நவராத்திரி வந்து விட்டாலே பத்து நாள்களும் ஒரே கொண்டாட்டம் தான். தினமும் வித விதமாக சுண்டல் செய்து நைவேத்தியமாகப் படையல் படைத்து சாமி கும்பிடும்போது நம்மையும் அறியாமல் ஒரு இனம்புரியா சந்தோஷம் அதுதான் ஆத்ம சந்தோஷம் வந்து குடிகொள்ளும். அதற்கு நாம் என்னென்ன செய்யலாம் என்று பார்ப்போமா…
பயறு பன்னீர் சுண்டல்
தேவையான பொருள்கள்
முளைகட்டிய பச்சைப் பயறு – 2 கப்,
பன்னீர் – 10 துண்டுகள்,
கேரட் துருவல் – 2 டீஸ்பூன்,
நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு,
எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன்,
மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்,
நெய் – 2 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.
எப்படி செய்வது?
முளைகட்டிய பச்சைப் பயறுடன், கேரட் துருவல், நறுக்கிய கொத்தமல்லி, எலுமிச்சைச் சாறு, உப்பு ஆகியவற்றை சேர்த்துக்கோங்க. பன்னீர் துண்டுகளை நெய்யில் பொரித்து இதனுடன் சேர்த்து, மிளகுத்தூள் போட்டு நன்றாகக் கலக்குங்க. அவ்ளோ தான். பயிறு பன்னீர் சுண்டல் ரெடி.
புதினா கொத்தமல்லி சுண்டல்
தேவையான பொருள்கள்
புதினா – ஒரு கட்டு,
கொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவு,
பொடியாக நறுக்கிய கோஸ் – ஒரு கப்,
வேக வைத்த வேர்க்கடலை – ஒரு கப்,
முளைகட்டிய பச்சைப் பயறு – ஒரு கப்,
மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்,
நெய் – ஒரு டீஸ்பூன்,
எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.
எப்படி செய்வது?
புதினாவை ஆய்ந்து நறுக்குங்க. கடாயில் நெய் விட்டு புதினா,கோஸ், கொத்தமல்லி சேர்த்து, உப்பு போட்டு வதக்குங்க. பிறகு, வேக வைத்த வேர்க்கடலை, முளைகட்டிய பச்சைப் பயறு, மிளகுத்தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்றாகக் கலக்குங்க. அவ்ளோ தாங்க. புதினா கொத்தமல்லி சுண்டல் தயார்.
நெய் அப்பம்
தேவையான பொருள்கள்
கோதுமை மாவு – ஒரு கப்,
நெய் – 100 மில்லி,
தேங்காய் துருவல் – ஒரு கப்,
அரிசி – 2 டீஸ்பூன்,
பொடித்த வெல்லம் – ஒரு கப்
ஏலக்காய் – 4.
எப்படி செய்வது?
தேங்காய் துருவல், அரிசி, வெல்லம் ஆகியவற்றை சேர்த்து, ஏலக்காயை உரித்துப் போட்டு கொரகொரப்பாக அரைத்துக்கோங்க. இதை கோதுமை மாவுடன் கலந்து, தோசை மாவு பதத்தில் கரைச்சி விடுங்க.
ஆப்பக் கல்லில் நெய் விட்டு, மாவை சிறு கரண்டியில் எடுத்து ஊற்றி, வெந்தவுடன் திருப்பிப் போட்டு, இருபுறமும் வேகவிட்டு எடுங்க. அவ்ளோ தாங்க. சூடான சுவையான நெய் அப்பம் ரெடி.
நவராத்திரி பூஜையில் நெய் அப்பத்துக்கு முக்கிய இடம் உண்டு.
மொச்சை சுண்டல்
தேவையான பொருள்கள்::
காய்ந்த மொச்சை – 250 கிராம்,
தனியா, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – ஒன்று,
இஞ்சி விழுது – ஒரு டீஸ்பூன்,
கொப்பரைத் துருவல் – 2 டீஸ்பூன்,
கடுகு – ஒரு டீஸ்பூன்,
பெருங்காயத்தூள்,
கறிவேப்பிலை – சிறிதளவு,
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.
எப்படி செய்வது?
மொச்சையை முதல் நாள் இரவே தண்ணீரில் ஊற வைங்க. தனியா, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாயை வெறும் வாணலியில் வறுத்து பொடித்து வைச்சிக்கோங்க.
மொச்சையை தேவையான உப்பு, தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து இரண்டு விசில் வந்ததும் இறக்கிடுங்க. வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து, இஞ்சி விழுதை போட்டு, வேக வைத்த மொச்சையையும் தண்ணீர் வடித்து சேர்த்துவிடுங்க
இதனுடன் பெருங்காயத்தூள், பொடித்து வைத்த பொடி, கறிவேப்பிலை போட்டு நல்லா கிளறி விடுங்க.
இறக்குற நேரத்துல கொப்பரைத் தேங்காய்த் துருவல் சேர்த்துக் கலந்து இறக்கிடுங்க. அவ்ளோ தான். சுவையும் மணமும் கலந்த சூப்பரான மொச்சை சுண்டல் ரெடி.
தனியா, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாயை மொத்தமாக பொடித்து வைத்துக்கொண்டும் சுண்டலுக்கு தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்ளலாம்.
மல்டி பருப்பு சுண்டல்
தேவையான பொருள்கள்:
கடலைப்பருப்பு, பச்சை வேர்க்கடலை, முளைகட்டிய கொள்ளு – தலா ஒரு கப்,
எள்ளு – 2 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – ஒன்று,
கொப்பரைத் துருவல் – 2 டீஸ்பூன்,
கடுகு, எண்ணெய் – தலா ஒரு டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.
எப்படி செய்வது?
கடலைப்பருப்பு, கொள்ளு, வேர்க்கடலையுடன் தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து குக்கரில் வைத்து 2 விசில் வரும் வரை வேகவிடுங்க. எள்ளு, காய்ந்த மிளகாயை வறுத்துப் பொடித்து வைச்சிக்கோங்க. வேக வைத்த கொள்ளு, கடலைப்பருப்பு, வேர்க்கடலையில் இருந்து தண்ணீரை வடிங்க.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, எள்ளு – மிளகாய் பொடி, வேக வைத்த பருப்புகள் சேர்த்துக் கிளறி விடுங்க. அதனுடன் கொப்பரைத் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கிடுங்க. இப்போ மல்டி பருப்பு சுண்டல் சுடச்சுட தயார்.
கிரிஸ்பி சுண்டல்
தேவையான பொருள்கள்
முளைகட்டிய பச்சைப் பயறு – ஒரு கப்,
பொரித்த கார்ன்ஃப்ளேக்ஸ் – ஒரு கப்,
ஓமப்பொடி (ஸ்நாக்ஸ் வகை) – 100 கிராம்,
காராபூந்தி – 100 கிராம்,
உப்பு – தேவையான அளவு
எப்படி செய்வது?
பச்சைப் பயறுடன் தேவையான உப்பு, தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து ஒரு விசில் வந்ததும் இறக்குங்க. பிறகு தண்ணீர் வடித்து, பொரித்த கார்ன்ஃப்ளேக்ஸ், ஓமப்பொடி, காராபூந்தி சேர்த்துக் கலந்தாப் போச்சு. சூப்பரான கிரிஸ்பி சுண்டல் ரெடி. இப்போ உங்கள் அன்பானவருக்கு பரிமாறி சபாஷ் பெறுங்க.