அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவின் மீது கடுமையான புதிய வர்த்தக வரியை விதித்துள்ளார். இந்தியாவின் ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதல் குறித்து இதற்கு முன்பு இருந்தே ஆட்சேபணைகளை தெரிவித்தவர், தற்போது, இந்திய ஏற்றுமதிகள் மீது 50% வரிவிதிப்பை விதித்து இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். சுமார் 48 பில்லியன் டாலர் மதிப்புள்ள இந்திய பொருட்களுக்கு இந்த புதிய வரி பொருந்தும். அமெரிக்கா தனது நட்பு நாடான ஒரு நாட்டின் மீது விதித்துள்ள மிகவும் கடுமையான வரி நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும்.
அமெரிக்கர்களுக்கு அதிக சுமை
ஆனால் இந்த வரிவிதிப்பால் இந்தியாவுக்கு மட்டும் பாதிப்பில்லை, சொல்ல போனால் இந்தியாவை விட அமெரிக்கர்களுக்கு தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க வீடுகளில் பயன்படுத்தப்படும் பல அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, ஜவுளி, ஆபரணங்கள், இறால், தரைவிரிப்புகள், கைவினை பொருட்கள், தோல் பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் போன்ற துறைகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
ஜவுளி மற்றும் வீட்டு உபயோக பொருட்கள்: பின்னல் ஆடைகள் 64% வரையிலும், நெய்த ஆடைகள் சுமார் 60% வரையிலும், படுக்கை விரிப்புகள் மற்றும் துண்டுகள் சுமார் 59% வரையிலும் வரி விதிக்கப்பட்டுள்ளதால், இவைகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
ஆபரணங்கள்: வைரங்கள், தங்கம் மற்றும் பிற இந்திய நகைகளுக்கு 52%க்கும் மேல் வரி விதிக்கப்பட்டுள்ளது.
உணவு மற்றும் பிற பொருட்கள்: இறால் போன்ற கடல் உணவுகளின் விலை, ஏற்கனவே உள்ள வரிகளுடன் சேர்த்து 33%க்கும் மேல் வரி விதிப்புடன் விற்பனைக்கு வரவுள்ளன. கரிம ரசாயனங்கள் 54% வரிச்சுமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
உற்பத்தியாளர்களும் பாதிக்கப்படுகின்றனர்
அமெரிக்காவில் உள்ள உற்பத்தி துறையை பாதுகாப்பதே இந்த வரிகளின் நோக்கம் என்று டிரம்ப் நிர்வாகம் கூறினாலும், சிஎன்என் செய்தி நிறுவனம் வெளியிட்ட ஒரு ஆய்வு, இதற்கு நேர்மாறான விளைவுகளைக் காட்டுகிறது. சுமார் 70% உற்பத்தியாளர்கள் இந்த அதிக வரிகளால் பாதிக்கப்படுவதாக கூறியுள்ளனர். டெக்சாஸை சேர்ந்த ஒரு தளவாட உற்பத்தியாளர், “இன்னும் 90 நாட்களுக்குள் நாங்கள் எங்கள் தொழிலை மூடி விடுவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
நுகர்வோரின் நிலை
ஜாம்ஷெட்பூரை சேர்ந்த பேராசிரியர் திரிபாதி கூறுகையில், “இந்த வரிகள் அமெரிக்க நிறுவனங்களின் மூலதன செலவுகளை அதிகரிக்கும். லாபத்தை குறைக்கும், மேலும் விநியோக சங்கிலியைப் பாதிக்கும்” என்றார். பொருளாதார வல்லுநர்கள் இதை “திருட்டுத்தனமான விலைவாசி உயர்வு” என்று வர்ணித்துள்ளனர். இது குறைந்த வருமானம் கொண்ட அமெரிக்க குடும்பங்களின் அன்றாட பட்ஜெட்டை பெரிதும் பாதிக்கும். இனி, அடுத்த ஆண்டு பொம்மைகள், விளையாட்டுப் பொருட்கள், தளவாடங்கள் மற்றும் உணவுகள் என பல பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தத்தில் இந்தியாவுக்கு அதிக வரி விதிப்பதாக டிரம்ப் கூறியிருந்தாலும், அதன் பாதிப்பு அமெரிக்க மக்களுக்கு தான் உள்ளது. இதனால் அங்க அடிச்சா இங்க வலிக்குது டிரம்ப் என அவரை அமெரிக்கர்கள் சமூக வலைத்தளங்களில் கேலி செய்து வருகின்றனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
