கிரெடிட் கார்டு வாங்கவே வேண்டாம்.. அப்படியே வாங்கினாலும் இந்த 4 வழிகளை பின்பற்ற மறக்க வேண்டாம்.. கிரெடிட் கார்டை சரியான பயன்படுத்தினால் வரம், இல்லையேல் அதுவொரு மீளமுடியாத சாபம்.. கடன் இல்லா வாழ்வு பெருவாழ்வு..!

கிரெடிட் கார்டு என்பது நமது நிதி வாழ்க்கையில் ஒரு முக்கிய கருவியாக மாறிவிட்டது. ஆனால், அதை சரியாகப் பயன்படுத்தத் தெரியாமல் பலரும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றனர். இந்தியாவில் சுமார் 1.2 கோடிக்கும் அதிகமான…

Credit Card

கிரெடிட் கார்டு என்பது நமது நிதி வாழ்க்கையில் ஒரு முக்கிய கருவியாக மாறிவிட்டது. ஆனால், அதை சரியாகப் பயன்படுத்தத் தெரியாமல் பலரும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றனர். இந்தியாவில் சுமார் 1.2 கோடிக்கும் அதிகமான மக்கள் கடன் சுமையால் அவதிப்படுகிறார்கள். கிரெடிட் கார்டு பயன்பாட்டின் முக்கியத்துவத்தையும், அதை புத்திசாலித்தனமாக பயன்படுத்துவதற்கான வழிகளையும் தெரிந்து கொண்டால் கிரெடிட் கார்டு ஒரு வரம், இல்லையெனில் அதுதான் மிகப்பெரிய சாபம்.

கிரெடிட் கார்டு நிறுவனங்கள் நமக்கு அளிக்கும் மிகப்பெரிய ஆபத்தான சலுகை, குறைந்தபட்ச நிலுவைத் தொகை (Minimum Due Amount) செலுத்தும் ஆப்ஷன். இது ஒரு சாமானியரின் கண்ணுக்கு ஒரு வரமாக தெரியும். ஆனால், இது ஒரு மறைக்கப்பட்ட கடன் வலையாகும்.

உதாரணமாக, ஒரு பில் சைக்கிளில் ₹1,00,000 செலவு செய்து, அதை சரியான தேதியில் கட்ட முடியாவிட்டால் நீங்கள் வெறும் 5% பணம் மட்டும் செலுத்துங்கள், அதாவது வெறும் ₹5000-ஐ குறைந்தபட்ச தொகையாக செலுத்துங்கள் என்று உங்களுக்கு ஒரு ஆப்ஷன் கொடுக்கப்படும். அது ஏதோ வரம் என்று நினைத்து நீங்கள் மினிமம் தொகையை செலுத்திவிட்டீர்கள் என்று வைத்துக்கொள்வோம். மீதமுள்ள ரூ.95,000 தொகைக்கு ஆண்டுக்கு 42% வட்டி விதிக்கப்படும். இதுதான் கிரெடிட் கார்டு நிறுவனங்களின் முக்கிய வருமானம். நம் தலையில் மிளகாய் அரைக்கும் விதம். இந்த வட்டி விகிதம் என்பது மிக மிக அதிகம்.

இதை தவிர, கிரெடிட் கார்டு நிறுவனங்கள் வேறு என்னென்ன வழிகளில் வருமானம் ஈட்டுகின்றன: அதையும் கொஞ்சம் பார்ப்போம்.

1. வட்டி வருமானம் (Interest Income): குறைந்தபட்ச தொகையை மட்டும் செலுத்துபவர்களிடமிருந்து பெறப்படும் அதிக வட்டி.

2. பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான கமிஷன் (Merchant Fees): கிரெடிட் கார்டை வாங்கும் ஒவ்வொரு முறையும் வியாபாரிகளிடமிருந்து பெறப்படும் கமிஷன்.

3. வருடாந்திர கட்டணம் மற்றும் பிற கட்டணங்கள் (Annual Fees & Other Charges): சில கார்டுகளுக்கு விதிக்கப்படும் வருடாந்திர கட்டணம், தாமத கட்டணங்கள் போன்றவை.

கிரெடிட் கார்டு பயன்பாட்டில் நிதிக் கட்டுப்பாட்டையும், விழிப்புணர்வையும் கடைப்பிடிப்பது அவசியம். கிரெடிட் கார்டை கூடுமானவரை வாங்க வேண்டாம். கையில் காசு இருந்தால் செலவு செய்யுங்கள், அல்லது செலவு செய்யாதீர்கள். அதுதான் சரியான அறிவுரை. அப்படியே கிரெடி கார்டு வாங்கியே தீருவேன் என்று நீங்கள் முடிவு செய்துவிட்டால் கண்டிப்பாக பின்வரும் வழிமுறைகளை கட்டாயம் பின்பற்றுங்கள்.

1. முழு தொகையையும் செலுத்துங்கள் (Full Repayment): எப்போதும் பில் தொகையை முழுமையாக சரியான தேதிக்குள் செலுத்திவிடுங்கள். வட்டி இல்லாமல் பணம் பயன்படுத்தும் வாய்ப்பை தவறவிடாதீர்கள். குறைந்தபட்ச தொகையை எந்த காரணத்தை முன்னிட்டும் கட்ட வேண்டாம்.

2. பெரிய தொகையை EMI-ஆக மாற்றுங்கள் (Convert to EMI): பெரிய பொருட்களை வாங்கும்போது, அதை வட்டி இல்லாத EMI-ஆக மாற்ற முடியுமா என்று சரிபாருங்கள். வட்டி இருந்தாலும், அதை தனிப்பட்ட கடனாக (Personal Loan) மாற்றுவது போல, குறைந்த வட்டிக்கு EMI-ஆக மாற்றும் ஆப்ஷனையும் கவனியுங்கள்.

3. முழு வரம்பையும் பயன்படுத்த வேண்டாம் (Don’t use full limit): உங்கள் கிரெடிட் கார்டின் முழு வரம்பில் 30-35% மட்டுமே ஒவ்வொரு மாதமும் பயன்படுத்த முயற்சி செய்யுங்கள். இது உங்கள் கிரெடிட் ஸ்கோரை (Credit Score) மேம்படுத்த உதவும்.

4. சலுகைகளை கவனமாகப் பயன்படுத்துங்கள் (Use offers wisely): சில கிரெடிட் கார்டுகள் இலவச திரைப்பட டிக்கெட்டுகள், விமான டிக்கெட்டுகள் போன்ற சலுகைகளை வழங்குகின்றன. அவற்றை புத்திசாலித்தனமாக தேவையிருந்தால் மட்டும் பயன்படுத்துங்கள்.

கிரெடிட் கார்டு என்பது மக்களுக்கு எளிதாக கிடைக்கும் ஒரு சிறந்த நிதியுதவி. அதை சரியாக பயன்படுத்தினால், அது உங்கள் கிரெடிட் ஸ்கோரை உயர்த்தவும், வட்டி இல்லாத கடனை பெறவும் உதவும். ஆனால், நிதி கட்டுப்பாடு இல்லையென்றால், அது உங்களை ஆழ்ந்த கடன் சுமையில் சிக்க வைக்கும். கிரெடிட் கார்டை ஒரு அடிமையாக பயன்படுத்தாதீர்கள், மாறாக ஒரு முதலாளியாக இருங்கள்.