அதிக வேலை பளு காரணமாக பணி செய்து கொண்டிருந்த வங்கி ஊழியர் ஒருவர் திடீரென சேரில் இருந்து கீழே விழுந்து உயிர் இழந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தனியார் ஐடி நிறுவனங்கள், தனியார் வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைப்பளு அதிகம் இருப்பதன் காரணமாக ஊழியர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள் என்றும், இந்த மன அழுத்தம் காரணமாக சிலர் ரத்த கொதிப்பு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருவதாகவும் கூறப்பட்டு வருகிறது.
அந்த வகையில், லக்னோவை சேர்ந்த பாத்திமா என்ற பெண், இந்தியாவின் முன்னணி தனியார் வங்கியில் கூடுதல் துணைத் தலைவராக பணிபுரிந்து கொண்டிருக்கும் நிலையில், அவருக்கு கடந்த சில நாட்களாக வேலைப்பளு அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று, அவர் பணி செய்து கொண்டிருக்கும் போது திடீரென சேரில் இருந்து கீழே விழுந்ததாகவும், இதனை அடுத்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகவும் மருத்துவர்கள் கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பல தனியார் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு அதிக வேலைப்பளுவை கொடுப்பதால், ஊழியர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள் என்றும், ‘டார்கெட்’ என்ற ஒன்று ஊழியர்களுக்கு பெரும் பிரச்சினையாக இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. இது ஒரு ஈடு செய்ய முடியாத இழப்பு என்றும், ஊழியர்களிடம் ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே வேலை வாங்க வேண்டும் என்றும் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் இது குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.