கடக்நாத் கருங்கோழி இறைச்சியில் இவ்வளவு மருத்துவ குணங்கள் இருக்கிறதா…?

By Meena

Published:

நாட்டுக்கோழி இனங்களில் கடக்நாத் என்ற கருங்கோழி மிகவும் சிறப்பு வாய்ந்தது மற்றும் மருத்துவ குணங்கள் கொண்டது. இந்த வகை கோழிகள் இந்தியாவின் மத்திய பிரதேசத்தை பூர்வீகமாக கொண்டது. இந்த வகை கோழிகள் தலை முதல் கால் வரை கருப்பு நிறத்தில் இருக்கும்.

இதில் அடர் கருப்பு, பென்சில் கருப்பு மற்றும் மயில் கருப்பு என்று மூன்று ரகங்கள் உள்ளன. இவற்றின் இறக்கை முதல் இறைச்சி வரை அடர்ந்த கருப்பு நிறத்தில் காணப்படும். ஆட்டு இறைச்சிக்கு நிகராக கடக்நாத் கோழி இறைச்சி விற்கப்படுகிறது. இது வட மாநிலங்களில் அதிக அளவில் வளர்க்கப்படுகிறது.

சமீப காலமாக கருங்கோழியின் இறைச்சியில் மருத்துவ குணங்கள் அதிகம் இருப்பதால் பிரபலமடைந்து வருகிறது. இந்த கருங்கோழியில் 0.73 சதவீதம் அளவு மட்டுமே கொழுப்புச் சத்து உள்ளது. அதனால் இந்த வகை கோழி இறைச்சியை அனைத்து வயதினரும், எந்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும் சாப்பிடலாம் என்று மருத்துவர்கள் கூறுவார்கள்.

மேலும் இந்த கருங்கோழியில் நமது உடம்பின் வளர்ச்சிதை மாற்றத்திற்கு பயன்படும் 18 வகையான அமினோ அமிலங்கள் உள்ளன. இந்த அமினோ அமிலங்கள் தசைநார் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். இது தவிர, வைட்டமின் பி1, பி2, பி6, பி12, வைட்டமின் C மற்றும் E ஆகிய சத்துகள் உள்ளன. இதிலிருக்கும் வைட்டமின் E ரத்தம் உறைவதை தடுக்கிறது. இதனால் இதயம் சார்ந்த நோய்கள் தடுக்கப்படுகிறது.

இந்த கருங்கோழியில் அதிகப்படியான புரத சத்து, இரும்பு சத்து, கால்சியம், பாஸ்பரஸ் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட உடம்பிற்கு தேவையான சத்துக்கள் இருக்கின்றன. இரத்தசோகை, எலும்பு வலிமை, மூட்டு தேய்மானம், நரம்பு தளர்ச்சி, உடல் பலவீனம் மற்றும் பெண்களுக்கு கருப்பை சார்த்த நோய்களுக்கு இந்த கருங்கோழி இறைச்சி அருமருந்தாகும்.