ஒரு பெண் எப்போது பெண் ஆகிறாள் என்ற கேள்விக்கு பலர் பலவிதமா பதில் சொல்வாங்க. சக மனிதர்கள் முதற்கொண்டு அனைத்து உயிர்களிடத்திலும் ஆதரவு காட்டும் மாசில்லா அன்பு, உயிரை துச்சமென எண்ணி செய்யும் தியாகம், எதையும் செய்து முடிக்கும் ஆற்றல் இவை மூன்றுமே ஒரு பெண்ணை முழுமையடைய வைக்கிறது. எல்லா பெண்களிடத்திலும் புதைந்திருக்கும் உணார்வு. மகளாய், சகோதரியாய் தோழியாய், நலம் விரும்பியாய் காதலியாய், மனைவியாய், மருமகளாய், தாயாய், பாட்டியாய்… இப்படி அவள் ஏற்கும் வேடங்கள் எத்தனை எத்தனை?! உறவுமுறைகள் தாண்டியும் ஆசிரியை, செவிலி, துப்புறவு தொழிலாளி.. என அவள் எடுக்கும் அவதாரங்கள் பலப்பல. உணர்ச்சிகளின் கலவையாய், அதேநேரத்தில் திடமானதொரு படைப்பு பெண்ணைத் தவிர வேறு உன்று இவ்வுலகில் இல்லை.
உலகம் தோன்றிய காலத்திலிருந்து பெண்கள் சந்தித்த அடக்குமுறைகள், வன்முறைகள் பலப்பல. பெண்களுக்கு எதிரான மனப்போக்கு, அடக்குமுறைகள், சமமற்ற ஆணாதிக்க நீதியினை தாண்டி இன்றைய பெண்கள் கல்வி, கலை, இலக்கியம், தொழில்ன்னு வெற்றி பெற்று வருகிறார்கள். முழுமையான சம அந்தஸ்து கிடைக்கா விட்டாலும், கிடைத்த வாய்ப்புகளில் தங்களோட திறமைகளினால் சாதனை புரிஞ்சுக்கிட்டு வர்றாங்க. இட்லி சுட்டு விற்பது முதல் ராக்கெட் தயாரிப்புவரை பெண்களின் பங்களிப்பு உண்டு.
பெண்கள் சாதித்து வரும் இந்நாளில், மகளிர்தினம் பரவலாய் கொண்டாடப்படுது. பெண்களை முன்னிறுத்தி வெற்றிநடை போடும் வியாபார உலகம் இதிலேயும் காசு பார்க்க ஆரம்பித்ததின் விளைவே இந்த கொண்டாட்டங்கள். உண்மையில் பெண்கள் தினம் கோலாகலமாய் கொண்டாடப்பட வேண்டிய நாள் இல்லை. ஒவ்வொரு பெண்ணும் தன்னை பற்றியும், தன் குடும்பம், தான் சார்ந்த சமுதாயமென அனைத்தையும் யோசிக்க வேண்டிய நாள். 18-ம் நூற்றாண்டில் தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் ஆண்களை மட்டுமே பணியிலமர்த்த அனுமதி இருந்த காலக்கட்டம். பெண்கள் வீட்டு வேலை செய்யவும், குழந்தைகளை பராமரிக்கும் பொருட்டும் வீட்டிலேயே முடக்கி வைத்திருந்தனர். பெரும்பாலான பெண்களுக்கு ஆரம்ப கல்விகூட மறுக்கப்பட்டது. மருத்துவம், சுகாதாரமும்கூட என்னவென்று கூட அறியாத காலம் அது.
1857-ஆம் ஆண்டு நடந்த போரினால் ஏராளமான ஆண்கள் கொல்லப்பட்டதால் உலகின் பல நாடுகளில் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனை தவிர்க்க நிலக்கரிச் சுரங்கம், தொழிற்சாலைகளில் பெண்களுக்கு பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டது. அடுப்பூதும் பெண்களால் தொழிற்சாலைகளிலும் திறமையாக பணி செய்ய முடியும் என்பதை பெண்கள் நிரூபித்தனர். ஆண்களுக்கு சரிநிகராக பெண்களால் வேலை செய்யமுடியும் என ஆண் சமுதாயத்திற்கு அப்போதுதான் புரிய வந்தது.
பணியாற்ற பெண்களுக்கு வாய்ப்பு கிடைத்ததே தவிர, ஊதியத்தில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் பெருமளவு வித்தியாசம் காணப்பட்டது. இதனால் கிளர்ந்து எழுந்த பல பெண்கள் 1857-ஆம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி போராட்டத்தில் குதித்தனர். அதிர்ந்துபோன அதிகார வர்க்கம் அப்போராட்டத்தை அடக்க முயற்சித்தது. அடக்கி வைத்தால் அடங்கி போவது அடிமை இனம் என்று பெண் தொழிலாளர்கள் “சம உரிமை, சம ஊதியம், 8 மணி நேர வேலை” ஆகிய கோரிக்கைகளை முன் வைத்து 1907-ஆம் ஆண்டு மீண்டும் போராட்டத்தில் இறங்கினர். இதைத் தொடர்ந்து டென்மார்க் நாட்டில் பெண்கள் உரிமை மாநாடு நடைபெற்றது. இதில் பெண் தொழிலாளிகள், பல பெண்கள் அமைப்பு மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களுள் ஒருவரான கிளாரே செர்கிளே மார்ச் 8 உலக மகளிர் தினமாகக் கொண்டாடப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தார். ஆணாதிக்க சமூகத்தில் பல ஆண்டுகள் இந்த தீர்மானம் நிறைவேற்றப்படாமல் இருந்தது. இதையடுத்து 1920-ல் சோவியத் ரஷ்யாவில் நடந்த பெண்கள் போராட்டத்தில் அலெக்ஸாண்டாரா கெலுன்ரா-தான் மார்ச் 8-ம் தேதியை உலக மகளிர் தினம் என பிரகடனம் செய்தார். 1921-ஆம் ஆண்டு முதல் இன்றுவரை ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ம் தேதியை உலக மகளிர் தினமாக கொண்டாடி வருகின்றோம்.
19-ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் ஆரம்பித்த இந்த போராட்டங்கள் மெல்லமெல்ல உலகம் முழுவதும் பரவி பெண்களிடையே ஒரு குறிப்பிடத்தக்க அசாதாரண விழிப்புணர்வை ஏற்படுத்த ஆரம்பித்து, பெண்கள் தங்கள் பலம் என்னவென்று உணர தொடங்கினர். வேத காலங்களில் கார்கி, மைத்ரேயி போன்ற பெண் அறிவாளிகள் மெத்த படித்தவர்களாகவும், கணவர்களுக்கு சரிசமமாக எல்லா விஷயத்திலும் மேன்மையானவர்களாகவும் இருந்தனர் என உபநிடதம், ரிக் வேதம் மூலம் அறிய முடிகிறது. ஆனால் பிற்காலத்தில் பெண்களின் நிலை அப்படியே தலைகீழாக சரிய தொடங்கியது. சதி எனும் உடன்கட்டை ஏறுதல், சிறு வயதில் திருமணம் என்ற பிற்போக்குத்தனங்கள் தலை தூக்கின. சில பெண்கள் வயது வரும் முன்பே கணவன் உயிர் துறக்க நேரிட்ட சந்தர்ப்பங்களில் அந்த பெண்கள் ஆயுள் முழுவதும் விதவையாக சமூகத்தில் ஒதுக்கப்பட்டு வாழ நேர்ந்தது. கணவனோடு சேர்த்து உடன்கட்டை ஏற்றும் கொடுமையும் நடந்தது. பெண்ணை போகப்பொருளாய் கொண்டு தேவதாசி முறையும் வந்தது. இதையெல்லாம் எதிர்த்து களமிறங்கி, படிப்பறிவும், வேலைக்கு செல்லவும், சொத்தில் சம உரிமை என பெண்களுக்கான உரிமைகள் கொஞ்சம்கொஞ்சமாய் கிடைக்க ஆரம்பித்திருக்கின்றது.
ஆனாலும், பெண்களை போகப்பொருளாய் நினைத்து கற்பழிப்பு, காதல், உடல்ரீதியான துன்புறுத்துதல் மாதிரியான குற்றங்களும் அதிகரித்திருக்கின்றது. நதியை, மலையை, மடுவை, பாறையையெல்லாம் பெண் பெயர் சூட்டி ஒருபக்கம் அதீதமாய் கொண்டாடி தீர்த்து, இன்னொரு பக்கம் ஒருதலை காதலுக்காக ஆசிட் அடித்தல், கள்ளக்காதலுக்காக அருவா வெட்டு, குடிக்க பணம்தராததால் அடி உதைன்னு பெண்கள் படும்பாடு சொல்லி மாளாது. இதற்கு தீர்வு பிள்ளை வளர்ப்பின்போதே ஆண்பிள்ளைகளுக்கு பெண்ணை மதிக்க கற்றுக்கொடுக்கவேண்டும். அடுத்த வீட்டுக்கு போய் வாழவேண்டிய பெண் என கோலம் போட, சமைக்க, வீட்டை பராமரிக்க பெண்ணுக்கு சொல்லி தருவதுப்போல, அடுத்த வீட்டு பெண்ணை தன் வீட்டு பெண்ணாய் நினைத்து மதிப்பளிக்கனும்ன்னு ஆணுக்கும் சொல்லி தரவேண்டும். அது ஒன்றே இன்றை நிலைக்கு தீர்வாய் அமையும்.
நாளைய தினம் உலக மகளிர் தினம். அவர்களுக்கு வாழ்த்துச்சொல்லும் அதேவேளையில் பெண்ணால் வந்தோம்! பெண்மையை போற்றுவோம் என சபதமெடுப்போம்!!
அனைவருக்கும் இனிய மகளிர்தின வாழ்த்துகள்