வெள்ளி விலை ஏறுகிறதே என்று வாங்கலாமா? ஒரே நாளில் 90% சரிய வாய்ப்பு இருக்கிறதா? எந்த நாட்டின் வங்கியும் வெள்ளியை வாங்காது.. தங்கம் தான் பாதுகாப்பான முதலீடு.. எச்சரிக்கும் ஆனந்த் சீனிவாசன்..

அண்மை காலமாக சமூக வலைதளங்களில் வெள்ளி வாங்கும்படி அதிகமாக பிரச்சாரம் செய்யப்படுவதும், வெள்ளியின் விலை ஒரே மாதத்தில் 37% வரை உயர்ந்திருப்பதும் முதலீட்டாளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில், வெள்ளியின் வரலாற்று விலை…

silver

அண்மை காலமாக சமூக வலைதளங்களில் வெள்ளி வாங்கும்படி அதிகமாக பிரச்சாரம் செய்யப்படுவதும், வெள்ளியின் விலை ஒரே மாதத்தில் 37% வரை உயர்ந்திருப்பதும் முதலீட்டாளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில், வெள்ளியின் வரலாற்று விலை சரிவை குறிப்பிட்டு, அதில் முதலீடு செய்வதன் அபாயத்தை பற்றி ஆனந்த் சீனிவாசன் தனது யூடியூப் சேனலில் விளக்கமளித்துள்ளார்.

“வரலாற்றில் இருந்து பாடங்களை கற்கத் தவறியவர்கள், அதே தவறுகளை திரும்ப திரும்ப செய்வார்கள். அதற்கு அவர்கள் விலையைக்கொடுத்தே ஆக வேண்டும்” என்று கூறிய ஆனந்த் சீனிவாசன் , 1979-80 காலகட்டத்தில் வெள்ளியின் விலை சந்தித்த சரிவை உதாரணம் காட்டினார்.

1979-ல் ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை சுமார் $6 டாலராக இருந்தது. ஹன்ட் சகோதரர்கள் என்ற இருவர், உலகத்தில் உள்ள வெள்ளியை மொத்தமாக வாங்கி பதுக்க முயற்சித்தனர். இதன் விளைவாக, 1980-க்குள் வெள்ளியின் விலை ஒரு அவுன்ஸுக்கு $49.9 டாலராக உயர்ந்தது. இதுவே வெள்ளியின் வரலாற்றில் இதுவரை முறியடிக்கப்படாத உச்சபட்ச விலையாகும். இந்த உச்ச விலையை அடைந்த சில வருடங்களிலேயே, வெள்ளியின் விலை மீண்டும் $5 டாலர் என்ற அளவிற்கு சரிந்தது. அதாவது, வெள்ளியில் முதலீடு செய்தவர்களுக்கு 90% இழப்பு ஏற்பட்டது.

இன்று வெள்ளியின் விலை ஒரே மாதத்தில் சுமார் 37% உயர்ந்துள்ள நிலையில், இது 1980களின் உச்சத்தை நெருங்குவதாக கூறப்படுகிறது. “வெள்ளியின் விலை $50-ல் இருந்து $5-க்குச் சரிந்ததுபோல, இப்போதுள்ள விலையிலிருந்து 90% சரிந்தால், அது ₹19-20 என்ற நிலைக்கு செல்ல வாய்ப்புள்ளது,” என்று ஆனந்த் எச்சரித்தார்.

தங்கம் ஒரு கரன்சியாக அங்கீகரிக்கப்படுகிறது, ஆனால் வெள்ளி ஒரு கரன்சி அல்ல. இதுவே வெள்ளியில் உள்ள மிகப்பெரிய பிரச்சினை என்று ஆனந்த் சீனிவாசன் சுட்டிக்காட்டினார்.

இந்திய ரிசர்வ் வங்கி, சீன மத்திய வங்கி உள்பட உலகின் எந்த மத்திய வங்கியும் வெள்ளியை தங்கள் கையிருப்பில் வைத்திருப்பதில்லை. அதனால், வெள்ளியின் விலை சரிய தொடங்கினால், அடிப்படை விலையை நிர்ணயித்து தாங்குவதற்கு யாரும் இருக்க மாட்டார்கள்.

தங்கம் விலை குறையும்போது, சீனா அல்லது ரஷ்யா போன்ற நாடுகள் டாலருக்கு மாற்றாக தங்கத்தை வாங்கி குவிக்கின்றன. ஆனால், வெள்ளியை எந்த நாட்டு வங்கியும் வாங்காது.

சமீபத்தில் சில்வர் இ.டி.எஃப்-களுக்கும் உண்மையான வெள்ளியின் மதிப்புக்கும் இடையில் ‘ட்ராக்கிங் எரர்’ அதிகமாக இருப்பதாக புகார் எழுந்தது. இதன் விளைவாக, கோடக் மஹிந்திரா போன்ற நிறுவனங்கள் சில்வர் இ.டி.எஃப்-களில் மொத்த முதலீடுகளை ஏற்க மறுத்துள்ளன.

வரலாற்றையும், மத்திய வங்கிகளின் ஆதரவு இல்லாததையும் சுட்டிக்காட்டி, ‘வெள்ளி இன்னமும் கரன்சி அல்ல; எனவே, அதில் செய்யப்படும் முதலீடுகள் மிகப்பெரிய ஆபத்தில் முடியும்’ என்று நிபுணர் ஆனந்த் எச்சரித்துள்ளார்.