சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட விரிவாக்க பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வடபழனியில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் பிரம்மாண்டமான ‘ஸ்கைவாக் மேம்பாலம்’ அமைக்கும் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
இந்த நடைமேம்பாலம் சுமார் 130 மீட்டர் நீளமும், 6 மீட்டர் அகலமும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சுமார் 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும் இந்த மேம்பாலம், தரைமட்டத்திலிருந்து உயரத்தில் அமைக்கப்படுவதால், பயணிகள் சாலையை கடக்க வேண்டிய அவசியம் இருக்காது.
குறிப்பாக, பூந்தமல்லி – வடபழனி வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகள், இந்த மேம்பாலத்தை பயன்படுத்தி டிக்கெட் பரிசோதனை பகுதியை தாண்டாமல் நேரடியாக அடுத்த ரயில் நிலையத்திற்கு செல்ல முடியும். இது பயணிகளின் நேரத்தை மிச்சப்படுத்துவதுடன், வடபழனி சந்திப்பில் நிலவும் போக்குவரத்து நெரிசலையும் பெருமளவு குறைக்கும்.
இந்த நடைமேம்பாலம் முற்றிலும் மூடப்பட்ட அமைப்பாக இருப்பதால், வெயில் மற்றும் மழைக்காலங்களில் பயணிகள் எவ்வித இடையூறுமின்றி பயணிக்கலாம். வடபழனி இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் நிலையம் வரும் பிப்ரவரி 2026-க்குள் செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதால், அதற்கு முன்னதாகவே இந்த ஆகாய நடைமேம்பால பணிகளை முடித்து மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்த வசதி வடபழனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மெட்ரோ ரயில் பயன்பாட்டை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
