பஞ்சாபி தாபா ஸ்டைலில் ஆலு பரோட்டா செய்வது எப்படி?!

By Staff

Published:

ஒவ்வொரு இடத்திற்கும் உணவுகள் மாறுபடும். அந்த இடத்தின் வாழ்வியல் முறை, உடல் உழைப்பு, சீதோஷ்ண நிலைக்கு தகுந்த மாதிரிதான் உணவு வகைகள் அமையும். ஆலு பரோட்டா வட நாட்டில் பிரசித்தம். நெடுஞ்சாலையோரம் கும்பகோணம் காபி கடை முதற்கொண்டு பஞ்சாபி தாபா வரைக்கும் பார்க்கலாம். தாபாக்களில் நான், தால், ஆலு பரோட்டா மாதிரியான உணவுகள் கிடைக்கும். நம்ம ஊரு சப்பாத்தியைவிட கொஞ்சம் கனமானதாய் இருக்கும் ஆலு பரோட்டா செய்வது எப்படி என பார்க்கலாம்…

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு -2கப்
உருளை கிழங்கு -4
உப்பு -தேவையான அளவு
மிளகாய் பொடி -2ஸ்பூன்
தனியா பொடி -1/2ஸ்பூன்
சீரக பொடி -1/2ஸ்பூன்
நெய் -தேவையான அளவு
தண்ணீர் -தேவையான அளவு

செய்முறை ….
கோதுமை மாவை அளவாக தண்ணீர் விட்டு மிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவு 1/2மணி நேரத்திற்கு ஊர விடவும். உருளைகிழங்கை கழுவி குக்கரில் வேகவைத்து மசித்து கொள்ளவும். பின் கடாயில் நெய் விட்டு மசித்த உருளை கிழங்கை போட்டு அதனுடன் மிளகாய் பொடி , தனியா பொடி ,உப்பு சேர்த்து 10 நிமிடங்கள் கிளறி இறக்கவும். பிறகு, பிசைந்து வைத்த மாவை உருண்டைகளாக்கி கோதுமை மாவை தொட்டு சப்பாத்தி கல்லில் சிறியதாக சப்பாத்தி செய்து அதன் மேல் உருளை மசாலா கலவையை போட்டு நான்கு புறமும் மூடி மாவை தொட்டு பெரிய வட்டமாக சப்பாத்திகளாக செய்யவும் .பின் சப்பாத்தி கல்லில் ஒவ்வொன்றாக போட்டு இருபக்கமும் நெய்தடவி சிவக்கவிட்டு எடுத்து தடவி சுடச்சுட பரிமாறவும்.

இதற்கு தொட்டு கொள்ள எதுவுமே தேவையில்லை. தேவைப்பட்டால் வெண்ணெய், தால் தயிர் தொட்டுக்கொள்ளலாம்.

Leave a Comment