரும் மின்னஞ்சல்களில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள, பின்வரும் வழிமுறைகளை பின்பற்றவும்:
சந்தேகத்திற்குரிய மின்னஞ்சல்களுக்கு ஒருபோதும் பதிலளிக்க வேண்டாம்.
இந்த மின்னஞ்சல்களுடன் வரும் எந்தவொரு இணைப்பையும் (attachments) திறக்க வேண்டாம். அவற்றில் உங்களின் கணினியை பாதிக்கும் தீம்பொருள் (malicious code) இருக்கலாம்.
மின்னஞ்சலில் உள்ள இணைப்புகளை (links) ஒருபோதும் ‘கிளிக்’ செய்யாதீர்கள். சில இணைப்புகள் உண்மையான தளத்தை போல் தோன்றினாலும், அவை வேறு தளத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும்.
சந்தேகத்திற்குரிய மின்னஞ்சலில் உள்ள இணைப்பை வெட்டி, உங்கள் உலாவியில் ஒட்டுவதை தவிர்க்கவும். அதற்கு பதிலாக, வருமான வரித் துறையின் இணையதள முகவரியை நேரடியாக உங்கள் உலாவியில் தட்டச்சு செய்யவும்.
உங்கள் கணினியில் எப்போதும் ஆன்டி-வைரஸ், ஆன்டி-ஸ்பைவேர் மற்றும் ஃபயர்வாலை நிறுவி, அவற்றை தொடர்ந்து புதுப்பித்துக்கொள்ளவும்.
வருமான வரித் துறை பெயரில் வரும் போலியான மின்னஞ்சல்கள் அல்லது இணையதளங்களை கண்டால், உடனடியாக அவற்றை புகாரளிக்க வேண்டும்.
சந்தேகத்திற்குரிய மின்னஞ்சலையோ அல்லது இணையதளத்தின் URL முகவரியையோ webmanager@incometax.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
அதன் நகலை incident@cert-in.org.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம்.
தகவலை புகாரளித்த பிறகு, அந்த மின்னஞ்சலை உங்கள் இன்பாக்ஸில் இருந்து நீக்கிவிடுவது நல்லது.
இந்த வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம், இணையவழி நிதி மோசடிகளில் இருந்து உங்களையும் உங்களின் நிதி தகவல்களையும் பாதுகாத்து கொள்ள முடியும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
