குழந்தைகளுக்கு அருமையான சிற்றுண்டி… காய்கறி குழிப்பணியாரம் செய்வது எப்படி?

By Sowmiya

Published:

குழிப்பணியாரம் அனைவருக்கும் பிடித்தமான ஒரு பலகாரம். அதிலும் காய்கறிகளை சேர்த்து காய்கறி குழிப்பணியாரம் செய்தால் குழந்தைகளுக்கு சுவையான சத்தான சிற்றுண்டி தயாரித்து விடலாம்.

மாலையில் பள்ளி விட்டு வீடு திரும்பும் குழந்தைகளுக்கு அல்லது வீட்டில் திடீரென பசிக்கிறது ஏதாவது செய்து கொடுங்கள் என்று கேட்கும் குழந்தைகளுக்கும் சட்டென்று செய்துவிடக் கூடிய ஒரு ரெசிபி தான் காய்கறி குழிப்பணியாரம். இது குழந்தைகளுக்கு மட்டும் அல்ல பெரியவர்களுக்கும் மிகவும் பிடித்தமான ஒரு ரெசிபி. இந்த காய்கறி குழிப்பணியாரத்தை வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு நமது சுவைக்கு தகுந்தார் போல் செய்து கொள்ளலாம்.

images 3 8

காய்கறி குழிப்பணியாரம் செய்ய தேவையான பொருட்கள்:
  • இட்லி மாவு – இரண்டு கப்
  • கேரட் – இரண்டு
  • முட்டைக்கோஸ் – கால் கப்
  • பீன்ஸ் – நான்கு
  • பெரிய வெங்காயம் – 1
  • இஞ்சி – 1 துண்டு
  • எண்ணெய் – தேவையான அளவு
  • பெருங்காயத்தூள் – சிறிதளவு
  • கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி – சிறிதளவு
  • கடுகு – கால் டீஸ்பூன்
  • உளுத்தம் பருப்பு – அரை டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
  • மிளகாய் தூள் – அரை டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு

என்ன‌ ருசி..! குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த வெஜிடபிள் சீஸ் சாண்ட்விச்.. செய்வது எப்படி?

காய்கறி குழிப்பணியாரம் செய்யும் முறை:

veg kuzhi paniyaram 1

ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு இட்லி மாவினை எடுத்துக் கொள்ளவும். (பணியாரத்திற்கு என்று தனியாக மாவு அரைத்துக் கொண்டாலும் நல்லது)

ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு போடவும். இவை பொரிந்ததும். கறிவேப்பிலை சிறிதளவு சேர்த்து பின் பெருங்காயத்தூளினை சேர்க்கவும்.

வெங்காயத்தை மிகவும் சிறிய அளவில் பொடி பொடியாக நறுக்கி இதனுடன் சேர்க்கவும்.

இஞ்சியை துருவி சேர்த்துக் கொள்ளவும்.

வெங்காயம் நிறம் மாறி இஞ்சியின் பச்சை வாசனை போன பிறகு இதனுடன் துருவிய கேரட் முட்டைக்கோஸ் பொடியாக நறுக்கிய பீன்ஸ் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.

தேவையான அளவு உப்பினை தூவி கொள்ளவும்.

மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூளினை சேர்க்கவும். ( காரத்திற்கு பச்சை மிளகாயை பொடியாக நறுக்கியும் சேர்க்கலாம். ஆனால் குழந்தைகள் சாப்பிடும் பொழுது பீன்ஸ் மற்றும் பச்சை மிளகாய் இரண்டும் இருந்தால் பச்சை மிளகாயை கடித்து விடுவர் எனவே காரத்திற்கு மிளகாய் தூளை சேர்த்துக் கொள்ளலாம்)

பீன்ஸ் நன்கு மென்மையாக வேகும் வரை வதக்கவும்.

இறுதியில் காய்கறிகள் ஓரளவு வெந்ததும் கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கி அடுப்பினை அணைக்கவும்.

இப்பொழுது வதக்கிய காய்கறிகளை நாம் ஏற்கனவே எடுத்து வைத்துள்ள இட்லி மாவுடன் சேர்த்து கலக்கவும்.

images 3 7

இப்பொழுது ஒரு பணியார சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் சில துளி அளவு அனைத்து குழிகளிலும் தடவிக் கொள்ளவும்.

மாவினை அனைத்து குழிகளிலும் பாதிக்கு மேல் இருக்கும் படி ஊற்றவும்.

ஒருபுறம் வெந்ததும் திருப்பி இன்னொரு புறமும் வேக வைக்கவும்.

images 3 10

இப்பொழுது சூடான சுவையான காய்கறி பணியாரம் தயார்.

இந்த காய்கறி குழிப்பணியாரத்தை வெங்காய சட்டினி அல்லது தேங்காய் சட்னியுடனும் பரிமாறலாம்.

இந்த மாவில் தேங்காயையும் துருவி சேர்த்துக் கொள்ளலாம். இதில் சேர்க்கும் காய்கறிகளையும் கீரைகளையும் குழந்தைகளின் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்ளலாம்.