மழைக்காலங்களில் மாலை நேரத்தில் ஏதாவது சூடாக சாப்பிடுவது என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் அதுவும் வடை, போண்டா என்றால் சொல்லவே வேண்டாம். இதற்காக உளுந்து ஊற வைத்து அரைத்து செய்வது என்பது பலருக்கும் அலுப்பாக இருக்கலாம். அதுபோன்ற நேரத்தில் சட்டென்று செய்யுங்கள் அரிசி கோதுமை மாவில் அட்டகாசமான வடை மற்றும் போண்டா.
இதை செய்வதற்கு முதலில் இரண்டு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். இதனுடன் நான்கு பச்சை மிளகாய்களை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். சிறிதளவு கொத்தமல்லித்தழை மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றையும் பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
தோசை மாவு முடிந்ததா? இதோ காலை டிபனுக்கு சுவையானமுட்டை கார தோசை…!
இப்பொழுது ஒரு பாத்திரத்தில் ஒரு கப் அளவு அரிசி மாவு மற்றும் ஒரு கப் அளவு கோதுமை மாவு இரண்டையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பிறகு நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், பச்சை மிளகாய், மல்லித்தழை மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும்.
இதனுடன் ஒரு கப் அளவு தயிர் சேர்த்து தேவையான அளவு உப்பும் சேர்த்துக் கொள்ளவும். அனைத்தையும் ஒன்றாக பிசைந்து கொள்ளவும். மாவு தண்ணீராக இருக்கக் கூடாது அனைத்தையும் நன்கு பிசைந்த பிறகு உங்களுக்கு விருப்பமானது போல் வடைகளாக அல்லது போண்டாக்களாக தட்டிக் கொள்ளலாம்.
இப்பொழுது ஒரு கடாயில் எண்ணெய் காய வைத்து தட்டிய வடை அல்லது போண்டாவை பொறித்து எடுத்தால் சுட சுட மொறுமொறுப்பான மாலை நேர சிற்றுண்டி தயார் இதனுடன் உங்களுக்கு விருப்பமான காப்பி அல்லது டீயை சேர்த்து சுவையுங்கள் உங்கள் மாலை நேரப் பொழுது இனிதாகும்.