ஆடி மாத பண்டிகைகளில் மிக முக்கியமானது ஆடி அமாவாசை. பொதுவாக அமாவாசை நாட்களில் முன்னோர்களை வழிபடுவது வழக்கம். அதுவும் தமிழ் மாதங்களில் வரும் ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி அமாவாசை மிகவும் முக்கியமானவை ஆகும்.
பித்ருக்கள் என்பவர்கள் நம் குடும்பத்தின் மறைந்த முன்னோர்கள் மற்றும் மூதாதையர்கள் ஆவர். ஆடி அமாவாசை அன்று பித்ருலோகத்தில் வாழும் நம் முன்னோர்கள் தங்களது சந்ததியினரைக் காண பூலோகம் வருவதாகவும் தங்களது வம்ச வாரிசுகளை ஆசிர்வதிப்பதாகவும் ஐதீகம்.
பித்ருக்களின் ஆசிர்வாதத்தைப் பெற மக்கள் ஆறு, குளம், கடல் போன்ற நீர்நிலைகளின் அருகே அமைந்திருக்கும் கடற்கரையில் எள்ளு சாதம் வைத்தும், தர்ப்பை புல்லை வைத்தும் தீட்சிதர்களை கொண்டு தர்ப்பணம் செய்வர்.
எள்ளும் தண்ணீரும் பித்ருக்களுக்கு மிகவும் பிடித்தமானவை ஆகும். இந்த பித்ரு தோஷ பரிகாரங்களை ஆடி அமாவாசை அன்று காலை 11.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை செய்ய வேண்டும். இறந்த முன்னோர்களை திருப்தி செய்ய, அவர்களின் ஆண் வாரிசுகள், அமாவாசை நாளில் எள்ளும் தண்ணீரும் கொடுப்பதன் மூலம் மறைந்த நம் முன்னோர்கள் திருப்தியடைந்து ஆசி வழங்குவார்கள். பித்ரு தர்ப்பணம் மூன்று தலைமுறை முன்னோர்களுக்காகச் செய்யப்படுகிறது.
தாய், தந்தை இல்லாத ஆண்கள் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும். கணவர் இல்லாத பெண்கள் இந்த விரதம் இருக்கலாம். திருமணமான ஒரு பெண்ணுக்கு தாய் அல்லது தந்தை இல்லை என்றாலோ, அல்லது இருவரும் இல்லை என்றாலும் அவர் விரதம் இருக்கக் கூடாது. ஏனென்றால் அவருக்கு கணவர் உயிரோடு இருக்கும் நிலையில் அவர் அமாவாசை விரதம் இருக்கக் கூடாது.
நீர்நிலைகளில் தர்ப்பணம் செய்த பின்பு வீட்டில் முன்னோர்களை நினைத்து அகல் விளக்கு வைத்து தூய தீபங்கள் ஏற்றி,சுத்தமாக சமைத்த சைவ உணவு வகைகளையும் மற்றும் பலகாரங்களை இலையில் படைத்து நம் முன்னோர்களை நினைத்து வணங்கவேண்டும். பின் அனைத்து படையல்களிலுமிருந்து உணவு மற்றும் பலகாரங்களை கொஞ்சமாக எடுத்து காக்கைகளுக்கு அளிக்கவேண்டும். வெள்ளை சாதத்துடன் எள்ளு கலந்து காக்கைக்கு அளிப்பது நமது தோஷங்களை விலக்கும் என்பது நம்பிக்கை.