சபரிமலை கோவிலை நிர்வகிக்க தனிச்சட்டம் கொண்டு வர ஆலோசிக்கப்பட்டு வருவதாக சுப்ரீம்கோர்ட்டில் சமீபத்தில் கேரள அரசு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
கேரளாவில் அமைந்துள்ள சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயதுடைய பெண்களும் செல்லலாம் என கடந்த ஆண்டு செப்டம்பரில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை ஏற்க மறுத்த பல அமைப்புகள் தீர்ப்புக்கு பின்பு செய்த போராட்டங்கள் காரணமாக கலவரங்களும் வெடித்தன. பெண்கள் அமைப்புகள் தீர்ப்பை வரவேற்று, தீர்ப்பை எதிர்த்து போராடிய அமைப்புகளுக்கு கண்டனம் தெரிவித்தன
இந்த நிலையில், சபரிமலை கோயில் குறித்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த கேரள அரசு, சபரிமலை ஐயப்பன் கோயிலை நிர்வகிக்க தனிச்சட்டம் கொண்டு வர ஆலோசித்து வருவதாக தெரிவித்துள்ளது. தேவஸ்தானம் கட்டுப்பாட்டில் இயங்கும் சபரிமலை கோயிலின் நிர்வாகத்தில் மாற்றம் கொண்டுவர உள்ளதாகவும் கேரள அரசு தெரிவித்துள்ளது.
மேலும் மண்டலபூஜை, மகரவிளக்கு விழாவிற்காக சபரிமலை வரும் ஐயப்ப பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தருவது குறித்து திருவனந்தபுரத்தில் உள்ள தலைமை செயலகத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த சட்டங்கள் குறித்து நாளை வெளிவரவுள்ள தீர்ப்பில் கருத்து தெரிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது