விவசாயம்! இந்த வார்த்தையை கேட்டாலே தற்கொலை தான் என்று மனதுக்குள் நன்றாக பதிந்துவிட்டது. வயலும் மரமும் நிறைந்த பூமி இன்று வரண்டு துவண்டு சாக கிடக்க யார் காரணம்?
உயிரோடிருக்கும் வரை தாகத்திற்கு தண்ணீர் தராதவன் இறந்ததும் வந்து பாலூற்றுகிறானாம்! அப்படி இருக்கிறது அரசாங்க நடவடிக்கையும். நட்ட மரம் எங்கே? பச்சை பசுமை எங்கே? வெட்டவெளியாய் பல்லிளிப்பதே மிச்சம்.
மரம் வெட்ட வெட்ட நம் தலைமுறை அழிகிறது என்ற எண்ணம் யாருக்கும் உறுத்தவில்லை போலும். தண்ணீர்! தண்ணீர் என்று ஒருவன் நம் உணவுக்காக உணவருந்தாமல் கிடந்தான் ஆனால் நாமோ அவனுக்கு தொழில் செய்யத் தெரியவில்லை என தெளிவாக தெரியப்படுத்தினோம்.
மரம் வெட்டி காட்டை வீடாக்கினோம், குளத்தை மேடாக்கினோம், ஆற்றை ஓடையாக்கினோம், நல் உணவை மருந்தாக்கினோம். இன்னும் கொஞ்சம் நாட்களில் அரிசி என்ற சொல் கூட மறைந்து போகலாம்! அந்த அளவிற்கு பீஸ்ஸா மோகத்தில் தலைமுறை மூழ்கிக் கிடக்கிறது.
இன்னும் சில ஆண்டுகளில் விவசாயிக்கு சிலை வைப்பார்கள்… காரணம் அவர்களை பெருமைப்படுத்த அல்ல. இவர்கள் தான் முன்னொரு காலத்தில் வாழ்ந்த விவசாயிகள் என்று அடையாளம் காட்ட.
நவீன முறை விவசாயத்தால் இலாபம் இரட்டிப்பு தான். ஆனால் அதற்கு தேவை அரசாங்கத்திடமிருந்து சரியான வழிக்காட்டுதலும், உறுதுணையும் மட்டுமே. பண உதவி பத்து நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்கும் ஆனால் சரியான விதைகளும், வீட்டுக்கு வீடு மரங்களும் இருந்தால் மட்டுமே தலைமுறையை காக்க முடியும். அப்படி ஒரு நிலை வருமெனில் படித்தவன் விவசாயம் செய்யும் காலம் வெகுதூரமில்லை.