சீனாவில் சமீபத்தில் கொண்டாடப்பட்ட 8 நாள் ‘கோல்டன் வார’ விடுமுறையை தொடர்ந்து, கோடிக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் வீடு திரும்பியதால், அந்நாட்டின் அன்ஹுய் மாகாணத்தில் உள்ள நெடுஞ்சாலைகள் வாகன நிறுத்துமிடங்களாக மாறின. இந்த சம்பவம், நாட்டின் உள்கட்டமைப்பு மற்றும் விடுமுறை கொள்கைகள் குறித்த ஆழமான கேள்விகளை எழுப்பியுள்ளது.
அக்டோபர் 6 ஆம் தேதி, அன்ஹுய் மாகாணத்தில் உள்ள வுஹுவான் சுங்கச்சாவடியில் இந்த மாபெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சீனாவிலேயே மிகப்பெரிய சுங்கச்சாவடியான இதில் 36 பாதைகள் உள்ளன. ஆனால், டஜன் கணக்கான பாதைகளில் இருந்து வந்த வாகனங்கள் அனைத்தும் இறுதியாக நான்கு-வழிப்பாதையில் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், நெரிசல் ஏற்பட்டது.
அன்றைய தினம் 1,20,000-க்கும் மேற்பட்ட வாகனங்கள் கடந்து செல்லும் என்று அதிகாரிகள் எதிர்பார்த்த நிலையில், வாகனங்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்ததால், வாகன ஓட்டிகள் 6 மணி நேரம் அல்லது அதற்கும் மேல் சாலையில் சிக்கி தவித்தனர்.
ட்ரோன் மூலம் எடுக்கப்பட்ட காட்சிகளில், கிலோமீட்டர்களுக்கு சாலை முழுவதும் சிவப்பு நிற வால் விளக்குகள் மட்டுமே தெரிந்தது, நெடுஞ்சாலைகள் அனைத்தும் வாகனங்களால் நிரம்பி வழிந்தது தெளிவாக பதிவாகியுள்ளது.
தேசிய தின விடுமுறையுடன், சந்திர மாத நடுப்பகுதி பண்டிகையும் இணைந்ததால், வழக்கமான ஒரு வார விடுமுறை இந்த ஆண்டு 8 நாட்களாக அதாவது அக்டோபர் 1 முதல் 8 வரை நீட்டிக்கப்பட்டது. இதுவே நெரிசல் அதிகரிக்க முக்கிய காரணமாகும்.
சீன கலாச்சாரம் மற்றும் சுற்றுலா அமைச்சகத்தின் அறிக்கையின்படி, இந்த 8 நாள் விடுமுறையில் மட்டும் 88.8 கோடி உள்நாட்டுப் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டை விட12.3 கோடி அதிகம் ஆகும்.
சீனாவின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட பாதி பேர் ஒரே நேரத்தில் பயணம் செய்துள்ளதையே இந்த எண்ணிக்கை காட்டுகிறது.
சீனா அதிவேக ரயில் மற்றும் நெடுஞ்சாலைகளில் அதிக முதலீடு செய்திருந்தாலும், கார் உரிமையாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் கட்டாய தேசிய விடுமுறைகளின்போது பயணம் குவிவது போன்ற காரணங்களால் இதுபோன்ற போக்குவரத்து நெரிசல்கள் தவிர்க்க முடியாததாகிவிட்டன.
இந்த கோல்டன் வார பயணங்களில் சுமார் 80% கார் மூலமான பயணங்களாகவே இருந்தன. குடும்பங்கள் தாங்களே வாகனங்களை ஓட்டி செல்வது சீனாவில் மிகவும் பிரபலமடைந்து வருகிறது.
இது சீனா சந்திக்கும் முதல் மெகா நெரிசல் அல்ல. 2010 ஆம் ஆண்டில், பீஜிங் – திபெத் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் 100 கி.மீ. தூரத்திற்கு நீடித்ததுடன், 12 நாட்கள் வரை தொடர்ந்தது. வரலாற்றில் பதிவான மிக நீண்ட போக்குவரத்து நெரிசலாக இது இன்றும் உள்ளது.
1999 ஆம் ஆண்டு உள்நாட்டு சுற்றுலா மற்றும் நுகர்வை ஊக்குவிக்க அறிமுகப்படுத்தப்பட்ட கோல்டன் வார விடுமுறை, அதன் வெற்றிக்கே பலியாகிவிட்டது என்று நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
ஆனால் அதே நேரத்தில் இந்த ஆண்டு விடுமுறைக்காலத்தில்சுமார் ரூ. 9,30,000 கோடி சுற்றுலா வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இது நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் நன்மை என்றாலும், கோடிக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் பயணிக்கும்போது, நாட்டின் போக்குவரத்து உள்கட்டமைப்பின் வரம்புகளும் அம்பலமாகின்றன.
சீனாவின் நடுத்தர வர்க்கம் தொடர்ந்து வளர்ந்து வருவதால், இந்த கொண்டாட்டங்கள் வருடாந்திர போக்குவரத்து நெரிசல்களாக மாறாமல் இருக்க, விடுமுறை கொள்கைகள் அல்லது போக்குவரத்து உத்திகள் குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
