வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்யும் நாள் நெருங்கியுள்ள நிலையில், பல்வேறு தரப்பினர் வருமான வரி தாக்கல் செய்வதை எளிதாக்க ஒரு ஆடிட்டரை அணு வருகின்றனர். ஆனால் வருமான வரித்துறையின் எளிமையான ஆன்லைன் இ-ஃபைலிங் தளத்தால் மற்றும் டிஜிட்டல் சரிபார்ப்பு முறைகளால், தற்போது ITR தாக்கல் செய்வது மிகவும் எளிதாக இருக்கிறது.
ஆடிட்டர் உதவியின்றி வருமான வரி தாக்கல் செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.
ஸ்டெப் 1: தேவையான ஆவணங்களை முதலில் தயார் செய்து வைத்து கொள்ளவும், அந்த ஆவணங்கள் பின்வருவன:
பான் மற்றும் ஆதார் கார்டுகள்
உங்கள் நிறுவனம் வழங்கிய Form 16
பே ஸ்லிப்
வங்கி கணக்கு ஸ்டேட்மென்ட்
Form 26AS மற்றும் வருடாந்திர தகவல் அறிக்கை
மூலதன ஆதாய (Capital Gains) விவரங்கள், இருந்தால்
வரி விலக்கு பெறும் முதலீட்டு ஆதாரங்கள் (ELSS, LIC, PPF போன்றவை)
வீட்டு வாடகை ரசீது (HRA கோர விரும்பினால்)
வீட்டுக்கடன் வட்டியின் சான்று (Home Loan Interest Certificate) இருந்தால்
ஸ்டெப் 2: வருமான வரி தளத்தில் உள்நுழைய அதிகாரப்பூர்வ வருமான வரி இணையதளத்தில் சென்று, உங்கள் PAN/Aadhaar மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி உள்நுழையவும். முதல் முறையாக பயன்படுத்திருக்கிறீர்கள் என்றால் பதிவு செய்யவும்.
ஸ்டெப் 3: பொருந்தக்கூடிய ITR படிவத்தைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் வருமான ஆதாரத்தை பொருத்து தேவையான ITR படிவத்தை தேர்வு செய்யவும்:
ITR-1 – ₹50 லட்சத்திற்குள் சம்பளம் பெறுவோருக்கு
ITR-2 – மூலதன ஆதாயம், ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகள், வெளிநாட்டு வருமானம் உள்ளவர்களுக்கு
ITR-3 – தொழில்முறை அல்லது வணிக வருமானம் உள்ளவர்களுக்கு
ITR-4 – கணிப்பீட்டு வருமான (Presumptive Income – 44AD, 44ADA) உள்ளவர்களுக்கு
மேற்கண்ட நான்கில் இருந்து உங்களுக்கு பொருந்தும் சரியான படிவத்தை தேர்வு செய்யவும்.
ஸ்டெப் 4: ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் முறையில் தாக்கல் செய்ய நீங்கள் ITR படிவத்தை நேரடியாக தளத்தில் நிரப்பலாம் அல்லது JSON பயனர் கருவியை பதிவிறக்கம் செய்து ஆஃப்லைன் முறையில் தயார் செய்து பின்னர் பதிவேற்றலாம்.
தளத்தில், உங்கள் Form 26AS மற்றும் AIS தரவுகளின் அடிப்படையில் சம்பளம், TDS, வட்டி வருமானம் ஆகிய விவரங்கள் தானாக நிரப்பப்படும். இவற்றை சரிபார்க்கவும்.
ஸ்டெப் 5: அனைத்து வருமான மூலங்களையும் குறிப்பிடவும். உங்கள் சம்பள வருமானத்திற்கு கூடுதலாக, கீழ்க்கண்டவற்றையும் சேர்க்க மறக்காதீர்கள்:
சேமிப்பு மற்றும் நிலையான வைப்பு (Fixed Deposit) வட்டி
வீட்டு வாடகை வருமானம் (இருந்தால்)
மூலதன ஆதாயம் (கோத்துகள், மியூச்சுவல் பண்டுகள், சொத்து விற்பனை)
சுயதொழில் / கூடுதல் வருமானம்
வெளிநாட்டு வருமானம் (இருந்தால்)
சில வருமானங்களை மறைக்க வேண்டாம்; வருமான வரித்துறை எப்படியும் அதை கண்டுபிடித்து பின்னர் நோட்டீஸ் அனுப்பும்.
ஸ்டெப் 6: டிடெக்ஷன் (Deductions) மற்றும் விலக்கு (Exemptions) கோரவும்
கீழ்க்கண்ட பிரிவுகளின் கீழ் உங்களுக்குரியவற்றை சரியாக தேர்வு செய்யவும்.
80C – PPF, ELSS, LIC முதலீடுகள் (₹1.5 லட்சம் வரை)
80D – மருத்துவக் காப்பீடு பிரீமியம்
80G – தகுதியான தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கும் நன்கொடைகள்
24(b) பிரிவு – வீட்டு கடன் வட்டி (₹2 லட்சம் வரை)
மேற்கூறியவற்றை பயன்படுத்துவதாக இருந்தால் அதற்காக ஆவணங்களை வைத்திருக்கவும்.
ஸ்டெப் 7: எல்லாவற்றையும் ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்து அதன்பின் சமர்ப்பிக்கவும்
வருமான வரி தாக்கல் செய்யும் முன் “Preview Return” மூலம் உங்கள் உள்ளீடுகளை சரிபார்க்கவும். தவறுகள் அல்லது நிரப்பப்படாத விவரங்கள் உள்ளதா என சரி பார்க்கவும். ரீபண்ட் தொகை பெற வங்கி கணக்கு விவரங்கள் சரியாக உள்ளதா? என்பதையெல்லாம் சரிபார்த்துவிட்டு அதன் பின்னர், Submit கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 8: ITR ஐ மின்னணு முறையில் சரிபார்க்க (E-Verify) செய்யவும் ITR தாக்கல் செய்த பிறகு, 30 நாட்களுக்குள் மின்னணு முறையில் சரி பார்த்தல் அவசியம்.
ஸ்டெப் 9: ITR தாக்கல் நிலையை கண்காணிக்க e-Filing தளத்தில் பார்க்கலாம். வருமான வரித்துறையிடம் இருந்து அறிவிப்பு வந்தால், “e-Proceedings” பகுதியில் இருக்கும் தகவல்களை சரிபார்த்து உடனடியாக பதிலளிக்கவும்.
மேலும் சாதாரண சம்பளதாரர்கள் ஆடிட்டர் இன்றி வருமான வரி தாக்கல் செய்யலாம். ஆனால், மூலதன ஆதாயம் தொடர்பான சிக்கலான கணக்கீடுகள், வெளிநாட்டு சொத்துகள் / வருமானம், தொழில்முறை / வணிக வருமானம், வாரிசு சொத்துக்கள் / அறக்கட்டளைகள் (Trust) தொடர்பான தாக்கல் ஆகியவைகளுக்கு ஒரு நல்ல ஆடிட்டர் மூலம் வருமான வரி தாக்கல் செய்வதே சிறந்தது.