ஒரே நாளில் சியோமி மற்றும் பேடிஎம் நிறுவனங்களில் உள்ள மூத்த அதிகாரிகள் திடீரென ராஜினாமா செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சியோமி நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருந்த முரளி கிருஷ்ணன், தனது தனிப்பட்ட காரணங்களுக்காக நிறுவனத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அவருக்கு டாக்டர் பட்டம் கிடைக்க இருப்பதாகவும், அதன் காரணமாக விலக இருப்பதாகவும், எதிர்காலத்தில் அவர் சொந்த பிசினஸ் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கடந்த ஆறு ஆண்டுகளாக சியோமி நிறுவனத்தில் பணிபுரிந்த முரளி கிருஷ்ணன், சியோமி நிறுவனத்தின் ஆபரேஷன், சர்வீசஸ் உள்ளிட்ட பல முக்கியத்துறைகளில் பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில், அவர் நிறுவனத்தில் இருந்து விலகினாலும், நிறுவனத்திற்கு ஒரு ஆலோசகராக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், முரளி கிருஷ்ணன் விலகியதை அடுத்து, அவரது பதவிக்கு குணால் அகர்வால் என்பவரை நியமனம் செய்துள்ளதாகவும், இவர் தற்போது சில்லறை விற்பனையை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்துவார் என்றும் கூறப்படுகிறது.
அதேபோல் பேடிஎம் நிறுவத்தில் பணிபுரிந்த ஸ்ரேயாஸ் சீனிவாசன் தனது பணியில் இருந்து விலகியுள்ளார்.
இந்நிறுவனத்தில் இவர் பத்து ஆண்டுகளாக பணியாற்றிய நிலையில், தற்போது அவர் இந்த நிறுவனத்தில் இருந்து விலகி விட்டதாக லிங்க்ட்-இன் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். சிறிது காலம் ஓய்வு எடுக்கவும், உடல் நலத்தை மேம்படுத்திக் கொண்டு, அதன் பின்னர் புதிய வர்த்தகத்தை கண்டறிய இருப்பதாகவும், அதற்கு இதுதான் சரியான நேரம் என்று கருதி பணியில் இருந்து விலகுகிறேன் என்று ஸ்ரேயாஸ் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
