சமீப காலமாக தமிழக அரசியலில், குறிப்பாக யூடியூப் தளங்களில், ஒரு குறிப்பிட்ட போக்கு நிலவி வருகிறது. அரசியல் விமர்சகர்கள் என்ற போர்வையில் செயல்படும் ஒரு சிலர், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்யை மட்டுமே பிரதானமாக விமர்சிப்பதிலும், அவரை சுற்றி மட்டுமே விவாதங்களை உருவாக்குவதிலும் ஆர்வம் காட்டுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஆளும் தி.மு.க. மற்றும் எதிர்க்கட்சியான அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகள் மீதான விமர்சனங்கள் லேசாக கடந்து செல்லப்படும் நிலையில், விஜய்யின் அரசியல் நகர்வுகள் மட்டும் மிக தீவிரமான விமர்சனங்களுக்கும், கேலிகளுக்கும் உள்ளாக்கப்படுவது ஏன் என்ற கேள்வி தற்போது வலுப்பெற்றுள்ளது.
சமூக ஊடகங்கள் மற்றும் யூடியூப் தளங்களில் விவாதம் அல்லது பேட்டி அளிப்பவர்களுக்கு, “விஜய்யை மட்டுமே குறிவைத்து விமர்சிக்க வேண்டும்; தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வின் சில பலவீனங்களை லேசாக கடந்து செல்லலாம்” என்று ஏதேனும் ரகசிய ‘டாஸ்க்’ அல்லது பணி வழங்கப்படுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது.
பல யூடியூப் சேனல்களில், தினமும் மூன்று அல்லது நான்கு அரசியல் விவாதங்களில் கலந்துகொள்ளும் சில ‘விமர்சகர்கள்’, ஒரே மாதிரியான கண்டெண்டை பயன்படுத்துவதை காண முடிகிறது. அவர்கள் முன்வைக்கும் விவாதங்களின் முக்கிய மையம்:
விஜய்யின் அரசியல் பிரவேசம் வெற்றி பெறாது.
அவருக்கு மக்கள் ஆதரவு இல்லை.
தி.மு.க. அல்லது அ.தி.மு.க.வால் மட்டுமே ஆட்சி அமைக்க முடியும்.
விஜய்யின் சமீபத்திய பேச்சு மற்றும் நடவடிக்கை அரசியல் அனுபவம் அற்றது.
செங்கோட்டையன், நாஞ்சில் சம்பத் தெரியாமல் போய் மாட்டிவிட்டார்கள்
இந்த விமர்சகர்கள் பலர், தினசரி குறைந்தபட்சம் மூன்று வெவ்வேறு யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்து வருகின்றனர். இந்த குறுகிய காலத்திலேயே, இவர்கள் பெரும் தொகையை சம்பாதித்து, அடுத்த ஆறு மாதங்களில் கோடீஸ்வரர்களாக மாறும் வாய்ப்புகள் உள்ளதாகவும் பேசப்படுகிறது.
அரசியல் விமர்சனம் என்பது மக்களின் விழிப்புணர்வுக்காகவும், அரசின் செயல்பாடுகளை நடுநிலையோடு கேள்வி கேட்பதற்காகவும் இருக்க வேண்டும். ஆனால், தற்போது சில யூடியூப் ‘விமர்சகர்கள்’ மத்தியில், நடுநிலை என்ற அறம் மீறப்பட்டு, பணம் சம்பாதிக்கும் நோக்கமே மேலோங்கி நிற்பதாக பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகம் அதன் அடிப்படை கொள்கைகளை நிறுவுவதற்கு முன்னரே, விஜய்யை ஒரு தோல்வியடைந்த அரசியல்வாதியாக சித்தரிப்பதன் மூலம், அவரது ஆதரவாளர்கள் மத்தியில் சோர்வை ஏற்படுத்துவதே இதன் பிரதான நோக்கமாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. எந்தவொரு புதிய கட்சிக்கும், குறிப்பாக மிகப்பெரிய நடிகர் பின்புலம் உள்ள கட்சிக்கும் எதிராக பொதுமக்களிடம் ஒரு எதிர்மறை அலையை உருவாக்குவதன் மூலம், ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு மறைமுகமாக சாதகமான சூழலை உருவாக்க முயற்சிகள் நடக்கின்றனவா என்ற கேள்வியையும் இது எழுப்புகிறது.
மொத்தத்தில், சமூக ஊடக பரப்பில், அரசியல் விமர்சகர்கள் என்ற பெயரில் பணம் சம்பாதிக்கும் ஒரு கூட்டம், சொல்லி வைத்தாற்போல் விஜய்யை மட்டுமே குறிவைத்து செயல்படுகிறதா என்ற சந்தேகம் வலுவாக எழுந்துள்ளது. உண்மையான அரசியல் விவாதம் பின்னுக்கு தள்ளப்பட்டு, ஒரு தலைவருக்கு எதிரான தனிப்பட்ட தாக்குதல்கள் மட்டுமே விவாத பொருளாக மாறுவது, ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல என்பதே நடுநிலையாளர்களின் கருத்தாக உள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
