இன்று முதல் பான் கார்டு செல்லாதது முதல் புதிய வருமான வரி தாக்கல் வரை என்னென்ன மாற்றங்கள்? முழு விவரங்கள்..!

2026-ஆம் ஆண்டின் விடியல், இந்திய குடிமக்களின் நிதி சார்ந்த நடைமுறைகளில் பல்வேறு முக்கிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. புத்தாண்டு தினமான இன்று அதாவது ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு வந்துள்ள இந்த புதிய…

2026

2026-ஆம் ஆண்டின் விடியல், இந்திய குடிமக்களின் நிதி சார்ந்த நடைமுறைகளில் பல்வேறு முக்கிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. புத்தாண்டு தினமான இன்று அதாவது ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு வந்துள்ள இந்த புதிய விதிகள், சாமானிய மக்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை அனைவரது வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. குறிப்பாக, வருமான வரி தாக்கல், வங்கி பரிவர்த்தனைகள் மற்றும் வீட்டு பட்ஜெட் போன்ற அன்றாட செயல்பாடுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்வது அவசியமாகும்.

1. பான் மற்றும் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு நேற்றுடன் (டிசம்பர் 31, 2025) முடிவடைந்தது. இதுவரை இந்த இணைப்பை மேற்கொள்ளாதவர்களின் பான் கார்டுகள் இன்று முதல் ‘செயலிழந்ததாக’ கருதப்படும். இதன் விளைவாக, வங்கிக்கணக்கு தொடங்குதல், அதிக மதிப்பிலான பணப்பரிவர்த்தனைகள் மற்றும் பங்குச்சந்தை முதலீடுகள் போன்றவற்றில் சிக்கல்கள் ஏற்படும். மேலும், வருமான வரி ரீஃபண்ட் பெறுவதிலும் முட்டுக்கட்டை ஏற்படும் என்பதால், பாதிக்கப்பட்டவர்கள் ரூ.1,000 அபராதத்துடன் மீண்டும் இணைப்பதற்கான நடைமுறைகளை உடனடியாக மேற்கொள்வது அவசியமாகும்.

2. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இன்று ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாகும். 2026 ஜனவரி 1 முதல் 8-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ளன. இதன் மூலம் சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான ஊழியர்கள் மற்றும் பென்சன்தாரர்களின் அடிப்படை ஊதியத்தில் கணிசமான உயர்வு இருக்கும். பணவீக்கத்தை சமாளிக்கும் வகையில் அகவிலைப்படி மற்றும் இதர படிகளும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதால், அரசுப் பணியாளர்களின் வாங்கும் திறன் அதிகரித்து, சந்தையில் பணப்புழக்கம் மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3. வங்கிக்கடன் பெறுவோருக்கு முக்கிய மாற்றமாக, கிரெடிட் ஸ்கோர் (Credit Score) புதுப்பிக்கும் முறை வாராந்திர அடிப்படையில் மாற்றப்பட்டுள்ளது. இதுவரை 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே சிபில் போன்ற அமைப்புகள் தரவுகளை புதுப்பித்து வந்த நிலையில், இனி ஒவ்வொரு வாரமும் உங்கள் கடன் விவரங்கள் அப்டேட் செய்யப்படும். இதனால் நீங்கள் கடனை முறையாக திருப்பி செலுத்தினால் உங்கள் கடன் தகுதி விரைவாக உயரும்; அதே சமயம், தவணையை தவறவிட்டால் அதன் பாதிப்பு உடனடியாக உங்கள் ஸ்கோரில் பிரதிபலிக்கும் என்பதால் நிதி ஒழுக்கம் மிக அவசியமாகிறது.

4. புதிய நிதியாண்டிற்கான முன்னேற்பாடாக, வருமான வரித் துறையானது எளிமையாக்கப்பட்ட புதிய வருமான வரித்தாக்கல் படிவங்களை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய படிவங்களில் உங்கள் வருடாந்திர வங்கி பரிவர்த்தனைகள், வட்டி வருமானம் மற்றும் முக்கிய முதலீட்டு விவரங்கள் ஆகியவை முன்கூட்டியே நிரப்பப்பட்டிருக்கும் . இது வரி செலுத்துவோர் தங்களின் கணக்குகளை தாக்கல் செய்ய எடுக்கும் நேரத்தை குறைப்பதோடு, தரவு பிழைகளை தவிர்க்கவும் பெரிதும் உதவும். இதன் மூலம் வரி நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இறுதியாக, சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் இன்று மாற்றி அமைத்துள்ளன. புத்தாண்டு தினமான இன்று சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 110 ரூபாய் உயர்ந்து ரூ.1849.50 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.