இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில், நகைச்சீட்டுகள் என்பது ஒரு பிரபலமான சேமிப்பு முறையாக இருந்து வருகிறது. ஆனால், நிதி ஆலோசகர்களின் பார்வையில், இது எவ்வளவு பாதுகாப்பானது, இதற்கு மாற்று வழிகள் என்னென்ன? என்பதே பலரின் கேள்வியாக உள்ளது. நகைச்சீட்டுகளின் பாதுகாப்பு, முதலீட்டின் மீதான வருமானம் மற்றும் புதிய முதலீட்டு முறைகள் குறித்து இங்கே காண்போம்.
நகைச்சீட்டு திட்டங்களில் முதலீடு செய்வதற்கு முன் முக்கியமாக இரண்டு அம்சங்களை கருத்தில் கொள்ள வேண்டும்:
1. எந்த நகைச்சீட்டுக்களும் அரசு ஒழுங்குமுறை இல்லை: நகைச்சீட்டுகள் பெரும்பாலும் சிட் ஃபண்ட் மாதிரியை ஒத்திருந்தாலும், இவை ரிசர்வ் வங்கி அல்லது செபி போன்ற எந்தவொரு மத்திய அரசு ஒழுங்குமுறை அமைப்பின் கட்டுப்பாட்டிற்குள்ளும் வருவதில்லை.
2. நம்பிக்கை மட்டுமே அடிப்படை: வாடிக்கையாளர்கள் பெரும்பாலும், “இந்த கடை பெரிய கடை, பல வருடங்களாக இயங்குகிறது, அதனால் ஏமாற்ற மாட்டார்கள்” என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே பணத்தை செலுத்துகின்றனர். ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், சட்டரீதியாக பணத்தை திரும்பப் பெறுவது கடினமானதாக இருக்கலாம்.
நகைச்சீட்டு vs கோல்ட் இடிஎஃப் (Gold ETF) – ஒரு ஒப்பீடு
நகைச்சீட்டு திட்டங்களுக்கு மிகவும் பாதுகாப்பான மற்றும் அதிக வருமானம் தரக்கூடிய சிறந்த மாற்று வழி கோல்ட் இடிஎஃப் ஆகும். நகைச்சீட்டுகளை பொறுத்தவரை, அவை அரசின் எந்த ஒழுங்குமுறை அமைப்பின் கட்டுப்பாட்டிற்குள்ளும் வராததால், தனிப்பட்ட கடையின் நம்பிக்கையே அடிப்படையாக உள்ளது; மேலும், சிக்கல் ஏற்பட்டால் சட்டரீதியாக பணத்தைத் திரும்பப் பெறுவது கடினம்.
மாறாக, கோல்ட் இடிஎஃப்/மியூச்சுவல் ஃபண்டுகள் அரசாங்கத்தால் ஒழுங்குபடுத்தப்பட்டு மிகவும் பாதுகாப்பாக உள்ளன, முதலீட்டாளருக்கும் நாமினிக்கும் பணம் கிடைப்பது உத்தரவாதம் செய்யப்பட்டுள்ளது. சேமிப்பு முறையிலும் வேறுபாடு உள்ளது;
நகைச்சீட்டில் நகையாக சேமிக்கப்பட்டு, இறுதியில் செய்கூலி, சேதாரம், ஜிஎஸ்டி ஆகியவற்றுடன் நகையாகவே வாங்க வேண்டும். ஆனால், கோல்ட் இடிஎஃப்-ல் முதலீடு சந்தை விலைக்கு ஏற்ப யூனிட்டுகளாக வளர்வதால், அதில் செய்கூலி மற்றும் சேதார செலவுகள் தவிர்க்கப்படுகின்றன; மேலும், தங்கத்தின் விலை ஏற்றத்திற்கேற்ப முதலீடும் வளர்ச்சி அடைகிறது.
ஒருவர் 24 மாதங்களுக்கு மாதம் ரூ.10,000 வீதம் கோல்ட் இடிஎஃப்-பில் முதலீடு செய்தால், மொத்தம் ரூ.2,40,000 சேமித்திருப்பார். தங்கத்தின் சராசரி ஆண்டு வளர்ச்சி 30% என்று கொண்டால், இந்த முதலீடு கிட்டத்தட்ட ரூ.3,70,000 ஆக வளர்ந்திருக்கும். இந்த முழு தொகைக்கும் முதலீட்டாளர் 22 கேரட் தங்க நகையை வாங்கிக்கொள்ள முடியும்.
சமீபகாலமாக, நகைக்கடைகள் தேசிய பங்குச் சந்தை மற்றும் மத்திய வைப்பு சேவை நிறுவனங்களுடன் இணைந்து வருகின்றன. இதன் மூலம், வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் முறையில் சேமித்த கோல்ட் இடிஎஃப்-ஐ நேரடியாக நகைக்கடைகளுக்கு மாற்றி கொடுத்து, நகைகளை பெற்றுக்கொள்ளும் பணமில்லா பரிவர்த்தனை வசதி எதிர்காலத்தில் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
தங்கத்தை நகையாக வாங்க விரும்பாதவர்கள், ஆனால் அதன் வளர்ச்சியில் பங்கேற்க விரும்புபவர்களுக்காக மார்க்கெட் லிங்க்டு டிபென்சர்கள் உள்ளன. முதலீட்டுத் தொகை இதில் குறைந்தபட்ச முதலீடு ரூ.5 லட்சம் ஆகும். 42 மாத காலஅளவுக்கு முதலீடு செய்ய வேண்டும். தங்கம் விலை உயர்ந்தால், அதன் வளர்ச்சிக்கு ஏற்ப வருமானம் கிடைக்கும். தங்கம் விலை சரிந்தால், முதலீட்டுக்கு குறைந்தபட்சம் 6% எளிய வட்டி கிடைக்கும் என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த முதலீட்டுத் திட்டங்கள் செபி அமைப்பின் கடுமையான கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதால், பாதுகாப்பானது.
எந்தவொரு முதலீட்டை தேர்ந்தெடுக்கும்போதும், அதன் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை முழுமையாக படித்துப் பார்ப்பதுடன், அரசு ஒழுங்குமுறைக்கு உட்பட்ட திட்டங்களில் முதலீடு செய்வது மிகவும் பாதுகாப்பானது என்று நிதி ஆலோசகர்கள் அறிவுறுத்துகின்றனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
