இன்றைய வாழ்க்கை முறை பரபரப்பானதும் எந்திரமயமானதும் ஆகிவிட்டது. எங்கு பார்த்தாலும் ஃபாஸ்ட் புட் கடைகள் ஆக்கிரமித்துள்ளன. இந்த மாதிரி பழக்கவழக்கங்களால் அபாயகரமான வாழ்க்கை முறையை தான் இன்றைய மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். நம் முன்னோர்கள் எல்லா விஷயத்தையும் கட்டுக்கோப்பாக சரியாக வாழ்க்கையை கொண்டு சென்றதால் தான் நோய் நொடி இல்லாமல் நீண்ட காலம் வாழ்ந்தார்கள். அப்படி ஆரோக்கியமாக வாழ்வதற்கு தினமும் நாம் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய சில நல்ல பழக்கங்களை இனி காண்போம்.
முதலில் காலையில் குறைந்தது 7 மணிக்கு முன்பாகவே எழுந்து விட வேண்டும். இதை நாம் பழகிக் கொள்ள வேண்டும். காலையில் சீக்கிரமாக எழுவதால் நம் உடல் சுறுசுறுப்புடன் செயல்படும். அடுத்ததாக தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இது நம் உடம்பில் உள்ள அசுத்தங்களை வியர்வை மற்றும் சிறுநீர் மூலம் வெளியேற்றி விடும்.
தினமும் இரண்டு முறை குளித்தால் மிகவும் நல்லது அப்படி இல்லை என்றால் ஒரு முறையேனும் காலையில் குளித்து விட வேண்டும். இரவு கட்டாயம் எட்டு மணி நேரம் ஆவது நன்றாக தூங்க வேண்டும். சரியான ஊட்டச்சத்து உள்ள உணவுகளை சாப்பிட பழக்கப்படுத்த வேண்டும். தினமும் ஏதாவது ஒரு காய்கறி வகை, பழ வகை, ஒரு முட்டை போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
தினமும் ஒரு மணி நேரமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடற்பயிற்சி செய்ய முடியாதவர்கள் குறைந்தபட்சம் அரை மணி நேரம் நடை பயிற்சி மேற்கொள்ளலாம். இதை வழக்கமாக்கி கொள்ளலாம். தினமும் இரண்டு முறை பல் துலக்க வேண்டும். இது பல் சார்ந்த எந்த பிரச்சனைகளையும் வராமல் தடுக்கும். அதிகப்படியான மொபைல் போன் உபயோகப்படுத்துவதை குறைப்பது கண்ணுக்கு மிகவும் நல்லது.
தினமும் தியானம் அல்லது யோகா செய்வது மன அமைதி தரும். இது போன்ற பழக்கங்களை தினமும் செய்தால் அதுவே ஒரு வழக்கமாகி ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு வழிவகுக்கும்.