பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு நேதாஜியுடன் நெருக்கமான நட்பு எப்படி ஏற்பட்டது தெரியுமா? யாரும் அறியா தகவல்..

ஒருவரின் பிறந்த நாளும் இறந்த நாளும் ஒரு சேர அமைவது என்பது யாருக்கும் கிடைக்காத அபூர்வ பிறப்பு. ஆனால் தேவருக்குக் கிடைத்தது. எனினும் ஒருநாள் தான் வேறுபாடு. தேவர் பிறந்தது 1908 அக்டோபர் மாதம்…

Thevar and Nethaji

ஒருவரின் பிறந்த நாளும் இறந்த நாளும் ஒரு சேர அமைவது என்பது யாருக்கும் கிடைக்காத அபூர்வ பிறப்பு. ஆனால் தேவருக்குக் கிடைத்தது. எனினும் ஒருநாள் தான் வேறுபாடு. தேவர் பிறந்தது 1908 அக்டோபர் மாதம் 30-ம் தேதி. தேவர் இறப்பு 1963 அக்டோபர் 29. இப்படி ஒருநாள் வித்தியாசத்தில் தான் அவரின் பிறப்பும், இறப்பும் அமைந்தது. ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் என்ற ஊரை அடுத்த புளிச்சு குளம் என்ற கிராமத்தில் பிறந்தவர் முத்துராமலிங்கத்தேவர்.

தான் வாழ்ந்த மொத்த நாட்களில் 25% நாட்களை சிறையிலேயே கழித்திருக்கிறார் தேவர். விடுதலைப் போராட்டம், தேசியம், தெய்வீகம் என ஒருசேர அமையப்பெற்று தமிழகத்தின் மிகச்சிறந்த தலைவராகப் போற்றப்படுகிறார். இதனால் தான் இவரது பிறந்த தினம் மற்றும் நினைவு தினம் தேவர் ஜெயந்தி என்று கொண்டாடப்படுகிறது.

விடுதலைப்போராட்ட வீரர், ஆன்மீக வாதி, அரசியல்வாதி, வள்ளல் எனப் பலமுகங்கள் தேவருக்கு உண்டு. பெருந்தலைவர் காமரசாரையே தேர்தலில் அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர் தேவர். தமிழக அரசியல் வரலாற்றில் எப்படி தேவரைத் தவிர்த்து எழுத முடியாதோ அதேபோல் இந்திய விடுதலைப் போராட்டத்தில் நேதாஜியை தவிர்க்க முடியாது. காந்தி அகிம்சை வழியில் சென்றால் நேதாஜி புரட்சி வழியில் சென்றார். இப்படி நேதாஜி சுபாஷ் சந்திரபோசும் நமது தேவரும் பின்னாளில் நெருக்கமான நண்பர்களாக எப்படி மாறினர் என்பது தெரியுமா?

கடவுளுக்கு நைவேத்தியம் படைப்பது ஏன்? சாப்பிடவா செய்கிறார்? குரு சொன்ன ‘நச்’ பதில்

விடுதலைக்கு முந்தைய காலகட்டங்களில் தமிழ்நாட்டின் பிரபல வழக்கறிஞராகப் பணியாற்றியவர் சீனிவாச ஐயங்கார். இவருக்கும் தேவரின் தந்தைக்கும் நெருங்கிய நட்பு உண்டு. தேவர் தந்தை உக்கிரபாண்டித் தேவர் அவர்கள் மிகப்பெரிய ஜமீன்தார். நிறைய நிலபுலன்கள் இருப்பதால் அந்த சொத்துக்களை மேற்பார்வை செய்தவர் சீனிவாச ஐயங்கார். ஒருமுறை 1927-ல் சென்னையில் காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. அதனை நடத்தும் பொறுப்பு சீனிவாச ஐயங்காருக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த நேரத்தில் தேவர் தங்ளது சொத்து விஷயமாக சீனிவாச ஐயங்காரைச் சந்தித்திருக்கிறார்.

அப்போது தற்போது மாநாடு நடைபெற்றுக் கொண்டிருப்பதால் வழக்குப் பணிகளை தற்சமயம் பார்க்க இயலாது. சில நாட்கள் ஆகும் எனத் தெரிவித்திருக்கிறார். பின் தேவரிடம் நீங்கள் நான்கு நாட்கள் சென்னையில் தானே இருக்கப் போகிறீர்கள் என்று கேட்க தேவரும் ஆம் என்று கூற, அப்போது என் விருந்தினர் ஒருவருக்கு நீங்கள் உதவியாக இருக்க முடியுமா என்று கேட்டிருக்கிறார். தேவரும் சம்மதிக்க அதன்பின் அந்த விருந்தினருடன் நான்கு நாட்கள் அவருக்கு உதவியாய் இருக்க அப்போது அவர்கள் இருவருக்குள்ளும் நல்ல புரிதல் ஏற்பட்டு நாளடைவில் மிகச்சிறந்த நண்பர்களாக மாறினர். அந்த விருந்தினர் வேறுயாருமல்ல நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தான்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தனது மாநிலத்திற்கு தேவரை அழைத்துச் சென்று தன் அன்னையிடம் உங்களது கடைசி மகன் வந்திருக்கிறார் என்று அறிமுகப்படுத்தியிருக்கிறார். தாயின்றி வளர்ந்த தேவர் நேதாஜியின் தாயாரை தன் தாயாகப் பாவித்து அவர்மேல் அன்பு கொண்டார். இப்படித்தான் இவர்கள் நட்பு வளர்ந்திருக்கிறது.