ஐ.டி. ஊழியர்கள் போல் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்காமல், சாதாரண சம்பளம் வாங்கி, ஒழுக்கமான மற்றும் சிக்கனமான வாழ்க்கை வாழ்ந்து, வரைமுறையான சேமிப்பு செய்ததால் 45 வயதில் ஓய்வு பெற்ற ஒருவர் கையில் ரூ.4.70 கோடி இருப்பதாக கூறப்படுவதும், இனிமேல் அவர் கடைசி வரை நிம்மதியாக வாழலாம் என்பதும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் ரெடிட் தளத்தில் பகிரப்பட்ட ஒரு பதிவுதான் அனைவரையும் கவர்ந்தது.
ஆச்சரியப்படும் விதமாக, அவருக்கு அதிக சம்பளம் தரும் வேலை இல்லை. பகுதி நேர வேலைகளோ அல்லது அதிரடியான முதலீடுகளோ இல்லை. அவர் தனது வாழ்க்கையை எளிமையாகவும், பணத்தை எப்படி சரியாகக் கையாள்வது என்பதைப் புரிந்தும் வாழ்ந்துள்ளார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் ஒரே வீட்டில் குடியிருந்து எளிமையாக வாழ்ந்துள்ளார். ஒரு ஸ்கூட்டர் மட்டுமே பயணத்திற்காக வைத்துள்ளார். மிகவும் அரிதாகவே விடுமுறை எடுத்துள்ளார். ஒருபோதும் வணிகத்திலோ அல்லது பங்குச்சந்தையிலோ ஈடுபடவில்லை. அவருடைய வருமானம் ஒரு நிலையான, வழக்கமான வேலையிலிருந்து மட்டுமே வந்து கொண்டிருந்தது.
அப்படி என்றால் அவருக்கு எப்படி ரூ.4.70 கோடி சேமிப்பு கிடைத்தது என்றால், அதுதான் தொடர்ச்சியான சேமிப்பு மற்றும் முதலீடு. கடந்த 1998 ஆம் ஆண்டு அவர் மியூச்சுவல் ஃபண்டில் பத்தாயிரம் ரூபாய் முதலீடு செய்தார். அதன் பிறகு SIP (Systematic Investment Plan) முறையில் மாதம் 500 ரூபாய் சேமிக்க தொடங்கினார். அவரது சம்பளம் அதிகரிக்க அதிகரிக்க, SIP தொகையை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தார். ஆயிரம், இரண்டாயிரம், ஐயாயிரம், பத்தாயிரம் என அதிகரித்துக்கொண்டே வந்த அவர், ஒரு கட்டத்தில் 20 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தார். ஆனால், அதே நேரத்தில் ஒரு மாதம் கூட அவர் முதலீடு செய்வதைத் தவறவிடவில்லை. இந்த நிலையில் தான் தற்போது அவருடைய SIP மற்றும் அனைத்து மியூச்சுவல் ஃபண்டுகளின் மதிப்புகள் சேர்த்து ரூ.4.70 கோடி ரூபாய் என வந்துள்ளது. இது அனைவருக்கும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தப் பதிவுக்கு 9000க்கும் மேற்பட்ட லைக்குகளும், லட்சக்கணக்கான பார்வையாளர்களும் கிடைத்துள்ளனர்.
அந்த மனிதனின் பொறுமை, அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்கு அனைவரும் பாராட்டினர். நிலையான வருமானம் குறைவாக இருந்தாலும், பழக்கவழக்கங்களில் எளிமை மற்றும் சிக்கனம் காரணமாக ஒரு பெரிய தொகையை சேமிக்க முடியும் என்பதற்கு ஒரு உதாரணமாக அவர் திகழ்கிறார் என்று பலர் போற்றினர்.
ஆனால், சிலர் அவருடைய சேமிப்பு அணுகுமுறையை ஆதரிக்கவில்லை. “வாழ்க்கைக்கு சிக்கனம் என்பது தேவைதான். ஆனால், ஒரு சில அடிப்படை வசதிகளையாவது செய்துகொண்டிருக்கலாம். ரூ.4.70 கோடி வைத்துக்கொண்டு ஒரு நல்ல வீடு, ஒரு கார் வைத்திருக்கலாமே? அது ஆடம்பர விஷயத்தில் வராது. வெறும் பணத்தை மட்டும் சேமித்து மகிழ்ச்சியை ஏன் தியாகம் செய்ய வேண்டும்? வருடத்திற்கு ஒரு முறை ஒரு லட்சம் அல்லது இரண்டு லட்சம் செலவு செய்து குடும்பத்தோடு சுற்றுலா செல்லலாம். அது மனதிற்கு ஒரு புத்துணர்ச்சியை கொடுக்கும்” என்று கூறினர்.
ஆனால், இந்த பதிவுக்கு பல அதிரடியான கருத்துகளும் வந்து கொண்டிருக்கின்றன. ரூ.4.70 கோடி பணத்தை தற்போது SWP (Systematic Withdrawal Plan) யில் முதலீடு செய்தால், மாதம் கிட்டத்தட்ட ரூ.4 லட்சம் ரூபாய் கிடைக்கும். அந்தப் பணத்தில் அவர் இனி வாழ்நாள் முழுவதும் சுற்றுலா செல்லலாம், பெரிய வீட்டில் வசிக்கலாம், கார் வாங்கலாம், என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஒரு குறிப்பிட்ட வயது வரை வாழ்க்கையை தியாகம் செய்தால், அதன் பின்னர் மீதியிருக்கும் வருடங்களில் நிம்மதியான அதே நேரத்தில் தேவையான அனைத்து வசதிகளையும் வாங்கி சந்தோஷமாக வாழலாம்” என்று கூறி வருகின்றனர்.
இது குறித்து உங்கள் கருத்து என்ன?
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
