மஹாவிஷ்ணு அநீதியை அழிக்க தர்மத்தை நிலைநாட்ட பல அவதாரங்களை எடுத்தார். அவற்றில் மிகவும் சக்திவாய்ந்தது நரசிம்மர் அவதாரம் தான். இறைவன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான். அசைக்க முடியாத நம்பிக்கையுடனும் உண்மையான பக்தியோடும் அழைத்ததால், தூணிலிருந்து வெளிப்பட்டு பக்தனை காப்பாற்றுவான் என்று உலகிற்கு உணர்த்திய அவதாரம் நரசிம்ம அவதாரம்.
நரசிம்ம அவதாரம் என்றாலே மனித உடலும் சிங்க முகமும் கொண்ட உக்கிரமான தோற்றம் தான் அனைவரின் நினைவிற்கு வரும். ஆனால் உண்மையில் நரசிம்மர் கருணையின் வடிவம் அவர். பக்தர்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து அருள் புரிபவர் ஆவார்.
நரசிம்மர் 74 க்கும் அதிகமான ரூபங்களில் அருளக் கூடியவர். இதில் மிக முக்கியமானது 9 ரூபங்கள் ஆகும். உக்கிர நரசிம்மர், க்ரோதா நரசிம்மர், வீர நரசிம்மர், விலம்ப நரசிம்மர், கோப நரசிம்மர், யோக நரசிம்மர், அகோர நரசிம்மர், சுதர்சன நரசிம்மர், லட்சுமி நரசிம்மர் என்பன நரசிம்மரின் 9 முக்கி வடிவங்களாகும்.
இவற்றில் யோக நரசிம்மர் யோக நிலையிலும், லட்சுமி நரசிம்மர், மகாலட்சுமியை தனது மடியில் அமர வைத்த நிலையிலும் மட்டுமே சாந்த சொரூபமாக காட்சி அளிப்பார். மற்ற அனைத்திலும் உக்கிர வடிவமாகவே நரசிம்மர் காட்சி தருகிறார்.
நரசிம்ம வழிபாட்டில் முக்கியம் வாய்ந்த நரசிம்ம மந்திரத்தை வியாழக்கிழமையில், நரசிம்மர் முன் நெய் விளக்கேற்றி வைத்து, மஞ்சள் ஆடை அணிந்து, வடக்கு நோக்கி அமர்ந்து பாராயணம் செய்ய துவங்க வேண்டும். நரசிம்ம மந்திரம் பாராயணம் செய்பவர்களுக்கு பயம், கஷ்டங்கள் நீங்கும். எந்த சூழலிலும் மன அமைதியை இழக்க மாட்டார்கள். துன்பங்களும், கஷ்டங்களும் அவர்களை நெருங்காது. அமைதி, செல்வ வளம், நிம்மதி ஆகியவை கிடைக்கும். எதிரிகளை வெல்லும் ஆற்றல் பிறக்கும் என்பது நம்பிக்கை.