ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்கியதற்காக, அமெரிக்கா இந்திய பொருட்களுக்குப் 50% வரிகள் விதித்துள்ளது. இது உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமான இந்தியாவுக்கு எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என பொருளாதார வல்லுநர் லோரி லெட் கூறிய கருத்து வைரலாகி வருகிறது. அவர் கூறியதாவது:
டொனால்ட் டிரம்ப் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகிய இருவருக்கும் இடையே முன்பு மிகவும் வலுவான உறவு இருந்தது. மோடி அமெரிக்காவுக்கு சென்றபோது, இருவரும் இணைந்து பொது கூட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் பேசியுள்ளனர். அப்படி இருந்தும், இப்போது திடீரென இந்த வரிகள் ஏன் விதிக்கப்பட்டன என்பது குழப்பமாகவே உள்ளது. டிரம்ப் இந்த 50% வரிகள் குறித்து ஏற்கனவே எச்சரித்திருந்தாலும், அது நடைமுறைக்கு வந்தது சற்று ஆச்சரியமாகவே உள்ளது.
ஆனால், இது இந்திய பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. இந்தியா ஒரு ஓரளவு உள்நாட்டு சந்தையைச் சார்ந்த ஒரு பொருளாதார நாடு. அமெரிக்காவிற்கு அதிக அளவில் பொருட்களை ஏற்றுமதி செய்வதில்லை. குறிப்பாக, மருந்து பொருட்கள் மற்றும் நகைகள் போன்ற இந்தியாவின் ஏற்றுமதியில் 45% வரிகளுக்கு உட்பட்டவை அல்ல. ஏனென்றால் அமெரிக்காவில் மருந்து பொருட்களின் தேவை அதிகமாகவும், விலையும் அதிகமாகவும் உள்ளது. இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் வெறும் 2% மட்டுமே அமெரிக்காவிற்கு செல்கிறது. எனவே, ஜவுளி மற்றும் காலணி போன்ற சில துறைகள் மட்டுமே பாதிக்கப்படலாம். இருப்பினும், ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு இது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஆண்டுக்கு 7% இருக்கும் நிலையில், இந்த வரிவிதிப்பால் 1%க்கும் குறைவான பாதிப்பு மட்டுமே ஏற்படும்.
ரஷ்ய எண்ணெய் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு
அமெரிக்கா மற்றும் இந்தியா எப்போதும் நெருங்கிய கூட்டாளிகளாக இருந்தபோதிலும், இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தவில்லை. இந்த நிலைப்பாடு குழப்பமாகவே உள்ளது. இந்தியா மட்டுமே ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கவில்லை, சீனாவும் கணிசமான அளவில் எண்ணெய் வாங்குகிறது. ஜி7 நாடுகளும் ரஷ்யாவிடம் இருந்து ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 60 டாலர் அல்லது அதற்கும் குறைவாக வாங்கலாம் என அனுமதித்துள்ளன.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவின் கச்சா எண்ணெயை உலக சந்தையில் இருந்து முற்றிலுமாக நீக்க விரும்பவில்லை. அப்படி செய்தால் எரிசக்தி விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயரும். அதனால்தான், மற்ற நாடுகளும் வாங்குவதற்கு அனுமதி அளித்துள்ளன. இந்தியா தினசரி 1.5 முதல் 2 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய் வாங்குகிறது. இந்தியா இந்த எண்ணெயை வேறு எங்காவது வாங்க முற்பட்டால், உலக சந்தையில் எண்ணெய் விலை மிக அதிகமாக உயர்ந்துவிடும். டொனால்ட் டிரம்ப் இதனைத்தான் விரும்பவில்லை. எனவே, மற்ற நாடுகளும் வாங்கும் நிலையில் இந்தியா மட்டும் குறிவைக்கப்பட்டது ஏன் என்பது அரசியல்ரீதியாக புரிந்துகொள்ள இயலாத ஒன்றாக உள்ளது.
இந்தியா – அமெரிக்கா உறவு: எதிர்காலம் என்ன?
அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால், வர்த்தக ரீதியான உறவுகள் பாதிக்கப்படும். குறிப்பாக, இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் எண்ணிக்கை குறையும். ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் இதனால் பாதிக்கப்படும்.
ஆனால், இது சீனா மற்றும் பிற பிரிக்ஸ் நாடுகளுடன் இந்தியாவுக்கு நெருக்கமான உறவை உருவாக்க வழிவகுக்கும். பிரதமர் மோடி 2018-க்கு பிறகு முதல் முறையாக சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா மற்றும் சீன வீரர்களுக்கு இடையே எல்லை மோதல் ஏற்பட்ட போதிலும், இப்போது இரு நாடுகளும் வர்த்தக உறவுகளை வலுப்படுத்த முயற்சி செய்கின்றன. ரஷ்யாவுடன் இந்தியாவுக்கு வலுவான உறவு உள்ளது. அதன் ராணுவ இறக்குமதியில் 60% ரஷ்யாவையே சார்ந்துள்ளது. இந்த நடவடிக்கைகள், ஆசிய வர்த்தகத்தில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். அமெரிக்கா, மோடியை ஒரு கூட்டாளியாக இழப்பது ஒரு பெரிய தவறாக இருக்கலாம். மேலும், பாகிஸ்தான் ராணுவ தலைவருடன் டிரம்ப் நெருங்கிய உறவை வளர்த்துக் கொள்வது, அரசியல்ரீதியாக மேலும் குழப்பமான நிலையை உருவாக்கியுள்ளது.
அமெரிக்கச் சந்தைகளுக்கான இந்தியாவின் முக்கியத்துவம்
அமெரிக்கா, இந்தியாவை ஒரு பெரிய சந்தையாக மட்டுமல்லாமல், சீனாவை எதிர்க்கும் ஒரு அரசியல் சக்தியாகவும் பார்க்க விரும்புகிறது. ஆனால், அமெரிக்காவின் இந்த வரிவிதிப்பு, அந்த வியூகத்தை தற்காலிகமாக பாதிக்கக்கூடும். இந்தியாவை பொறுத்தவரை, தற்சார்பு கொள்கையை வலுப்படுத்த இது ஒரு வாய்ப்பாக அமையும் என்று கருதப்படுகிறது. இந்திய தயாரிப்பு தொழில்களை மேம்படுத்துவது, மற்ற ஆசிய நாடுகளுடன் வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளில் இந்தியா கவனம் செலுத்தும். இது இந்தியாவின் வர்த்தக நலன்களுக்குப் புதிய பாதையை அமைக்கும். இவ்வாறு பொருளாதார வல்லுநர் லோரி லெட் கூறியுள்ளார்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
