சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் இளைஞர் உயிரிழப்பு.. முறையான சிகிச்சை இல்லை என குற்றச்சாட்டு..

By John A

Published:

சென்னை கிண்டியில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் பன்னோக்கு அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் புற்றுநோய் மருத்துவர் பாலாஜி என்பரை விக்னேஷ் என்ற இளைஞர் கத்தியால் குத்தியது தமிழகம் முழுக்கக பரபரப்பினை ஏற்படுத்தியது. தனது தாய்க்கு சிகிச்சை அளிப்பதில் மெத்தனமாக டாக்டர் பாலாஜி நடந்துகொண்டதால் ஆத்திரம் அடைந்த விக்னேஷ் வீட்டிலிருந்து எடுத்துக் கொண்டு வந்திருந்த கத்தியால் மருத்துவரை பல இடங்களில் குத்தினார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் உடனடியாக அங்கே அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட டாக்டர் பாலாஜி தற்போது உடல் நலம் தேறி வருகிறார். மருத்துவர் மீதான கொலைவெறித் தாக்குதலைக் கண்டித்து அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு பின்னர் வாபஸ் பெற்றனர். இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுக்க உள்ள அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகளில் நோயாளிகள் மற்றும் நோயாளிகளின் உடன் வருவோருக்கு அடையாள பேட்ஜ் அணிந்த பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், கிண்டி அரசு மருத்துவமனையில் இந்தச் சம்பவத்தினைத் தொடர்ந்து இன்று காலை மீண்டும் ஓர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வயிற்று வலியால் அங்கே சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்திருக்கிறார். அவருக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என உறவினர்கள் குற்றம் சாட்டி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உயிரிழந்த இளைஞர் பெயரும் விக்னேஷ் ஆகும்.

பட்டப்பகலில் பரபரப்பான கிண்டி பன்னோக்கு மருத்துவமனை.. போராட்டத்தில் குதித்த அரசு மருத்துவர்கள்.. நடந்தது என்ன?

அவருக்கு பித்தப்பையில் கல் இருந்ததால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். இதனிடையே உடல்நிலை மோசமாக பின்னர் கிண்டி அரசு மருத்துவமனையில் மேற்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு கடந்த ஒருவாரமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்திருக்கிறார் விக்னேஷ். இவருக்கு 2 வயதில் ஒரு குழந்தையும் உண்டு.

இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், அவருக்கு முறையான சிகிச்சைகள் வழங்கப்பட்டது என்றும், செயற்கை சுவாச கருவியின் உதவியால் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்து விட்டார் என்று கூறினர்.