isha

1000 ரூபாய் உரிமைத்தொகை வாங்கும் மகளிர்களுக்கு மட்டும் தான் கோடையா? மற்ற மகளிர்கள் ஊட்டி, கொடைக்கானலில் இருக்கிறார்களா? அவர்களுக்கு எல்லாம் கோடைக்கால சிறப்பு தொகை கிடையாதா? அட்லீஸ்ட் அந்த 2000 ரூபாயை எல்லா மகளிருக்கும் கொடுத்திருக்கலாமே.. புலம்பும் பொதுமக்கள்.. ஒருவேளை இனிமேல் கொடுப்பார்களோ?

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், ஆளும் திமுக அரசு ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தின் கீழ் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நேற்று, சுமார் 1.31 கோடி மகளிர் பயனாளிகளின்…

5000

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், ஆளும் திமுக அரசு ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தின் கீழ் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நேற்று, சுமார் 1.31 கோடி மகளிர் பயனாளிகளின் வங்கி கணக்கில் தலா 5,000 ரூபாய் வரவு வைக்கப்பட்டது. இதில் பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான தலா 1,000 ரூபாய் முன்பணமாகவும், அதனுடன் கூடுதலாக 2,000 ரூபாய் ‘கோடைக்கால சிறப்புத் தொகை’யாகவும் வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தால் பணம் வழங்குவதில் சிக்கல் ஏற்படும் என்பதால், முன்கூட்டியே இந்த தொகை வழங்கப்பட்டதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.

இருப்பினும், இந்த அறிவிப்பு ஒருபுறம் மகிழ்ச்சியை தந்தாலும், மறுபுறம் பொதுமக்களிடையே பெரும் விவாதத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஏற்கனவே 1,000 ரூபாய் உரிமைத்தொகை பெற்று வரும் மகளிர்களுக்கு மட்டுமே இந்த 2,000 ரூபாய் கோடைக்கால சிறப்புத்தொகை வழங்கப்பட்டுள்ளது. இதனால், தகுதி வரம்பு அல்லது பல்வேறு காரணங்களால் உரிமைத்தொகை பெறாத லட்சக்கணக்கான பெண்கள், “இந்தக் கோடை வெயில் எங்களுக்கு மட்டும் கிடையாதா? எங்களுக்கு மட்டும் விலைவாசி உயர்வு பாதிக்காதா?” என்று சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தமிழகத்தில் உள்ள அனைத்து மகளிரும் கோடைக்கால வெப்பத்தாலும், அதனால் ஏற்படும் பொருளாதார சுமைகளாலும் சமமாக பாதிக்கப்படுகின்றனர் என்பது பொதுமக்களின் வாதமாக உள்ளது. ஊட்டி, கொடைக்கானல் போன்ற குளிர்ந்த பிரதேசங்களில் இருப்பவர்களுக்கு வேண்டுமானால் வெயில் தெரியாமல் இருக்கலாம், ஆனால் தமிழகத்தின் சமவெளிப் பகுதிகளில் வாழும் அனைத்து பெண்களும் இந்த கோடையை சந்திக்கத்தான் செய்கிறார்கள். அப்படியிருக்கையில், ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் ‘கோடை சிறப்பு நிதி’ என்று பிரித்து பார்ப்பது எந்த வகையில் நியாயம் என்ற குமுறல் பரவலாக எழுந்துள்ளது.

அரசியல் ரீதியாக பார்த்தால், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக ஆகியவை இந்த அதிரடி பணப்பரிமாற்றத்தை கடுமையாக விமர்சித்துள்ளன. “இப்போதுதான் கோடைக்காலம் வருகிறதா? கடந்த ஆண்டுகளில் வெயில் அடிக்கவில்லையா?” என்று விஜய் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தேர்தல் தோல்வி பயத்தின் காரணமாகவே அரசு இப்படி அவசர அவசரமாக பணத்தை வாரி வழங்குகிறது என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் தகுதியுள்ள அனைத்து ரேஷன் கார்டு வைத்திருக்கும் பெண்களுக்கும் மாதம் 2,000 ரூபாய் வழங்குவோம் என்று வாக்குறுதி அளித்துள்ளார்.

பொதுமக்களின் மற்றொரு பெரிய எதிர்பார்ப்பு என்னவென்றால், உரிமைத்தொகை பெறாத ஏனைய மகளிர்க்கும் குறைந்தபட்சம் இந்த 2,000 ரூபாய் கோடைக்கால உதவியையாவது அரசு வழங்கியிருக்கலாம் என்பதுதான். வரி செலுத்துபவர்கள் அல்லது வசதியானவர்கள் என்ற அடிப்படையில் உரிமைத்தொகை மறுக்கப்பட்டிருக்கலாம், ஆனால் ஒரு சிறப்புத்தொகை என்று வரும்போது அது ‘அனைத்து மகளிர்’ என்ற அடிப்படையில் இருந்தால் இன்னும் வரவேற்பை பெற்றிருக்கும். தற்போது வழங்கப்பட்டுள்ள இந்த 5,000 ரூபாயால் விடுபட்ட மகளிரின் குடும்பங்களில் ஒருவித ஏமாற்ற உணர்வே மிஞ்சியுள்ளது.

எதிர்காலத்தில் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படுமா அல்லது விடுபட்டவர்களுக்கு வேறு ஏதேனும் சலுகைகள் அறிவிக்கப்படுமா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், மற்ற மகளிரின் மனக்குறையை போக்க அரசு புதிய அறிவிப்புகளை வெளியிடுமா அல்லது இந்த 2,000 ரூபாய் உயர்வு என்பது அடுத்த முறை ஆட்சிக்கு வந்தால் மட்டுமே சாத்தியமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தற்போது வழங்கப்பட்டுள்ள 5,000 ரூபாய் என்பது தேர்தல் களத்தில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியிருப்பது மட்டும் உறுதி.