அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மத்திய கிழக்கில் முன்னெடுத்துள்ள ராணுவ நடவடிக்கைகள், உலகம் முழுவதும் ஒரு புதிய வாழ்வாதார நெருக்கடியின் விளிம்பிற்கு தள்ளியுள்ளன. கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 120 டாலர் வரை உயர்ந்து, பின்னர் 90 டாலர் அளவில் ஊசலாடி வருவது உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் இந்த ராணுவ தாக்குதல்களுக்கான விலையை உலகின் அனைத்து நாடுகளில் உள்ள சாமானிய குடும்பங்கள் தங்களது அன்றாட செலவுகள் மூலம் செலுத்த வேண்டியிருக்கும் என்ற அச்சம் தற்போது வலுத்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு முதல் வீட்டு உபயோக மின்சாரம் மற்றும் எரிவாயு கட்டணங்கள் வரை அனைத்தும் அதிரடியாக உயர தொடங்கியுள்ளன.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பும் செலவு வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் இந்த நிலையற்ற தன்மையால் பொதுமக்களுக்கு இருமடங்கு செலவாகும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். எரிவாயு விலையேற்றம் நேரடியாக மின்சார உற்பத்தியையும் பாதிக்கும் என்பதால், வீடுகளில் மின்வெட்டு, மின்சார கட்டணம் உயர்வு என சாதாரண மக்களை கடுமையாக பாதிக்கும். எரிசக்தி நெருக்கடி என்பது வெறும் புள்ளிவிவரமாக இல்லாமல், ஒவ்வொரு வீட்டின் பட்ஜெட்டையும் துளைக்கும் ஒரு காரணியாக மாறியுள்ளது.
எரிசக்தித் துறை மட்டுமின்றி, நிதிச் சந்தையிலும் இந்த போரின் தாக்கம் எதிரொலிக்த் தொடங்கியுள்ளது. சில நாடுகளில் முன்னணி வீட்டுக்கடன் வழங்கும் நிறுவனங்கள், தங்களது சிறந்த வட்டி விகித சலுகைகளை திடீரெனத் திரும்ப பெற்றுள்ளன. இது கடன் வாங்கியவர்கள் மற்றும் புதிய வீடு வாங்குபவர்கள் மீது பெரும் சுமையை ஏற்றியுள்ளது. வட்டி விகிதங்கள் உயரும்போது அது ஒரு பெரும் விளைவை ஏற்படுத்தி, ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் மந்தநிலையை நோக்கி தள்ளக்கூடும் என்று பொருளாதார வல்லுநர்கள் கவலை தெரிவிக்கின்றனர். மக்களின் வாங்கும் திறன் குறைவது நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியை பாதிக்கும் என அஞ்சப்படுகிறது.
அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எண்ணெய் விலை உயர்வை பற்றிப் பேசுகையில், இது ஒரு ‘மிகச்சிறிய விலை’ என்றும், மாற்றாக சிந்திப்பவர்கள் முட்டாள்கள் என்றும் அலட்சியமாக தெரிவித்துள்ளார். ஒரு பயங்கரவாத ஆட்சி உலகையே பிணையாக வைத்திருக்க தான் அனுமதிக்க போவதில்லை என்று அவர் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார். ஆனால், அவரது இந்த அரசியல் மற்றும் ராணுவ முடிவுகள் உலகம் முழுவதிலும் உள்ள ஏழை எளிய நடுத்தர மக்களின் பைகளில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. உலகளாவிய எண்ணெய் விநியோகத்தை ஈரான் தடுக்க முயல்வதைத் தடுப்பதே தனது நோக்கம் என ட்ரம்ப் வாதிட்டாலும், அதன் பொருளாதார விளைவுகள் உலக நாடுகளைக் கதிகலங்க வைத்துள்ளன.
பிரிட்டன் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில், நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் இந்த நெருக்கடி குறித்துத் தனது ஆழ்ந்த கவலையை பகிர்ந்து கொண்டார். மத்திய கிழக்கில் நிலவும் போர்ச்சூழல் பிரிட்டனின் பணவீக்கத்தை 5 சதவீதம் வரை உயர்த்தக்கூடும் என்று அவர் கணித்துள்ளார். பணவீக்கம் உயரும்போது அத்தியாவசிய பொருட்களின் விலை கட்டுக்கடங்காமல் போகும் என்பதால், அரசு நிலைமையை கூர்ந்து கவனித்து வருவதாக அவர் தெரிவித்தார். ஏற்கனவே பல பொருளாதார சவால்களைச் சந்தித்து வரும் பிரிட்டன் அரசாங்கத்திற்கு, இந்த போர் ஒரு புதிய தலைவலியை உருவாக்கியுள்ளது.
ஒட்டுமொத்தமாக பார்க்கையில், மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையேயான மோதல் ஒரு பிராந்திய போராக மட்டும் இல்லாமல், உலகளாவிய பொருளாதார போராக உருவெடுத்துள்ளது. உலகம் முழுவதும் ஒரு மோசமான நிதி நெருக்கடிக்குள் தள்ளும் அறிகுறிகளை தென்படுத்துகின்றன. எரிபொருள் தட்டுப்பாடு, வங்கி வட்டி விகித உயர்வு மற்றும் விண்ணை தொடப்போகும் பணவீக்கம் என பலமுனை தாக்குதல்களை அந்நாட்டு மக்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இந்த நெருக்கடியிலிருந்து மீள சர்வதேச அளவில் ராஜதந்திர நகர்வுகள் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்கள் தற்போதைய அவசியத் தேவையாக உள்ளன.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
