தமிழக அரசியல் களம் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை நோக்கி ஒரு மாபெரும் விறுவிறுப்புடன் நகர்ந்து கொண்டிருக்கிறது. இதில் வேடிக்கை என்னவென்றால், பல ஆண்டுகளாக அரசியலில் ஊறிப்போன ஓபிஎஸ், டிடிவி தினகரன், பிரேமலதா விஜயகாந்த், மற்றும் ராமதாஸ், அன்புமணி போன்ற அனுபவம் வாய்ந்த தலைவர்கள் நடிகர் விஜய்யின் அரசியல் வருகையை இன்னும் ஒரு சினிமா கவர்ச்சியாகவே பார்க்கின்றனர். இவர்கள் ஒருபுறம் “விஜய் இன்னும் பழுக்காத காய்” என்று விமர்சித்தாலும், மறுபுறம் விஜய் எங்கே தங்கள் வாக்கு வங்கியை பிரித்துவிடுவாரோ என்ற அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்த தலைவர்கள் விஜய்யை நம்பத் தயங்குவது ஒருபுறமிருக்க, டெல்லி மேலிடமான ராகுல் காந்தியும் சோனியா காந்தியும் கூட ஒரு இன்னும் முழுமையாக விஜய்யை நம்பலாமாஅ? வேண்டாமா? என்ற சந்தேகத்துடன் விஜய்யை அணுகுகின்றனர். காங்கிரஸ் கட்சிக்குத் தமிழகத்தில் ஒரு புதிய ரத்தம் தேவைப்பட்டாலும், ஒரு நடிகரை முழுமையாக நம்பித் தங்கள் பாரம்பரியக் கூட்டணியை உடைக்க அவர்கள் இன்னும் தயாராகவில்லை.
காங்கிரஸ் ஒருவேளை தனது வியூகத்தை மாற்றி தவெக பக்கம் வந்தாலும், திமுக கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி போன்ற அமைப்புகள் விஜய்யை எப்படி ஏற்றுக்கொள்ளும் என்பது ஒரு பெரிய மில்லியன் டாலர் கேள்வி. திருமாவளவன் போன்ற தலைவர்கள் சமூக நீதி மற்றும் சித்தாந்த ரீதியான அரசியலை முன்னிறுத்துபவர்கள். வெறும் திரைப்பிரபல்யத்தை மட்டும் வைத்துக்கொண்டு விஜய் முன்னெடுக்கும் அரசியலை இவர்கள் நம்புவார்களா என்பது சந்தேகம் தான். பழைய அரசியல் கணக்குகளையும், கூட்டணி கட்டாயங்களையும் வைத்து பார்க்கும் போது, அரசியல் மேடைகளில் விஜய்க்கு இன்னும் ஒரு ‘அந்நியன்’ அந்தஸ்தே நீடிக்கிறது. ஆனால், இங்கேயும் ஒரு மிகப்பெரிய முரண்பாடு நிலவுகிறது. அரசியல்வாதிகள் நம்ப மறுக்கும் விஜய்யை தமிழக மக்கள், குறிப்பாக இளைஞர்களும் பெண்களும் ஒரு விடிவெள்ளியாக பார்க்க தொடங்கிவிட்டனர்.
தமிழகத்தின் தற்போதைய சூழலில், “மாற்றம்” என்பது ஒரு முழக்கமாக மட்டுமல்லாமல், ஒரு அவசியமாக மாறியுள்ளது. இரண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியையும் மாறி மாறி பார்த்து சலித்துப்போன நடுநிலை வாக்காளர்கள், இந்த முறை ஒரு மாற்று சக்தியை தீவிரமாக தேடுகின்றனர். இந்த ‘நடுநிலை’ வாக்காளர்கள் தான் தேர்தலின் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் சக்திகள். இவர்கள் விஜய்யின் நேர்மை மற்றும் அவரது தெளிவான கொள்கை விளக்கங்களை நம்புகின்றனர். அரசியல் கட்சித் தலைவர்கள் விஜய்யை ஒரு ‘பயிற்சி பெறாத வீரனாக’ பார்க்கும்போது, பொதுமக்கள் அவரை ஒரு ‘புதிய நம்பிக்கையாக’ பார்க்கின்றனர். தலைவர்களின் நம்பிக்கையை விட மக்களின் நம்பிக்கை தான் ஒரு ஜனநாயகத்தில் உண்மையான அதிகாரம் என்பதை பல அரசியல்வாதிகள் உணர தவறிவிடுகின்றனர்.
குறிப்பாக, முதல்முறை வாக்காளர்களான 18-25 வயதுடைய இளைஞர்கள் விஜய்யின் வருகையை தங்களுக்கு கிடைத்த ஒரு அரசியல் அதிகாரமாகவே கருதுகின்றனர். சமூக வலைதளங்களில் விஜய்க்கு ஆதரவாக பரவி வரும் ‘விசில்’ சத்தம், தேர்தல் களத்தில் ஒரு நிஜ புரட்சியை ஏற்படுத்தும் வலிமை கொண்டது. அதேபோல், குடும்ப தலைவிகள் மற்றும் பெண்கள் விஜய்யின் கண்ணியமான அணுகுமுறையையும், அவர் முன்வைக்கும் பெண்கள் பாதுகாப்பு குறித்த திட்டங்களையும் பெரிதும் நம்புகின்றனர். “அரசியல்வாதிகள் எங்களை ஏமாற்றிவிட்டார்கள், இப்போது ஒரு தம்பி வந்திருக்கிறார்” என்ற மனநிலை கிராமப்புற பெண்களிடையே பரவலாக காணப்படுகிறது. இந்த மக்கள் சக்தியை புரிந்துகொள்ளாத தலைவர்கள், வரும் தேர்தலில் ஒரு மிகப்பெரிய அதிர்ச்சியை சந்திக்க நேரிடும்.
அரசியல் கூட்டணிகள் என்பவை பெரும்பாலும் “கொடுக்கல்-வாங்கலில்” முடிந்துவிடுகின்றன. ஆனால், ஒரு கட்சிக்கும் மக்களுக்குமான தொடர்பு என்பது “நம்பிக்கையில்” பிறப்பது. விஜய் தனது மாநாடுகள் மற்றும் மக்கள் சந்திப்புகள் மூலம் மக்களுடன் ஒரு நேரடித் தொடர்பை ஏற்படுத்தியுள்ளார். இந்தத் தொடர்பு, டெல்லி மேலிடமோ அல்லது உள்ளூர் கூட்டணிக் கட்சிகளோ தரும் ஆதரவை விடப் பல மடங்கு வலிமையானது. தலைவர்கள் விஜய்யை நம்பாததற்குப் பின்னால் ஒருவிதப் பொறாமையும், தங்கள் பிடி நழுவிவிடுமோ என்ற பயமும் கலந்திருக்கிறது. ஆனால், மக்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் “ஒரு வாய்ப்பு கொடுத்து பார்ப்போமே” என்ற முடிவுக்கு வந்துவிட்டதாகவே கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
இறுதியாக, 2026 தேர்தல் என்பது அரசியல்வாதிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான ஒரு யுத்தமாக மாறப்போகிறது. ஒருபுறம் அனுபவமும் கூட்டணியும் கொண்ட பழைய தலைவர்கள், மறுபுறம் மக்கள் சக்தியையும் இளைஞர் பலத்தையும் நம்பி களமிறங்கும் விஜய். ராகுல், சோனியா முதல் ராமதாஸ் வரை அனைவரும் விஜய்யை ஒரு திரை மறைவு சக்தியாக கருதினாலும், வாக்குச்சாவடியில் மக்கள் அடிக்கப்போகும் ‘விசில்’ சத்தம் அனைத்து கணக்குகளையும் தவிடு பொடியாக்கும். மக்கள் ஒருவரை நம்பிவிட்டால், அங்கே கூட்டணிகளும் ஜாதிகளும் எடுபடாது. 2026-ல் தமிழக அரசியல் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதும், அதில் மக்கள் சக்தியே மகுடம் சூட்டும் என்பது மட்டும் உறுதி.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
