SpaceX இன் Fram2 பயணத்தில் பங்கேற்ற விண்வெளி வீரர்கள், விண்வெளியில் எடுக்கப்பட்ட முதல் மருத்துவ எக்ஸ்ரே படத்தை பதிவு செய்துள்ளனர். ஒரு மோதிரம் அணிந்த கையின் கருப்பு வெள்ளை எக்ஸ்ரே படங்கள், 130 ஆண்டுகளுக்கு முன் வில்ஹெல்ம் ரென்ட்ஜன் எடுத்து அறிமுகப்படுத்திய முதல் எக்ஸ்ரேவை நினைவூட்டுகின்றன என இந்த எக்ஸ்ரே படங்களுக்கு கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.
இந்த எக்ஸ்ரே, பூமியைச் சுற்றி 28,000 கி.மீ வேகத்தில், பூமியில் இருந்து சுமார் 320 கி.மீ உயரத்தில் வட்டமிடும் நால்வர் கொண்ட குழுவினர்களில் ஒருவருக்கு எடுக்கப்பட்டது. இது SpaceXray எனப்படும் முயற்சியின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது.
விண்வெளியில் எக்ஸ்ரே எடுப்பது பூமியில் செய்யும் முறையைவிட பல சவால்களை கொண்டது. ஏனெனில் எக்ஸ்ரே சாதனங்கள் குறைந்த எடையிலும், சிறிய அளவிலும், பாதுகாப்பு தரநிலைகளை கொண்டதாக இருக்க வேண்டியது அவசியம். இதற்காக Fram2 குழு, முந்தைய இராணுவ பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட ஒரு சிறப்பு எக்ஸ்ரே கருவியை விண்வெளிக்கேற்ப மாற்றியமைத்து இந்த சாதனையை செய்துள்ளது.
ஆனாலும் இதில் உள்ள ஒரு முக்கிய சிக்கல் என்னவெனில், விண்வெளியின் காஸ்மிக் கதிர்வீச்சு (cosmic radiation) எக்ஸ்ரே படத்தின் தரத்தை மங்கச் செய்யும் என்ற ஐயம் இருந்தது. ஆனால் இந்த எக்ஸ்ரே படத்தை பார்க்கும்போது அதுபோன்ற சிக்கல்களை எதிர்கொள்ளவில்லை என்ற நம்பிக்கை அளிக்கின்றன என வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
விண்வெளியில் உடல்கள் மிதந்து கொண்டிருப்பதால் சரியான நிலைப்பாட்டை அமைப்பது சிக்கலாக இருந்தாலும், Fram2 குழுவினர் எளிமையான, மற்றும் விண்வெளி வீரர்கள் தனியாக செயல்படுத்தக்கூடிய நடைமுறைகளை பின்பற்றினார்கள். கையின் எக்ஸ்ரே வெற்றிகரமாக எடுத்த பிறகு, Fram2 குழுவினர் பல்வேறு பகுதியின் டயக்னஸ்டிக் படங்களை எடுத்தனர். இதில் கைமுட்டி, மண்டை, வயிறு மற்றும் மார்புப் பகுதி ஆகியவை அடங்கும்.
மேலும், இந்த எக்ஸ்ரே கருவி உடலில் படம் பிடிப்பது மட்டுமின்றி விண்வெளி சாதனங்களில் ஏற்பட்ட பழுதுகளை கண்டறிய பயன்படும் ஒரு பரிசோதனை கருவியாகவும் பயன்படுத்தலாம் என்பதை உறுதி செய்ய, மின்ணனு சோதனையும் (electronics imaging) மேற்கொள்ளப்பட்டது.
அதேபோல், Fram2 விண்வெளி வீரர்கள் DXA (Dual-energy X-ray absorptiometry) எனப்படும் எக்ஸ்ரே பரிசோதனையும் செய்தனர். இது எலும்பு துகள்மட்டத்தை (Bone Mineral Density – BMD) அளவிட பயன்படுகிறது.