Google இனிமேல் அனைத்து தேடல்களையும் Google.com-க்கு தானாக மாற்ற திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம், இந்தியாவுக்கான google.in போன்ற டொமைன்கள் நீக்கப்படும் என தெரிகிறது.
குழந்தையின் கேள்வியிலிருந்து அருகிலுள்ள மருத்துவமனையை தேடுவது வரை அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் அளிக்கும் Google, தற்போது தனது தேடல் விதிகளில் சில மாற்றங்களை மேற்கொள்ளவுள்ளது. நமது தினசரி பிரவுசரில் பெரும் தாக்கத்தை செலுத்தும் இந்த தொழில்நுட்ப நிறுவனம், தேடல் துறையின் விதிகளை மாற்றவுள்ளதாக அறிவித்துள்ளது.
2017-ஆம் ஆண்டு அறிமுகமான localised search என்று கூறப்ப்படும் உள்ளூர் தேடல் விருப்பத்தின் மூலம், Google பல நாடுகளுக்கேற்ப தனியாக டொமைன்களை பயன்படுத்தியது. எடுத்துக்காட்டாக, நைஜீரியாவிற்கு google.ng மற்றும் பிரேசிலுக்கு google.com.br, இந்தியாவுக்கு google.in ஆகியவற்றை பயன்படுத்தி, பயனர் அனுபவத்தை மேம்படுத்தியது.
இப்போது, Google அனைத்து தேடல்களையும் Google.com-க்கு தானாக மாற்ற திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம், இந்தியாவுக்கான google.in போன்ற தேசிய டொமைன்கள் நீக்கப்படும். இருப்பினும் இந்தியர்கள் google.inக்கு பதிலாக Google.comஐ பயன்படுத்தலாம்.
இந்த மாற்றம் தேடல் அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில் செய்யப்படுகிறது என்று Google விளக்கியுள்ளது. இந்த மாற்றம் தேடலில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என நிறுவனம் உறுதியளித்துள்ளது.
Browser address barல் மட்டுமே மாற்றம் வரும் என்றும், தேடல் செயல்பாடு மற்றும் வேறு எந்தவிதமான மாற்றமும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் வரும் மாதங்களில் படிப்படியாக செயல்படுத்தப்படும். சில தேடல் விருப்பங்களை பயனர்கள் மீண்டும் அமைக்க வேண்டியிருக்கலாம், எனினும் தேடல் செயல்பாடுகளில் பெரிய இடையூறு இருக்காது என்று Google கூறியுள்ளது.
மேலும் தேடல் முடிவுகளில் AI டெக்னாலஜியை புகுத்தவும் Google திட்டமிட்டுள்ளது. இதற்காக Google பயன்படுத்தும் டூல் AI Overviews. இது, இணையத்தில் உள்ள பல்வேறு ஆதாரங்களை ஆய்வு செய்து பயனர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கிறது. அதன் பதிலில் அனைத்து ஆதாரங்களையும் மேற்கோளாக காட்டும்.
சமீபத்தில், AI Overviews பல ஆதாரங்களை காட்டும் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. இருப்பினும், இந்த கூடுதல் லிங்க்களில் சில, நேரடி வலைத்தளங்களை விட, தேடல் பக்கங்களுக்கே பயனர்களை கொண்டு செல்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.