தமிழக அரசியல் களத்தில் அரை நூற்றாண்டு காலமாக ஆதிக்கம் செலுத்தி வரும் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் செய்த மிகப்பெரிய வரலாற்று தவறு, அடுத்த தலைமுறை இளைஞர்களை தங்களின் அதிகார மையங்களில் இணைக்க தவறியதே ஆகும். கட்சி பதவிகள் முதல் ஆட்சி நிர்வாகம் வரை, பல தசாப்தங்களாக அதே பழைய முகங்களே வலம் வருவது இளைஞர்கள் மத்தியில் ஒரு சலிப்பை ஏற்படுத்தியுள்ளது. 70 மற்றும் 80 வயதை கடந்த மூத்த நிர்வாகிகளுக்கே மீண்டும் மீண்டும் முன்னுரிமை அளிப்பதும், ஓய்வு பெற்றவர்களுக்கு பதவிகளை நீட்டிப்பதும், அரசியலில் நுழைய துடிக்கும் புதிய தலைமுறைக்கு ஒரு முட்டுக்கட்டையாக மாறியுள்ளது. இந்த இடைவெளிதான் இன்று ஒரு மாற்று சக்திக்கான தேவையை உருவாக்கியுள்ளது. அப்படியே இளைஞர்கள் பொறுப்புக்கு வந்தாலும் அவர்கள் சீனியர்களின் வாரிசுகளாக இருப்பது மேலும் கொதிப்படைய வைத்துள்ளது.
கடந்த 50 ஆண்டுகளில், திராவிட கட்சிகள் இளைஞர்களை வெறும் ‘வாக்கு வங்கிகளாகவும்’ அல்லது மாநாடுகளில் ‘கூட்டம் கூட்டும் கருவிகளாகவும்’ மட்டுமே பயன்படுத்தினார்களே தவிர, அவர்களை உண்மையான அதிகார பங்கெடுப்புக்கு தயார் செய்யவில்லை. அடிமட்ட தொண்டர்களாக இருக்கும் இளைஞர்கள், பல ஆண்டுகள் உழைத்தாலும் மேலிடத்தின் வாரிசு அரசியலையோ அல்லது சீனியாரிட்டியை தாண்டிய முதிர்ச்சியற்ற நிர்வாக முறையையோ கடந்து வர முடிவதில்லை. இந்த அரசியல் முடக்கம், இன்றைய நவீன கால இளைஞர்களை பாரம்பரிய கட்சிகளிலிருந்து விலகி, தங்களின் எண்ணங்களை எதிரொலிக்கும் புதிய தளங்களை தேட தூண்டியுள்ளது.
எந்த ஒரு செயலை திராவிட கட்சிகள் செய்ய தவறினார்களோ, அதை நடிகர் விஜய் தனது ‘தமிழக வெற்றிக் கழகம்’ மூலம் மிகச்சரியாக கையில் எடுத்துள்ளார். அவர் தனது கட்சியின் கட்டமைப்பிலேயே இளைஞர்களுக்கும், குறிப்பாக முதல்முறை வாக்காளர்களுக்கும் முன்னுரிமை அளிப்பது ஒரு மிகப்பெரிய ‘பிளஸ்’ பாயிண்ட் ஆகும். டிஜிட்டல் யுகத்தில் வாழும் இளைஞர்களுக்கு ஏற்றவாறு நேரடி தொடர்பு, சமூக ஊடக பயன்பாடு மற்றும் அவர்களின் பிரச்சனைகளை பேசும் ஒரு புதிய அரசியல் மொழியை விஜய் கொண்டு வந்துள்ளார். இது, அரசியலே வேண்டாம் என்று ஒதுங்கியிருந்த இளைஞர்களை கூட ஈர்க்கும் ஒரு சக்தியாக மாறியுள்ளது.
உண்மையில், திராவிட கட்சிகள் படிப்படியாக தங்களின் தலைமை பொறுப்புகளை இளைஞர்களிடம் ஒப்படைத்திருந்தால், ஒரு புதிய கட்சியின் வருகை இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்காது. ஆனால், ‘முதுமை’யை தழுவிய அதிகார வர்க்கம் புதிய மாற்றங்களை ஏற்க மறுப்பதும், பழைய பாணி அரசியலையே முன்னெடுப்பதும் விஜய்யின் வளர்ச்சிக்கு உரமிட்டுள்ளது. இன்று 10-ல் 8 இளைஞர்கள் விஜய்யை ஆதரிக்க காரணமாக இருப்பது, அவர் திரையில் காட்டும் பிம்பம் மட்டுமல்ல, அவர் அளிக்கும் “அரசியலில் எங்களுக்கான இடம்” என்ற நம்பிக்கையும்தான்.
வெற்றிக்கு வெறும் கொள்கைகள் மட்டும் போதாது, அந்த கொள்கைகளை செயல்படுத்தும் கரங்கள் இளமையாக இருக்க வேண்டும். திமுக மற்றும் அதிமுகவின் தற்போதைய பதற்றம் இதிலிருந்துதான் தொடங்குகிறது. அவர்கள் இப்போது ‘இளைஞர் அணி’ மாநாடுகள் நடத்தினாலும், அந்த மாநாட்டில் மேடையில் அமர்ந்தவர்கள் பெரும்பாலும் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் தான்.. உதயநிதி ஒருவர் மட்டுமே விதிவிலக்கு. ஆனால் அவரும் அரசியல் வாரிசு என்பதால் தான் இந்த வயதில் இவ்வளவு பெரிய பொறுப்பு கிடைத்துள்ளது. அனைத்து கட்சிகளும் வாரிசு அரசியல் நிழலிலேயே இருப்பதால், சுயம்புவாக வளர விரும்பும் இளைஞர்கள் விஜய்யை நோக்கி சாய்கிறார்கள். இந்த அரசியல் வெற்றிடத்தை விஜய் சரியாக பயன்படுத்திக் கொள்வது, திராவிட கோட்டைகளின் அஸ்திவாரத்தையே அசைத்து பார்க்கும் ஒரு காரணியாக உருவெடுத்துள்ளது.
இறுதியாக, 2026 தேர்தல் என்பது வெறும் இரு அணிகளுக்கு இடையிலான போட்டி அல்ல; அது பழைய தலைமுறைக்கும் புதிய தலைமுறைக்கும் இடையிலான அதிகார போர். இளைஞர்களை அரசியல்படுத்தாமல் விட்டது திராவிட கட்சிகளின் தோல்வி என்றால், அவர்களை திரட்டி அதிகாரத்தின் ஒரு பகுதியாக மாற்றுவது விஜய்யின் வெற்றிக்கான வியூகமாகும். இந்த தேர்தலில் வாக்குகள் சிதறினாலும் அல்லது ஒரு புதிய அலை உருவானாலும், அதற்கு முக்கிய காரணம் திராவிட கட்சிகளின் ‘முதுமை’யும், தவெக-வின் ‘இளமை’யும்தான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
