பயன்படுத்தாத கிரெடிட் கார்டை குளோஸ் செய்வது எப்படி? வருடாந்திர கட்டணத்தை செலுத்தியே ஆக வேண்டுமா? கார்டை குளோஸ் செய்யாமல், கட்டணமும் செலுத்தாமல் இருந்தால் விபரீதம் ஏற்படுமா?

பயன்படுத்தப்படாத கிரெடிட் கார்டுகளால் ஏற்படும் சிக்கல் பலருக்கும் பொதுவான ஒன்றுதான். உங்கள் கிரெடிட் கார்டை கடந்த சில வருடங்களாக பயன்படுத்தாமல் இருந்தாலும், அதை முறைப்படி குளோஸ் செய்யவில்லை என்றால் வருடாந்திர கட்டணம் மற்றும் அதற்கான…

Credit Card

பயன்படுத்தப்படாத கிரெடிட் கார்டுகளால் ஏற்படும் சிக்கல் பலருக்கும் பொதுவான ஒன்றுதான். உங்கள் கிரெடிட் கார்டை கடந்த சில வருடங்களாக பயன்படுத்தாமல் இருந்தாலும், அதை முறைப்படி குளோஸ் செய்யவில்லை என்றால் வருடாந்திர கட்டணம் மற்றும் அதற்கான வரி செலுத்த சொல்லி பில் வந்து கொண்டே தான் இருக்கும். இப்போது என்ன செய்ய வேண்டும், இந்த கட்டணத்தைச் செலுத்தாமல் இருந்தால் என்னென்ன பிரச்சனைகள் வரும் என்பதை பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

இப்போது நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

பில்லை செலுத்தியே ஆகவேண்டும்: முதலில் நீங்கள் செய்ய வேண்டியது வருடாந்திர கட்டண தொகையை செலுத்துவதுதான். நிலுவை தொகை இருக்கும் வரை எந்தவொரு கிரெடிட் கார்டையும் குளோஸ் செய்ய முடியாது. இந்த வருடாந்திர கட்டணம் ஒரு முறையான கட்டணம். பில் வந்த பிறகு, அதை ரத்து செய்ய முயற்சிப்பது கடினம். இருப்பினும், நீங்கள் சம்பந்தப்பட்ட கார்டு வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்புகொண்டு, கார்டை பயன்படுத்தாததற்கான காரணத்தை கூறி, கட்டணத்தை தள்ளுபடி செய்ய கோரலாம். ஒருவேளை தள்ளுபடி செய்யப்பட்டால் நீங்கள் கட்டிய கட்டணம் திரும்ப வர வாய்ப்புண்டு. ஆனால், எந்த பிரச்சனையும் இல்லாமல் கார்டை குளோஸ் செய்வதர்கு முதலில் இந்த கட்டணத்தை செலுத்திவிடுவதுதான் மிக சரியான வழி.

கார்டை முறையாக மூடுங்கள்: கட்டணத்தை செலுத்திய பிறகு, கார்டை குளோஸ் செய்வதற்கான சரியான செயல்முறையை பின்பற்ற வேண்டும். உங்கள் முந்தைய முயற்சிகள் வெற்றிபெறவில்லை என்றால், நீங்கள் சில படிகளை சரியாக பின்பற்றவில்லை என்று அர்த்தம். கார்டை நிரந்தரமாக குளோஸ் செய்வதற்கு எஸ்பிஐ வங்கியின் அதிகாரப்பூர்வ நடைமுறைகளை பின்பற்றுங்கள். எஸ்பிஐ கார்டு வாடிக்கையாளர் சேவை மையத்தை தொலைபேசியில் தொடர்புகொள்வது அல்லது அவர்களுக்கு ஒரு கடிதம் அனுப்புவது சிறந்த வழிகள். அருகிலுள்ள எஸ்பிஐ வங்கி கிளைக்கு சென்று, கார்டை மூடுவதற்கான படிவத்தையும் சமர்ப்பிக்கலாம். கார்டு மூடும் கோரிக்கையை சமர்ப்பிக்கும்போது, அதற்கான அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் அல்லது குறிப்பு எண் (Reference ID) ஒன்றை பெறுவதை உறுதி செய்துகொள்ளுங்கள். இது எதிர்கால பதிவுகளுக்கு மிகவும் அவசியம்.

நீங்கள் பில்லைச் செலுத்தவில்லை என்றால் என்ன ஆகும்?

வருடாந்திர கட்டணம் சிறிய தொகையாக இருந்தாலும், அதை செலுத்தாமல் விட்டால் கூட, அது பெரிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். குறிப்பிட்ட தேதிக்குள் நீங்கள் வருடாந்திர கட்டணத்தை செலுத்தவில்லை என்றால், எஸ்பிஐ கார்டு நிறுவனம் தாமத கட்டணத்தை சேர்த்து, நிலுவை தொகைக்கு வட்டி வசூலிக்க தொடங்கும். இதனால் சிறிய தொகை மிக வேகமாக பெரிய தொகையாக மாறும்.

மிக முக்கியமான விளைவு, உங்கள் கிரெடிட் ஸ்கோர் (CIBIL Score) பாதிக்கப்படும். வருடாந்திரக் கட்டணம் போன்ற சிறிய தொகைகூட செலுத்தப்படாதபோது, அது சிபில் போன்ற கடன் தரவு நிறுவனங்களுக்கு தெரிவிக்கப்படும். இதனால் உங்கள் கிரெடிட் ஸ்கோர் குறைந்துவிடும். கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருந்தால், எதிர்காலத்தில் நீங்கள் கடன், கிரெடிட் கார்டு அல்லது வீட்டு வசதிக் கடன் பெறுவது மிகவும் கடினமாகிவிடும்.

நிலுவைத் தொகை தொடர்ந்து செலுத்தப்படாமல் இருந்தால், உங்கள் கார்டு முடக்கப்பட்டுவிடும். மேலும், வங்கி உங்கள் கணக்கை வசூல் முகமைக்கு மாற்றும். இது தொடர்ச்சியான அழைப்புகள் மற்றும் பெரிய மன உளைச்சலுக்கு வழிவகுக்கும்.

ஆகவே, கால தாமதம் செய்யாமல், உடனடியாக பில்லை செலுத்தி, பின்னர் முறையாக கார்டை நிரந்தரமாக கணக்கை மூடிவிடுங்கள்.